Tuesday, September 25, 2007

சிங்கப்பூரில் மத நல்லிணக்கத்துக்கு இந்துகோவில்கள்

சிங்கப்பூர் மூன்று இந்து கோவில்களில் பல மதத்தினர் இணைந்து வழிபாடு!
சிங்கப்பூர் : சிங்கப்பூரிலுள்ள மூன்று இந்து கோவில்களில் சீன மற்றும் புத்த சமய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, பல மதத்தினர் ஒரே இடத்துக்கு வந்து ஒன்றாக வழிபடுகின்றனர். இதன் மூலம் பல மத ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக அந்நாடு விளங்குகிறது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் லில்லி காங்க் இது பற்றி கூறியதாவது:சிங்கப்பூர் நாடு பல மதங்களை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. சிங்கப்பூரின் மத்திய பகுதியில் கடந்த 1870ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலின் அருகே சீன கோவில் ஒன்றும் உள்ளது. 1991ம் ஆண்டு சீனர்கள் வழிபடும் தெய்வமான, "குவான்யீன்' என்ற கடவுளின் சிலை அக்கோவிலில் வைக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.சிங்கப்பூரில் உள்ள சங்கி என்ற கிராமத்தில் 1940ம் ஆண்டு ராமர் கோவில் அமைக்கப்பட்டது. முதலில் சிறிய குடிலில் அமைக்கப்பட்ட இக்கோவில் தற்போது ஏழாயிரம் சதுரடி கொண்ட வளாகமாக விரிவடைந்துள்ளது. இந்த கோவிலில் 6.4 அடி உயர அனுமான் சிலை உள்ளது. தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான சிலை இங்கு தான் உள்ளது. இந்த கோவிலில் "குவான்யீன்' சிலையும், புத்தர் சிலையும் உள்ளது. ராமர் கோவிலுக்கு சீனர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இந்து பண்டிகைகளின் போது சீனர்கள் சிலர் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் உள்ள பர்கிட் டிமான் என்ற இடத்தில் முருகன் மலைக் கோவில் உள்ளது. 1962ம் ஆண்டு உருவான இக்கோவிலில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் வேண்டுகோளையடுத்து இக்கோவிலில் "குவான்யீன்' சிலை வைக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் புத்த கோவிலின் அருகே இந்து கோவிலோ அல்லது முஸ்லிம்களின் மசூதியின் அருகே தேவாலாயமோ கட்டப்பட்டுள்ளதை பார்ப்பது அரிதானது அல்ல. சிங்கப்பூரில் மத விஷயத்தில் மக்களிடையே சகிப்புத்தன்மை காணப்படுகிறது. பல மதங்களின் சிலைகள் ஒரே இடத்தில் இருப்பது அதை பிரதிபலிப்பதாக உள்ளது.இவ்வாறு பேராசிரியர் லில்லி காங்க் கூறினார்.


நன்றி தினமலர்

No comments: