Tuesday, September 25, 2007

தமிழகத்தில் ரூ.2 கோடியில் ஸ்ரீ ராமர் கோயில் திருப்பணி: பிப்.18-ல் கும்பாபிஷேகம்

நன்றி தினமணி
அனைவரும் வருக

ரூ.2 கோடியில் ஸ்ரீ ராமர் கோயில் திருப்பணி: பிப்.18-ல் கும்பாபிஷேகம்

கோவை, செப். 25: கோவை ராம் நகரில் உள்ள 70 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோயிலில் (ராமர் கோயில்) ரூ.2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜகோபுரம் அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்.18-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ராம் நகரில் சுமார் ஒன்றரை ஏக்கரில் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் ராமர் சன்னதி, விநாயகர் சந்நிதி, ஆஞ்சநேயர் சந்நிதி, நவக்கிரக சந்நிதி என தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகள், ஜோதிடர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பணி ஆலோசனைக் குழு என்வி நாகசுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் தலைவர் ஆடிட்டர் வெங்கட்ராமன், மேலாளர் பாலசுப்பிரமணியம், கட்டடக் கலை வல்லுநர் ரமணி சங்கர் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

ரூ. 2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

51 அடியில் ராஜகோபுரம்: ஸ்ரீகோதண்ட ராமஸ்வாமி கோயிலின் முகப்பில் 51 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்படுகிறது. மண்டபம், சந்நிதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. கலையம்சங்களுடன் விமானங்கள், சிற்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வாலாஜாபாத் சிற்பி: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண ஸ்தபதி தலைமையில் 50 பேர் தினமும் திருப்பணி வேலைகளை செய்து வருகின்றனர்.

இவர் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். மும்பை, நாக்பூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோயில் திருப்பணிகளை செய்துள்ளார். மூதாதையர்களும் கோயில் திருப்பணியைச் செய்தவர்கள்.

கடந்த 2005 முதல் ஸ்ரீகோதண்ட ராமஸ்வாமி கோயிலுக்கான சிற்பங்களை வாலாஜாபாத்தில் செதுக்கி வருகின்றனர்.

மும்பையில் திருச்செம்பூர் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியை கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். கோயில் கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்தும் கருங்கற்கால் அமைக்கப்படுகிறது.

திருவள்ளூரில் மாரியம்மன் கோயில், பவானியில் சங்கமேஸ்வரர் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டதாக ராமகிருஷ்ண ஸ்தபதி குறிப்பிட்டார்.

இன்று கொழுக்கட்டை ஹோமம்: இக்கோயிலில் 1008 கொழுக்கட்டை ஹோமம் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நடக்கிறது.

No comments: