Thursday, September 20, 2007

நெல்லையில் அத்வானி பேச்சு - தினமலர்

ராமர் இல்லை என கூறும் மத்திய அரசு காந்தி சமாதியில் "ஹே ராம்' வாசகத்தை நீக்குமா? *நெல்லையில் அத்வானி கேள்வி


திருநெல்வேலி: "ராமர் இல்லை என கூறுபவர்கள், காந்தி சமாதியில் உள்ள "ஹே ராம்' என்ற வாசகத்தை நீக்குவார்களா?' என, பா.ஜ., தலைவர் அத்வானி கேள்வி எழுப்பினார்.

நெல்லையில் நேற்று நடந்த தமிழக பா. ஜ., பொதுக்குழு கூட்டத்தில் அத்வானி பேசியதாவது:

ராமர் பாலம் விஷயத்தில் ராமரும் இல்லை; ராமர் கட்டிய பாலமும் இல்லை என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது. அது சாதாரண அறிக்கையைப் போல அல்ல. அதற்கு எனது எதிர்ப்பை பிரதமருக்கு தெரிவித்தேன். அவர் உடனடியாக சட்ட அமைச்சருக்கு பேசி அதனை திரும்பப் பெறச் செய்தார். ராமர் பாலம் விஷயத்தில் தற்போது மத்திய அமைச்சர்களுக்கு இடையே உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர்களில் ஒருவர் ராமரே இல்லை என்கிறார். இன்னொரு அமைச்சரோ, ராமர் இல்லை என கூறுவதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கோ ராமர் பாலத்தை உடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் உள்ளது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை இல்லை. ராமரே இல்லை என கூறிய பின்னர் இனி தசரா, தீபாவளி என விழாக்கள் கொண்டாடி என்ன பிரயோசனம்.

ராமர் இல்லையென கூறுபவர்கள், ராஜ்காட்டில் காந்தி சமாதியில் எழுதப்பட்டிருக்கும் "ஹே ராம்' என்ற வாசகத்தை நீக்குவார்களா என கேள்வி எழுப்பினேன். ராமர் பால விஷயத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தை திரும்பப் பெற்றது மட்டும் போதாது. அதற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் பகிரங்க பொது மன்னிப்பு கேட்க வேண்டும். தொல்லியல் அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பதிலாக, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் கருணாநிதி ராமர் குறித்து விமர்சித்திருப்பதற்கு, நாளை(இன்று 20ம் தேதி) சென்னையில் பதிலளிக்க உள்ளேன். இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்திரா காந்தி, ஜனநாயகத்தையே நெருக்கடி நிலைக்கு தள்ளினார். அப்போது, ஏராளமான தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர். அன்று ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய காங்கிரசுடன் கருணாநிதி தற்போது கூட்டணி வைத்துள்ளார். இவ்வாறு அத்வானி பேசினார். தொடர்ந்து நிருபர்களிடம், "பார்லிமென்ட்டிற்கு விரைவில் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, போபாலில் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில், தேர்தல் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்படும். முன்னதாக தென்காசியில் இருதரப்பு மோதலில் மூன்று பேர் பலியான இந்து முன்னணியைச் சேர்ந்த குமார் பாண்டியனின் குடும்பத்திற்கு நிதியாக நான்கு லட்சம் ரூபாய் தரப்படும் என அறிவித்து, குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத்தேவரிடம் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை அத்வானி வழங்கினார். சொர்ணத்தேவர் மேடையில் பேசுகையில், ""நான் இதுவரை காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட நிர்வாகியாக இருந்தேன். ராமரே இல்லை என கூறும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது விலகுகிறேன்,'' என்றார்.

No comments: