Wednesday, September 19, 2007

செல்வி வீட்டை நாங்கள் தாக்கவில்லை - வி.எச்.பி.

புதன்கிழமை, செப்டம்பர் 19, 2007

பெங்களூர்:

முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டில் தாக்குதல் மற்றும் தமிழக அரசுப் பேருந்தை தீவைத்து எரித்தது விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அல்ல என்று அந்த அமைப்பின் பெங்களூர் நகர தலைவர் விஜயக்குமார் ரெட்டி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சில சமூக விரோதிகள் தான் காரணம். விஎச்பி எப்போது வன்முறையில் ஈடுபடாது, வன்முறையையும் ஊக்குவிக்காது.

பேருந்து எரிப்பு சம்பவத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு விஎச்பி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இதற்கு காரணம் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெட்டி கூறியுள்ளார்.

கருணாநிதி விலக வேண்டும் - இந்து சேனா:

ராமர் குறித்த விவகாரத்தில், ராமர் குறித்து கருத்து தெரிவித்ததற்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று ராஷ்ட்ரீய இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக முதல்வருக்கு இந்துக்களின் உணர்வுகளை மதிக்க தெரியவில்லை. ராமர் பாலம் குறித்த பிரச்சனையில் அவருடைய பேச்சு இந்துக்களின் புனித உணர்வை அழித்து விட்டது.

எனவே அவர் இதற்கு முழுப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இல்லையேல் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம்.

அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இந்துக்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டு நாங்கள் கண்மூடியிருக்க மாட்டோம்.

பெங்களூரில் நடைபெற்ற இரண்டு தாக்குதல் சம்பவங்களிலும் ஸ்ரீ ராம சேனா அமைப்புக்குத் தொடர்பில்லை என்றார் அவர்.

நன்றி
தட்ஸ்டமில்.காம்

No comments: