நன்றி தினமலர்
ராமர் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறிய மத்திய அரசு திடீர் பல்டி : ராமர் பால விவகாரத்தில் புது மனு தாக்கல் செய்ய முடிவு
புதுடில்லி : `ராமரும், ராமாயண பாத்திரங்களும் உண்மையானவை என்பதற்கு சரித்திரபூர்வமான ஆதாரங்கள் இல்லை' என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறிய மத்திய அரசு, தனது நிலையிலிருந்து நேற்று `திடீர் பல்டி' அடித்தது.
சேது சமுத்திர திட்டத்தை மேற்கொண்டால், ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிராக இந்திய தொல் பொருள் ஆய்வு துறை நேற்று முன்தினம் தாக்கல் செய்த பதில் மனுவில், `ராமரும், ராமாயண பாத்திரங்களும் உண்மையானவை என்பதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் இல்லை' என்று தெரிவித்து இருந்தது.
இது, பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசினார். மத்திய அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை மேற்கொள்ளவும் பா.ஜ., தயாரானது. இதையடுத்து மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் நேற்று முன்தினம் இரவு அத்வானியுடன் பேசினார்.
இந்த சூழ்நிலையில், இந்த விவகாரத் தில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று காலை தலையிட்டார். இந்திய தொல்பொருள் ஆய்வு துறை தாக்கல் செய்த பதில் மனு எந்த அடிப்படையில் உருவாக்கப் பட்டது என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சியும் முயற்சி எடுத்தது. சோனியா விளக்கம் கேட்டதை காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திரிவேதியும் உறுதி செய்தார். இதையடுத்து மத்திய அரசின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் இது குறித்து நிருபர் களிடம் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை தாக்கல் செய்த மனு தவறான கருத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்திய கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் உட்கருத்தாக ராமர் கடவுள் அமைந்துள்ளார். இதை விவாதத்துக்கு அனுமதிக்க முடியாது. எனவே இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வாசகங்கள் நீக்கப்பட்டு புதிய மனு நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இந்த விஷயம் தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கலாசார துறை செயலருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த விஷயத்தில் யார் தவறு செய்தனர் என்பதை தெரிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. இமயமலை, கங்கை நதி போல தான் ராமரும். ராமர் இருக்கிறாரா என்பது குறித்து சந்தேகம் எழுப்ப முடியாது. ராமர் பாலம் குறித்து கருத்து கூற நான் நிபுணர் அல்ல. ஆனால், ராமர் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு அமைச்சர் பரத்வாஜ் கூறினார்.
மத்திய அமைச்சர் தாஸ் முன்ஷி கூறுகையில், " ராமர் மதிப்பை குறைத்தது பா.ஜ., கட்சி தான். ராமரின் அம்பு அவர்களை அழித்து விடும். இந்து மக்கள் மட்டுமல்ல; அனைவரின் இதயங்களிலும் ராமர் வாழ்ந்து வருகிறார்," என்றார்.
அத்வானி கோபம்: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கடும் கோபம் கொண்டுள்ளார். நேற்று அவர் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மனுவுக்கு யார் ஒப்புதல் கொடுத்தது என்பது குறித்து கண்டறிந்து அவர் மீது பொறுப்பை சுமத்த வேண்டும். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் மேற்கொள்ளப்படும் போது ராமர் பாலம் காப்பாற்றப்பட வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்த மனு கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டது. சர்ச்சைக்குரிய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். மனு மீது பிரதமர் மன்மோகனுக்கும், சோனியாவுக்கும் பொறுப்பு உள்ளது. இதை தட்டிக் கழித்து விட முடியாது. போபாலில் அடுத்த மாதம் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில் இந்த மனு குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அத்வானி கூறினார்.
பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், `சர்ச்சைக்குரிய மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். ராமரும், கிருஷ்ணரும் இல்லை என்று கூறினால், அரசியல் சட்டத்தில் அவர்களின் படம் ஏன் இடம் பெற வேண்டும்? தேச தந்தை மகாத்மா காந்தி ராமராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என ஏன் நமக்கு அழைப்பு விடுத்தார்? இந்த மனு தாக்கல் செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த அமைச்சர் நீக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.
ஷ்ரீஷ்ரீ ரவிசங்கர்ஜி கூறுவது என்ன? : இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஏற்படுத்திய சர்ச்சை குறித்து வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஷ்ரீ ஷ்ரீ ரவிசங்கர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என அழைக்கப்படுபவை. இதிகாசம் என்றால், `நடந்தவை' என்று பொருள். ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி ராமர் வாழ்ந்துள்ளார் என்பதே இதற்கு பொருள். முனிவர்கள் பலர் புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு விளக்கியுள்ளனர். `புராணங்கள் என்பது கற்பனையானவை; எடுத்துக்காட்டு கதைகள். இதிகாசங்கள் என்பவை, உண்மையில் நடந்தவை' என அவர்கள் கூறியுள்ளனர். ராமர் வாழ்க்கையில் பல அதிசயிக்கத்தக்க விஷயங்கள் நடந்துள்ளன. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதற்காக ராமரை கற்பனையான பாத்திரம் என்று கூறி விட முடியாது. மத தலைவர்கள் பலரது வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றையெல்லாம் கற்பனை என்று ஒதுக்கி விட முடியுமா? ராமரை கற்பனையான பாத்திரம் என்று நாம் ஒதுக்கி விட்டால், இயேசு, மோசஸ், முகமது நபிகள் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த அதிசய சம்பவங்களையும் ஒதுக்கி தள்ள வேண்டி இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment