Thursday, September 20, 2007

நெல்லையில் அத்வானி பேசியது

நன்றி தட்ஸ்டமில்

சேது திட்டத்தை விட ராமர் பாலத்தை இடிக்கவே திமுக ஆர்வம் - அத்வானி
வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007


திருநெல்வேலி:

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதை விட ராமர் பாலத்தை இடிப்பதில் தான் திமுக தீவிரமாக உள்ளது என்று பாஜக தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் நேற்று பாஜக பொதுக் குழுக் கூட்டம் முடிந்த பின் இரவில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அத்வானி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், காங்கிரஸை எதிர்க்கிற கம்யூனிஸ்டுகள் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படும். கம்யூனிஸ்டுகளுக்கு நிலையான கொள்கை கிடையாது.

சீனாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை வரவேற்பார்கள். அமெரிக்கா என்றால் எதிர்பார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்டிருந்தோம். பொக்ரான் அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது. பொருளாதார தடையும் விதித்தது. ஆனால் அதற்காக நாம் கவலைப்படவில்லை.

அப்போது மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பொக்ரானில் நாம் குண்டு வெடித்தால் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் என்றார். ஆனால் நாம் கவலைப்படவில்லை.

ஆனால் இப்போது நாம் அணு குண்டு சோதனையை நடத்தினால், ஏற்கனவே நாம் வாங்கி வைத்துள்ள மூலப் பொருட்களையும், அணுமின் உற்பத்திப் பொருட்களையும் அமெரிக்காவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது.

இந்த விஷயத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் சக்தியாக இடதுசாரிகள் உருவெடுத்துள்ளன.

அடுத்து ராமர் பாலம். உண்மையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் திமுக ஆர்வமாக இல்லை. மாறாக ராமர் பாலத்தை இடிப்பதில்தான் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

மத்திய அரசு ராமர் பாலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராமர் இல்லை என்று கூறியுள்ளது. இது மிகுந்த வேதனை தருகிறது.

இந்த பத்திரத்தின் நகலைப் பார்த்தவுடன் நான் மனம் வேதனைப்பட்டு பிரமதரை நேரில் சந்தித்து பேசினேன். எனது கோபத்தை அவரிடம் தெரிவித்தேன்.

அவரும் பதட்டப்பட்டு, இப்படி நடந்திருக்கக் கூடாது என்று கூறி சம்பந்தப்பட்ட அமைச்சருக்குப் போன் செய்து அதை வாபஸ் பெறச் சொன்னார்.

மத்திய அரசின் வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. மற்ற மதத்தைப் பற்றி இவர்களால் எதுவும் பேச முடியாது. மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்டு இந்துக்கள் மனம் புண்படும்படியாக நடப்பது போலி மதச்சார்பின்மையாகும்.

இதற்காக மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் நாட்டு மக்களிடம், இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாம் இருக்கும் வரை ராமர் பாலத்தை யாராலும் தொடக் கூட முடியாது. ராமர் பாலத்தைக் காக்க பாஜக தொடர்ந்து பாடுபடும்.

விரைவில் தேர்தல் வரும். இப்போதிலிருந்தே பாஜகவினர் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். பூத் கமிட்டிகள் அமைக்கும் பணியை இப்போதே தொடங்க வேண்டும் என்றார் அத்வானி.

முன்னதாக அத்வானி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு ராமஜென்ம பூமி இயக்கம் தீவிரமாக இருந்தபோது கூட ராமர் இருந்தாரா என்று அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கேள்வி எழுப்பவில்லை. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என்றுதான் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இப்போது ராமர் பற்றி மத்திய அரசு தெரிவித்திருப்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

முன்பு காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தபோதெல்லாம் ராமராஜ்ஜியம் பற்றி எப்போதும் பேசுவார்கள். இப்போது நிலை மாறி விட்டதால் ஹே ராம் என்ற வாசகத்தை காந்தி சமாதியிலிருந்து அவர்கள் அகற்றுவார்களா என்றார் அத்வானி.

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அத்வானி:

நெல்லை பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அத்வானி நேற்றிரவு கார் மூலம் மதுரை வந்தார்.

மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை 7 மணிக்கு அத்வானி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அத்வானிக்கு மரியாதைகள் செய்யப்பட்டன.

பின்னர் அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்காக சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட்டன.

பின்னர் வெளியே வந்த அத்வானி நிருபர்களிடம் பேசுகையில்,

2வது முறையாக இப்போது மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டுள்ளேன். மீனாட்சி அம்மன், சிவபெருமானின் அருளை பெறுவதற்காக வந்துள்ளேன்.

இந்தியா உலக அளவில் முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

அவருடன் பாரதீய ஜனதா தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், இல.கணேசன், திருநாவுக்கரசர், மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

பின்னர் அத்வானி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

அத்வானி வருகையை யொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments: