Saturday, September 22, 2007

கோவிலுக்கு செல்பவர்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று கருணாநிதி சொல்லத் தயாரா? சரத்குமார்


கருணாநிதி கருத்து சரியல்ல? சொல்கிறார் சரத்குமார் சென்னை: "இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் வெளியிட்ட கருத்துக்களுக்கு, முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும். முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அத்வானியுடன் விவாதிக்க கருணாநிதி முன்வர வேண்டும்' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.

சென்னையில் நேற்று சரத்குமார் அளித்த பேட்டி: சமத்துவபுரம் காண வேண்டும், ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று சொல்லும் கருணாநிதி, ஒரு மதத்தை பற்றி பல முறை மனதை புண்படுத்தும் விதமாக சில கருத்துக்களை சொல்லி வருவது அனைவரையும் பாதித்து வருகிறது. கருணாநிதி ஒன்றை சொல்லிவிட்டு அதற்கு எதிலிருந்தாவது விளக்கம் சொல்லி வருகிறார். இன்று ராமர் இல்லை என்று சொல்வார்; நாளை முருகக் கடவுள் யார், அவர் எப்படி மயில் வாகனத்தில் பறக்க முடியும்; எப்படி பிள்ளையாருக்கு எலி வாகனமாக முடியும்; ஐயப்பன் ஏன் குன்றின் மீது இருக்கிறார்; வெங்கடாசலபதியின் பூர்வீகம் என்னவென்றெல்லாம் கேட்பது தான் அரசியல் ஞானமா?

மக்களின் பொருளாதார வாழ்வாதார உயர்வுக்கு நாம் உழைக்கப் போகிறோமா அல்லது மதச் சர்ச்சைகளில் ஈடுபட்டு மத கலவரத்தைத் துõண்டி, வன்முறை வெடிக்க வழி வகுக்கப் போகிறோமா என்ற ஐயம் எங்களுக்கு வருகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், சாமி கும்பிடுபவர்கள், கோவிலுக்கு செல்பவர்கள் தி.மு.க.,வில் இருக்கக் கூடாது. தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று கருணாநிதி சொல்லத் தயாரா? இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் வெளியிட்ட கருத்துக்களுக்கு, முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

No comments: