Saturday, September 22, 2007

பெங்களூர் பஸ் எரிப்பு: பலியானவர் நெல்லை கூலித் தொழிலாளி!!

இந்த கொடுமையை செய்தவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக பொதுமக்களை வேட்டையாடும் இந்த இழிபிறவிகளுக்கு கொடுக்கும் தண்டனையில் எவனும் இது போல செய்யலாம் என்று சிந்திகக்கூட கூடாது.

==

நன்றி தட்ஸ்டமில்

பெங்களூர் பஸ் எரிப்பு: பலியானவர் நெல்லை கூலித் தொழிலாளி!!
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2007


பெங்களூர்:

பெங்களூரில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலியான ஒருவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.



அவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பசாமி ஆவார்.

முதல்வர் கருணாநிதியின் ராமர் குறித்த கருத்துக்களைக் கண்டித்து, பெங்களூரில் உள்ள அவரது மகள் செல்வியின் வீட்டை ஒரு கும்பல் கடந்த 18ம் தேதி இரவு அடித்துத் தாக்கியது. பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது.

அந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் பெங்களூரிலிருந்து சென்னைக்குச் சென்ற தமிழக அரசின் விரைவுப் பேருந்தை, பொம்மனஹள்ளி பகுதியில் தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் பேருந்துக்குத் தீ வைத்தது.

இதில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் யார் என்ற அடையாளம் தெரியாமல் இருந்தது. தற்போது அவர்களில் ஒருவரின் அடையாளம் தெரிந்துள்ளது. அவரது பெயர் கருப்பசாமி.

இவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர். கருப்பசாமிக்கு கல்யாணமாகி கற்பகவல்லி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு மாரிச் செல்வம் (9), காவ்யா (3) என இரு குழந்தைகள் உள்ளனர்.

கருப்பசாமியின் தந்தை மாரியப்ப தேவர், இறந்து விட்டார். தாயார் செல்லத்தாய். 2 தம்பிகளும், ஒரு தங்கையும் உள்ளனர். வாசுதேவநல்லூர், பசும்பொன் விநாயகர் கோவில் தெருவில் குடும்பம் உள்ளது.

ஊரில் கூலி வேலை பார்த்து வந்தார் கருப்பசாமி. அது குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. இதையடுத்து பெங்களூரில் வேலை பார்த்து வரும் பெரியம்மா மகன் அண்ணாதுரையிடம் சென்று அங்கு ஏதாவது வேலை பார்க்கலாம் என முடிவு செய்து சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு முன்புதான் பெங்களூருக்கு வந்துள்ளார் கருப்பசாமி.

இந் நிலையில் கருப்பசாமி சென்னைக்கு ஏன் கிளம்பினார் என்பது தெரியவில்லை. அவருடன் அண்ணாதுரையும் பயணித்துள்ளார். விபத்திலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் தம்பி கருகி இறந்ததை நேரில் பார்த்த அவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருப்பசாமி இறந்ததை அறிந்த அவரது தாயார் செல்லத்தாய், தங்கை வேலுத்தாய், தம்பிகள் வெள்ளைத்துரை, முருகன், மனைவி கற்பகவல்லி, குழந்தைகள், மனைவியின் அண்ணன் மாரியப்பன் ஆகியோர் பெங்களூர் விரைந்தனர்.

அவர்களிடம் கருப்பசாமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

உடலின் முக்கால்வாசிப் பாகம் கருகி விட்டதால், மைசூர் சாலையில் உள்ள மின்சார மயானத்தில் வைத்து தகனம் செய்தனர்.

குடும்பத்தைக் காக்க பெங்களூரில் வேலை பார்க்கச் சென்ற கருப்பசாமி, இப்படி கரிக்கட்டையாகிப் போனது அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வீசிக் கொன்றனர்

இதற்கிடையே, கருப்பசாமியின் அஸ்தி அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெங்களூர் வன்முறையின்போது என்ன நடந்தது என்பது குறித்து கருப்பசாமியின் மைத்துனர் சிவகாசி மாரியப்பன் விளக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், கருப்பசாமி கடந்த 5 ஆண்டுகளாக கேரளம் கர்நாடகம் உள்பட வெளிமாநிலங்களுக்கு வைக்கோல் லோடு ஏற்றும் வேலை பார்த்து வந்தார்.

தற்போது பெங்களுரில் இருக்கும் பெரியம்மா மகன் அண்ணாத்துரை கருப்பசாமியை அங்கு வேலைக்கு அழைத்தார். இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு கருப்பசாமி பெங்களுருக்கு சென்றார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை செய்யக் கூடாது என கன்னடர்கள் தகராறு செய்தனர்.

இதனால் ஊருக்கு திரும்ப அண்ணாத்துரை, கருப்பசாமி மற்றும் சிலர் முடிவு செய்து சென்னை செல்லும் பஸ்சில் ஏறினர். அப்போது கலவர கும்பல் வழிமறித்து பஸ் மீது வெடிகுண்டுகளை வீசியது.

இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணாத்துரை படுகாயம் அடைந்த நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது நினைவு திரும்பும்போது கருப்பசாமி எங்கே, என்று அவர் கேட்டுள்ளார். யாரும் சரியாக பதில் சொல்லாத நிலையில் வாசுதேவநல்லூரில் உள்ள கருப்பசாமியின் மனைவி கற்பகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் பெங்களுர் வந்து விசாரித்ததில் கருப்பசாமி வெடிகுண்டு வீச்சில் பலியானது தெரியவந்தது.

இதுகுறித்து எனக்கு தகவல் கிடைக்கவே நான் நேற்று காலை பெங்களுர் புறப்பட்டு மாலை அங்கு சென்றடைந்தேன். போலீசார் எரிந்த நிலையில் பஸ்சையும், கருப்பசாமியின் உடலையும் விடியோ எடுத்திருந்தனர்.

அதை என்னிடம் போட்டு கண்பித்தனர். அப்போது பஸ்சின் கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் கருகிய நிலையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்தேன்.

இது குறித்து அண்ணாதுரையிடம் போனில் விசாரித்தபோது அவரும் கடைசி சீட்டுக்கு முந்தைய சீட்டில் கருப்பசாமியும், தானும் அமர்ந்திருந்ததை உறுதி செய்தார்.

கோவில்பட்டியை சேர்ந்த உறவினர்கள் பெங்களூர் சென்று அவரது உடலை பெற்று இறுதி சடங்கு செய்தனர். அவரது அஸ்தியை நான் எடுத்துக் கொண்டு வந்தேன் என்றார்.

No comments: