Tuesday, October 31, 2006

இறைதூதர் - 4

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

முதலில் தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். வேலைப்பளு அதிகம்.

///
சகோதரர் எழிலுக்கு!

//கிறிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)//

அவர்கள் சொல்வது உண்மையே! குர்ஆன் மிக உயர்ந்த இலக்கிய நடையில் இருக்கும். அதே சமயம் சாதாரண மனிதர்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் தெளிவாக இருக்கும். நீங்கள் குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது போல் பைபிளை அவ்வளவு சுலபமாக படித்து விட முடியாது. அதே போல் காளிதாசனோ கம்பனோ எழுதிய ஆக்கங்களை சாதாரண பாமரன் புரிந்து கொள்வது சிரமம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தொனியில் குர்ஆன் அமைந்திருப்பதையே இது ஒரு இறை வேதம் என்பதற்கு சான்றாகக் கூறலாம். அதேபோல் ஒரே மனிதரிடமிருந்து இரண்டு தன்மைகள் வெளிப்படுவது மிக அரிது. என் எழுத்து நடையையும் உங்களின் எழுத்து நடையையும் பதிவை தொடர்ந்து படித்து வருபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடலாம். அப்படியே என் நடையை நான் திறமையாக மாற்றினாலும் ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் முகமது நபியோ இந்த குர்ஆனை இறைவனிடமிருந்து வாங்கித் தந்தது இருபத்தி மூன்று வருடங்கள் எனபதையும் நாம் மறந்து விடக் கூடாது. அன்றைய அரபு பண்டிதர்களே (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) குர்ஆனின் நடை அழகைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். 'இது கண்டிப்பாக முகமதின் வார்த்தைகள் கிடையாது. ஆனால் இந்த செய்தி எங்கிருந்து வருகிறது என்பது தான் மர்மமாக இருக்கிறது' என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அந்த பண்டிதர்களே முடிவில் இது இறை வாக்குதான் என்று நம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கிறோம்.
///


ஆக ஒரு புத்தகம் இறைவேதம் என்பதற்கு ஆதாரம் அது எளிமையாக, எளியவரும் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் ஆனால் மிக உயர்ந்த தரமாக, உயர்ந்த கருத்துக்களை (பாரதியார் கவிதைகள் போன்று, அல்லது எளிய வார்த்தைகளில் அற்புதமான இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைகளை எழுதிய கண்ணதாசன் போன்று) இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பாரதியாரின் கட்டுரை நடையும், கவிதை நடையும் வெவ்வேறானவை. கவிதையில் இருக்கும். பாரதியாரின் கவிதைகளைப் பார்த்துக்கூட பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இதே போன்று, குமர குருபரரின் கவிதைகளும் தெய்வீகமானவை என்று தமிழர்கள் கருதுகிறார்கள். குமர குருபரர் சுமார் 5 பிராயம் வரையில் வாய் பேச அறியாதவராக இருந்திருக்கிறார். ஆனால் ஐந்தாம் வயதில் பேச வாய்திறந்தபோது நேரடியாக முருகக்கடவுளை போற்றி புகழும் ஒரு செய்யுளை பாடினார். குமர குருபரரின் இலக்கியம் அனைத்தும் இறைவேதம் என்று இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?

///
//ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?//

ஒரு மதத்தின் பிரச்சாரத்துக்கு 'நீ தொழ வேண்டும், நோன்பு வைக்கவேண்டும், மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும்' என்று ஆன்மீகக் கட்டளைகளை மட்டுமே இறைவன் குர்ஆனில் கொடுத்திருக்க முடியும். ஆனால் 'ரோம சாம்ராஜ்ஜியம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பு : பூமியில் மட்டுமே மனிதனால் வாழ முடியும, ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்கள் தான்,புவி ஈர்ப்பு சக்தியைப்பற்றிய முன்னறிவிப்பு, சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் நீந்திச் செல்கின்றன என்ற அறிவிப்பு, அனைத்து படைப்புகளிலும் ஜோடியைப் படைத்துள்ளேன் என்ற அறிவிப்பு, ஓரங்களில் பூமி குறைகிறது என்ற அறிவிப்பு, மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறேன் என்ற அறிவிப்பு, பால் வயிற்றில் எவ்வாறு சுரக்கிறது என்ற உண்மை, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடையும் குறையும் என்ற அறிவிப்பு, ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான கலப்பு விந்திலிருந்தே உயிரினம் உருவாதல் என்ற உண்மை, தேன்எவ்வாறு உற்பத்தியாகிறது என்ற உண்மை, விண்வெளிப்பயணம் சாத்தியமே என்ற உண்மை, கர்ப்ப அறையின் தனித் தன்மை, விரல் ரேகைதான் மனிதனின் முக்கிய அடையாளம் என்ற உண்மையைக் கூறுதல் ,மனிதன் மலைகளின் உயரததிற்கு பூமிக்கு அடியில் செல்ல முடியாது என்ற உண்மை போன்ற அந்த மக்களுக்கு அவசியம் இல்லாத செய்திகளை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

பிற்காலத்தில் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்று 'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கத்தான் இந்த உண்மைகளை இறைவன் கோடிட்டுக் காட்டுகிறான். ஒன்று இரண்டல்ல குர்ஆன் முழுக்க இது போல் பல நூறு வசனங்கள். அறியாமைக் காலத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு குருட்டு சமூகத்தில் தோன்றிய முகமது நபி எவ்வாறு இந்த உண்மைகளை சொல்ல முடியும்? எனபதற்கான உங்கள் பதில் என்ன? அதே போல் குர்ஆன் கோடிட்டுக் காட்டும் எந்த உண்மையையும் இது வரை எந்த அறிவியல் அறிஞரும் மறுக்கவில்லை என்பதற்கும் உங்கள் பதில் என்ன?

நம் திருக்குறளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். நான் தமிழன் என்ற முறையில் திருக்குறள் நம்மிடம் இருப்பதற்கு நானும் பெருமை படுகிறேன்.இரண்டு அடிகளில் திருவள்ளுவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய பெருமை வாய்ந்த குறளிலும் சில குறைகளைக் காட்டமுடியும். உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்

நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.

இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழிதியுள்ளார். இதே போல் பல குறள்களை என்னால் காட்ட முடியும். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? மனிதர்கள் எழுதியதில் இது போன்ற குறைகள் வருவது சகஜம். இது போன்று குர்ஆனில் இன்றைய அறிவியலோடு மோதக் கூடிய ஒரு வசனத்தைக் காட்டுங்கள். மேற்கத்திய அறிவியலார் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயற்ச்சித்து முடிவில் தோல்வியையே தழுவி பிறகு இஸ்லாத்தை தழுவியதாகத்தான் வரலாறு.
///


திருக்குறள் பற்றிய ஒரு சிறு விளக்கம். அந்த குறளில் சிவனின் தலையை பற்றி திருக்குறள் பேசவில்லை. சந்திர கிரகணம் வரும்போது, சூரிய கிரகணம் வரும்போது ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன என்பது இலக்கிய கற்பனை. அந்த கவித்துவமான உவமையை இங்கே திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். சந்திர கிரகணம் வரும்போது ஒளி மிகுந்த சந்திரன் மங்கி ஒளி இழப்பதுபோல என் உடல் ஒளி இழந்தது என்று தலைவி சொல்வதாக கவிதை. இதே போல, குரானில் ஒரு கவித்துவ சிந்தனை (உதாரணமாக "உன் இதயத்தில் என்ன இருக்கும் என்று இறைவனுக்குத் தெரியும்" என்பது போல. உண்மையில் மூளையில்தான் சிந்தனை இருக்கிறது என்பது வெளிப்படை.) இருந்தால், குரான் இறைவேதம் அல்ல என்று கூறிவிடுவீர்களா என்ன? கூற மாட்டீர்கள் தானே? அது போல நீங்கள் உபயோகித்த குறள் தவறான உதாரணம். எனக்குத் தெரிந்து அப்படிப்பட்ட அறிவியல் தவறுகள் திருக்குறளில் ஏதும் இல்லை.

கண்ணதாசன் போல கவிதை எழுதமுடியுமா என்று சவால் விட்டால் அதற்கு விடை கிடையாது. ஏனெனில், யார் கண்ணதாசன் போல எழுத முயற்சித்தாலும், இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை என்று சொல்லிவிடலாம். ஆகவே அது எப்படி ஒரு நிரூபணம் ஆகும் என்பது புரியவில்லை.


//'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு // என்று தவறாக குறித்திருக்கிறீர்கள். நான் அப்படி ஒருபோதும்கேட்கவில்லை. நான் இறைதூதருக்கான இலக்கணம் கேட்டேனே அன்றி, குரான் இறைவேதமா என்பதையோ அல்லது முகம்மது நபி இறைதூதரா என்பதையோ நான் கேட்கவே இல்லை. தயவு செய்து இப்னுபஷீர் அவர்களுக்கும் உங்களுக்கும் எழுதிய பதில்களை தயை கூர்ந்து படிக்க வேண்டுகிறேன். எந்த இடத்திலும் நான் ஜனாப் முஹம்மது பெருமானாரை இறைதூதரா என்றோ குரானைப் பற்றியோ கேட்கவே இல்லை. ஏனெனில் அதில் என் அறிவு பூஜ்யம். நீங்கள் கூறுவதை வைத்து அதன் மீது சில கேள்விகள் எழுப்புகிறேன். ஆனால், எனக்கு ஜனாப் முஹம்மது நபி பெருமானார் பற்றியோ அல்லது குரான் பற்றியோ ஏதும் தெரியாது. அதனை நீங்களே என் கேள்விகளிலிருந்து புரிந்து கொண்டிருக்கலாம்.

நான் கேட்டதெல்லாம் இதுதான். இறைதூதருக்கான இலக்கணம் என்ன? அதற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.
இயேசு காலத்துக்கு முந்திய காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கும்போது இரண்டு மூன்று பேர்கள் தங்களை இறைதூதர் என்று கோரினால், யாரை இறைதூதர் என்று ஏற்றுக்கொள்வீர்கள், ஏன்?

நீங்கள் மீண்டும் குரான் மற்றும் முகம்மது கூறிய அறிவியல் உண்மைகளை குறிப்பிடுகிறீர்கள். இது முன்பு சொன்னது போலவே எனக்கு பிரச்னை. நான் அவற்றை பேச விரும்பவில்லை. ஆனாலும் இறைதூதர் என்ற உதாரணத்துக்கு ஜனாப் முஹம்மது பெருமானாரை காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.

இரண்டாவது இதே போல குரானில் இருப்பதாக குறிப்பிடும் அறிவியல் உண்மைகளைப்பற்றி எனக்கே மாற்றுக்கருத்து இருக்கிறது.

உதாரணமாக பரிணாமத்தை நான் அறிவியல் என்று ஒப்புக்கொள்கிறேன். மனித உடலிலும், மற்ற உயிரினங்களின் உடலமைப்பிலும் இருக்கும் குறைபாடுகளை, பரிணாம மீதங்களை (vestiges and sub-optimal design) பரிணாம அறிவியல் கொண்டு மட்டுமே விளக்க முடியும் என்று கருதுகிறேன். நீங்களோ நானோ ஒரு ஜெனடிக் பொறியியலாளராக இருந்திருந்தால் அந்த குறைபாடுகளை நீக்கியிருப்போம் என்றே கருதுகிறேன். (உதாரணத்துக்கு, முட்டாள்தனமாக தோன்றிவிட்ட கண், அப்பெண்டிக்ஸ், மீதமிருக்கும் வால் எலும்பு இன்னும் பல) நீங்கள் பரினாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் அறிகிறேன். ரோம சாம்ராஜ்யம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பை எடுத்துக்கொண்டால், அவர் இதுபோல முன்னறிவித்து நடைபெறாத ஏதேனும் வாக்கியங்கள் இருக்கும் அல்லவா? (எனக்கு தெரியாது. என் பதிவில் கூட ஒருவர் ஒரு சிறுவன் கிழவனாவதற்கு முன்னால் இறுதி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று ஜனாப் முஹம்மது பெருமானார் கூறியிருப்பதாக எழுதியிருந்தார். அதனைப் பற்றி நீங்கள்தான் விளக்கவேண்டும்) அப்படி ஏதேனும் இருந்தால், அது ஒருவரை இறைதூதர் அல்ல என்று ஆக்கும் என்று கூறுவீர்களா?

மற்ற விஷயங்களை நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசையை பற்றியும், உலகம் உருண்டை என்பதும், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதும், அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிலும் அந்த புத்தகங்க¨ளை வைத்து படித்த மற்ற இடங்களிலும் பேசப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அரிஸ்டாட்டிலின் அறிவியல் போதனைகள் இங்கே

http://www.perseus.tufts.edu/GreekScience/Students/Tom/AristotleAstro.html

அதே போல அந்த காலத்தில் வாழ்ந்த கேலன் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆணும் பெண்ணும் இருவரும் கொடுக்கும் திரவத்திலிருந்து உயிர் உண்டாகிறது என்றும் கூறியிருக்கிறார் என்பதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே இன்று தெரிந்த ஒரு விஷயத்தை நான் திரும்பச்சொன்னால், அது அற்புதமாகிவிடாது என்று கூறலாமே. (உதாரணமாக நான் ஆணின் விந்துதான் ஒரு குழந்தை ஆணாக பிறக்கிறதா பெண்ணாக பிறக்கிறதா என்பதை நிர்ணயிக்கிறது, அதுவும் கருவுற்ற அந்த வினாடியே அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதும் நிர்ணயமாகிவிட்டது என்று சொன்னால் அது அற்புதம் இல்லை அல்லவா? ஏனெனில் எனக்கு முன்னரே மருத்துவ விஞ்ஞானம் அதனை கூறிவிட்டது.)


///
//பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலா//

அற்புதங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தந்திரம். மற்றது இறைவனின் செயல். நீங்கள் சொல்லும் மந்திரவாதிகள் அந்த அரங்கத்தில் சில செட்டப்களை செய்து நம் கண்களை மறைத்து சில புறாக்களை வரவழைப்பார்கள். இது தொடருமென்றால் அவர் மேஜிக் தொழிலை நம்ப வேண்டியது இல்லை. தன் வீட்டிலேயே இது போன்ற புறாக்களை உற்பத்தி செய்ய முடியும். அது முடியாததால்தான் நம்மிடம் பத்து இருபது என்று டிக்கெட் போடுகிறார்.

இது போன்ற ஒரு சம்பவம் இறைத் தூதர் மோசேயின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. மோசே சில அற்புதங்களை பிரவுன் என்ற அரசனுக்கு முன்னால் தான் இறைத் தூதர் தான் என்பதை நிரூபிப்பதற்காக செய்து காட்டினார். அந்த அரசனோ இதைவிட சிறந்த மந்திரவாதிகளை அழைத்து வந்து மோசேயோடு போட்டியிட வைத்தான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இந்த சம்பவத்தில் அந்த சூன்யக்காரர்களுக்கே மூசா செய்வது சூன்யம்அல்ல. அது இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த சக்தியால் என்பது அவர்களுக்கு விளங்கியது.

அதே போல் முன்பு இறைவனின் உதவி கொண்டு ஏசு முடவர்களைக் குணமாக்கினார். குருடர்களை பார்க்கச் செய்தார். ஏசுவுக்குப் பிறகு முகமது நபியோடு இது போன்ற அற்புதங்கள் வரும் வாசல் அடைபட்டு விட்டது. இந்த காலத்தில் சுவிஷேஷக் கூட்டங்களில் இது போன்ற அற்புதங்கள் எவ்வாறு நிகழ்த்தப் படுகிறது என்பதை கிறித்தவர்கள் தான் விளக்க வேண்டும்.
///


இன்றும் பலர் சுவிசேஷக்கூட்டங்களுக்கு சென்று அற்புதங்களை கண்டு கிறிஸ்துவர்களாக ஆகிறார்கள். அவர்களை கொன்றாலும் பலர் வேறுமதத்துக்கு செல்ல மாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன். சுவிசேஷ கூட்டங்கள் இறை ஆசியால்தான் நடைபெறுகின்றன என்று கூறுவீர்களா?

///
//இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.//

இறைத் தூதர்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளமாக 'நபித்துவ முத்திரை'யைக் கூறலாம். இது அனைத்து தூதுவர்களுக்கும் அவர்களின் முதுகு பக்கத்தில் (இரண்டு புஜங்களுக்கு இடையில்) முட்டைவடிவத்தில் ஒரு அடையாளம் இருக்கும். இதைப் பார்த்தே பல யூதர்கள் இவர் உண்மையான நபிதான் என்ற முடிவுக்கு வந்து முஸ்லிமான வரலாறும் உண்டு.

'நான் முகமது நபி அவர்களின் இருபுஜங்களுக்கிடையே முத்திரையைப் பார்த்தேன். அது சிவந்த சதைத் துண்டாக புறாவின் முட்டை வடிவில் இருந்தது.'
ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா

உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். இறைவன் புறத்திலிருந்து சில அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும். இத்தகைய தன்மை கொண்டவரைத்தான் நாமும் தூதராக ஏற்றுக் கொள்ள முடியும். பல பேர் தூதரகள் என்று சொன்னாலும் மேற் சொன்ன ஏதாவது ஒன்றில் சறுக்கி அவரின் உண்மை முகத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

மேலும் பல கேள்விகளுக்கு ரம்ஜான்விடுமுறை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வந்து என் வாதத்தை வைக்கிறேன். மிகவும் சிரத்தை எடுத்து திறமையாக அதுவும் நாகரீகமாக கேள்விகளை வைக்கும் எழிலுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
///


நபித்துவ முத்திரையான முதுகு நடுவில் புறா முட்டை போன்ற மச்சம் இருக்கும் நபர்கள் எனக்கு வந்த வேதம் என்று கவிதைகள் பொழிந்தால் அதனை இறைவேதம் என்று ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள்.

ஏறத்தாழ இதனைத்தான் நான் கேட்டேன். இதுவரை வந்த அனைத்து இறைதூதர்களுக்கும் இது போல நபி முத்திரை இருந்தது என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். குறைந்தது, இஸ்லாமில் இறைதூதர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் இயேசு கிறிஸ்து, மோஸஸ், ஆபிரஹாம் ஆகியோருக்கும் இந்த முத்திரை இருந்தது என்று யூத கிறிஸ்துவ புத்தகங்களிலிருந்து நிரூபிக்க வேண்டும்.

மேலும் //உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். //

இஸ்லாம் எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டவர்களுக்கும் பொருந்தி வருமா? குரான் பரிணாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறுகிறீர்கள். ஆக குரான் இறைவேதம் அல்ல என்று கூறுவீர்களா?

என்னுடைய கேள்விகளை (ஓரளவுக்கு விதண்டா வாதம் போன்று தோற்றமளிப்பவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது என்னுடைய எழுதும் முறையில் உள்ள குறையாக இருக்கலாமே தவிர என் எண்ணத்தில் இல்லை என்று உறுதி கூறுகிறேன்) மதித்து, அதற்கு விளக்கம் அளிக்கும் இனிய சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு என் தாழ்மையான மனம் கனிந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்
எழில்

----------------------
///
எழிலின் மற்ற கேள்விகளுக்கான பதில்!

//நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? //

இதை விடக் கடினமான கேள்விகளை எல்லாம் அன்றைய அரபுகள் முகமது நபியிடம் கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் ஆதாரமான பதில்களைத் தந்து முடிவில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகத் தான் வரலாறு.

'அறியாதவர்கள்' என்று ஏன் இறைவன் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை மறுமையில் இறைவனை சந்திக்கும் போது நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் நான் சிறு விளக்கத்தைக் கொடுக்கிறேன்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார? என்று சிந்தித்துப் பார்த்தால் நம்மை படைத்தவனைப் பற்றியும் இந்த உலகம் உருவானதன் அதிசயத்தைப் பற்றிய உண்மையையும் மனிதன் விளங்கிக் கொள்வான். இதை எல்லாம் சிந்திக்காமல் இறைவன் என்னிடம் நேரிலேயே வரக் கூடாதா? என்னிடம் பேசக் கூடாதா? என்று நாத்திகத் தன்மையோடு கேட்பதால்தான் அவர்களைப் பார்த்து இறைவன் 'அறியாதோர்' என்று விளிப்பதாக எனக்குப் படுகிறது.
///


கேள்வி இறைவனின் படைப்பு பற்றியதல்ல.

கேள்வி கேட்டவர்கள் "முகம்மது நபி இறைதூதர்தானா? அதற்கு என்ன அத்தாட்சி?" என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலாக குரான், அவ்வாறு கேட்பவர்கள் அறியாதவர்கள் என்று சொல்கிறது. இதுதான் பிரச்னை.

வாழ்வா சாவா என்பது போன்ற பிரச்னையில் அத்தாட்சி கொடுங்கள் என்று கேட்பவர்கள் "அறியாதவர்கள்" என்று அவமானப்படுத்துவது சரியல்ல என்பதுதான் என் எண்ணம்.

///
//முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.//

நான் முன்பே குறிப்பிட்டது போல் நபித்துவ முத்திரை இருக்க வேண்டும், இறைவனிடம் இருந்து வேதமும் வந்து அது எல்லா நாட்டு மக்களுக்கும் பொறுந்தி அறிவியல் கருத்துகளோடு மோதாமலும் இருக்க வேண்டும். இறைவனின் உதவி கொண்டு சில அற்புதங்களையும் செய்திருக்க வேண்டும், இதற்கு முன் பொய் பேசாதவராகவும் நல்லொழுக்க முடையவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் அனைத்தும் பொருந்தி வருவதால்தான் முஸ்லிம்கள் முகமதை தூதராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முகமது நபிக்குப் பிறகும் 'நானும் நபி' என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் பொய்முகங்கள் சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிய வந்தது.

இறைவனே மிக அறிந்தவன்!
///


1) நபித்துவ முத்திரை எல்லா இறைதூதர்களுக்கும் இருந்தது என்பதற்கு அத்தாட்சி கொடுங்கள்.
ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியே நீங்கள் தொடர்ந்து எழுதுவதால், கேள்விகள் அதனை பற்றி இருக்கின்றன. மன்னிக்க வேண்டுகிறேன்.
2) முஹம்மது பொய் பேசியவர், தீர்க்கதரிசனம் அற்றவர் என்பதற்கு என் பதிவில் ஒருவர் "ஒரு சிறுவன் வயதாவற்குள் இறுதி நாள் வந்துவிடும்" என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அப்போது எப்படி அவரை இறைதூதர் என்று கூறவியலும்?
3) அவர் அற்புதங்கள் செய்ததாக இன்னமும் நீங்கள் நிரூபிக்கவில்லை.

--
நண்பர் சுல்தான் அவர்கள் எனக்கு ஒரு பதில் எழுதியிருக்கிறார்.

//ஒரு உதாரணத்தின் மூலம் இதை மேலும் விளக்குவோம்.
எழில் 'என் தந்தையார் எனக்கு சிறந்த அறிவுரைகள் கூறியிருக்கிறார். அவற்றை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் என்னால் உயர முடிந்தது. இந்த நல்ல அறிவுரைகளை மற்றவர்களும் பின்பற்றுவதன் மூலம் அவர்களும் சிறந்தவராகலாம்' எனக்கூறுவதாகக் கொள்வோம்.

இப்போது திரு.எழிலிடம் 'நீங்கள் குறிப்பிடும் நபரை உங்கள் தந்தையென்று சொல்லாதீர்கள். உங்கள் தாய், உம்முடைய தந்தையாக உமக்கு அறிமுகப்படுத்திய நபர்' என்று சொல்லுங்கள் என்று சொன்னால் எழிலுக்கு கோபம் வரும். மரபணு சோதனை மூலம் அவரை என் தந்தையென்று நிரூபிக்க முடியும் என்று அவர் சொல்வார். அப்போது
//


இல்லை எனக்கு கோபம் வராது. நீங்கள் கூறுவது உண்மைதானே. ஏன்
அமமாதான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று காட்டமுடியும். ஏனெனில் அது அம்மாவுக்குத்தான் தெரியும்.
அதே போல இறைவன் தான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் இறைதூதர் என்று காட்ட முடியும். ஏனெனில் அது இறைவனுக்குத்தான் தெரியும்.

//
'முற்காலத்தில் நான்கு நபர்கள் ஒருவரின் தந்தையென்று வாதிட்டனர். மரபணு சோதனைகளை அறியாத காலம். அப்போது தந்தையென்று எப்படி நிருவுவீர்கள். எனக்கு எந்த காழ்ப்புணர்வுமில்லை உண்மையறியும் ஆர்வம்தான்' என விதண்டாவாத கேள்விகள் கொண்டு வாதிட்டால் என்ன செய்வது.
//


அப்போதும் அம்மாவின் வாக்குமூலம் நம்பத்தகுந்ததுதானே? அம்மா ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று கூறாத வரையில், யார்வந்து நான் தான் உன் தந்தை என்று கூறினாலும், ஆதாரம் என்ன என்று கேட்க மாட்டோமா? யார் வந்து சொன்னாலும், அவரை தந்தை என்று ஒப்புக்கொள்வோமா?
--
இன்னொருவர் அவரது பதிவில் அவரது பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்று குறை கூறியிருந்தார். அது ஆபாசமில்லைதான். ஆனால், மிகுந்த ஆர்வத்துடனும், அர்பணிப்புடனும் எழுதும், அக்கறையுடன் எனக்கு பதில் எழுதும் சகோதரர்கள் அபுமுஹை, சுவனப்பிரியன், இப்னுபஷீர் ஆகியோரையும் சேர்த்து அது அவமதிக்கிறது. அது சரியல்ல என்பதால் அதனை அனுமதிக்கவில்லை.
--

என் கேள்விகளுக்கு பொறுமையாக நாகரிகமாக பதில் எழுதும் இனிய சகோதரர் அபுமுஹை, இனிய சகோதரர் இப்னுபஷீர், இனிய சகோதரர் சுவனப்பிரியன் ஆகியோருக்கு தாழ்மையான நன்றிகள்

அன்புடன் எழில்

Monday, October 23, 2006

இறைதூதர்-இப்னு பஷீர்-3

இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் என்னுடைய இந்த பக்கத்துக்கு இங்கே மறுமொழி அளித்திருக்கிறார்கள்.

மீண்டும் அவருக்கு என் நன்றி உரித்தாகுக. அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் என்னுடைய ஆரம்பக் கேள்வியை தாண்டி செல்பவை. அதனால், மீண்டும் அந்த கேள்வியை இங்கே

நினைவுபடுத்திக்கொள்கிறேன்.


நீங்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?


///அன்புச் சகோதரர் எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் இறைத்தூதர்கள் குறித்து மேலும் சில கேள்விகள் எழுப்பியிருந்தார். அவற்றிற்கு பதிலாக எனக்குத் தோன்றிய சில விளக்கங்களை

முன்வைக்கிறேன்.

//யூதம் மிகவும் பழையது என்று அறிகிறேன். அவர்களில் பல இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறேன். ஆபிரஹாமுக்கு பிந்தைய இறைதூதர்களை

யூதர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். http://www.shamash.org/lists/scj-faq/HTML/faq/12-11.html. ஆப்ர?¡முக்கு பின் 46 யூத இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். 7 பெண் இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் குறிப்பிடுகிறது. //

தகவலுக்கு நன்றி சகோ.எழில்! ஆபிர?¡முக்கு பிந்திய இறைத்தூதர்களை யூத மதம் அங்கீகரிக்கவில்லை என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். இத்தனை பேரை இறைத்தூதர்கள் என நம்பும் யூதர்கள், அவர்களின் குலத்திலேயே தோன்றிய, பிறக்கும்போதே அத்தாட்சிகளுடன் பிறந்த, (தந்தையின்றி தாயின் வயிற்றில் தோன்றியது, தொட்டில் பருவத்திலேயே பேசியது) இயேசுவை (அலை) ஏற்றுக் கொள்ளாமல் போனது விந்தையே.
///


வேறு சமயத்தில் நேரம் இருக்கும்போது இது பற்றி பேசலாம் என்று கருதுகிறேன். என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு இது வெளியில் உள்ளது என்று கருதுகிறேன்.

///
//கிறிஸ்து தன்னை புரோபட் என்று கோரவில்லை. கிறித்து தன்னை இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆகவே யூதர்கள் அவரை ஒரு புரோபட் என்று அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது சரியாக பொருந்தாது என்று நினைக்கிறேன். ஆகவே யூதமும் இஸ்லாமும் மட்டுமே இறைதூதர்களை கொண்டவை என்பதுதானே சரியாக இருக்கும்? //

இயேசு (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக முதன் முதலாக பேசியது, ‘நிச்சயமாக நான் அல்லா?வின் அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தை கொடுத்திருக்கிறான். என்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்’ என்பதுதான். (குர்ஆன் 19:30). அப்படியிருக்க அவர் தன்னை இறைமகனாக கூறிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. கிருஸ்துவர்களுக்கிடையே கூட இதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

குறைஷிகளின் கொடுமை பொறுக்க முடியாமல் முஸ்லிம்களில் சிலர் ?பஷா என்ற நாட்டிற்கு அடைக்கலம் நாடிச் சென்றனர். அப்போது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் ‘அஸ்ம?¡ நஜ்ஜாஷி’ என்ற கிருஸ்துவ மன்னர். அந்த முஸ்லிம்களைத் தொடர்ந்து குறைஷிகளின் குழு ஒன்று ?பஷாவிற்கு சென்று மன்னரை சந்தித்து முஸ்லிம்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரினர்.

ஆனால் மன்னர் அதை மறுத்து விட்டார். ஏமாற்றமடைந்த குறைஷிகள் மறுநாள் மீண்டும் மன்னரிடம் சென்று, ‘அரசே, இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்’ என்றனர். மன்னர் முஸ்லிம்களை அழைத்து இது பற்றி விசாரித்தார். “எங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்; அவர் (ஈஸா (அலை)) அல்லா?வின் அடிமை; அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லா?வின் சொல்லால் பிறந்தவர்” என்று முஸ்லிம்களின் குழுவில் இருந்த ஜஅ·பர் (ரழி) கூறினார். இதைக் கேட்ட மன்னர் நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லா?வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவு கூட நீ கூறியதை விட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக்கேட்டு முகஞ்சுழித்த மத குருமார்களிடம் “அல்லா?வின் மீது ஆணையாக! நீங்கள் முகஞ்சுழித்தாலும் இதுவே உண்மை” என்று கூறிவிட்டார்.

டாவின்சி கோடு நாவலில் இயேசு அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த பல விஷயங்களை நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது என்ற போதிலும் இந்த விஷயத்தில், அதாவது, இறைத்தூதரான இயேசு பிற்காலத்து கிருஸ்துவர்களால் இறைமகனாக்கப் பட்டார் என்ற கருத்து, கிருஸ்துவர்களிடையேகூட இது போன்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
///


இதுவும் என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு இது வெளியில் உள்ளது என்று கருதுகிறேன்.

///
//இஸ்லாமுக்கு பின்வந்த பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் போன்ற மதங்கள் முகம்மதை இறைதூதராக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் பஹாவுல்லா போன்றவர்களை இறைதூதர் என்று ஒப்புக்கொள்வதில்லை.//
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டவர்கள், அவர் தம்மை இறுதித்தூதர் என்று சொன்னதை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?
///


ஒரு பஹாய் பக்கத்தை இங்கே காட்டுகிறேன்.
http://www.bci.org/islam-bahai/SealProphets.htm.

மேலும் இந்த பக்கம் ஒரு மனிதரை இறைதூதர் என்று ஒரு மதத்தினரின் வேதப்புத்தகத்தின் அடிப்படையிலேயே ஒத்துக்கொள்வதில் உள்ள பிரச்னையை தொடுகிறது. இருப்பினும், பஹாய் வரலாறு பற்றியோ, பஹாய் இறைதூதரா அல்லவா என்பதிலோ சென்றுவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

//
//தூதுத்துவம் என்பது மேற்கண்ட மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது இல்லையே?//

உங்களைப் போன்ற கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவினர் தூதுத்துவத்தை மறுக்கிறார்கள் என்பதால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லையே?//


மிகவும் சரி. என்னுடைய கருத்தாக இருப்பதாலோ அது உங்களுடைய கருத்தாக இருப்பதாலோ அது உண்மையாகவோ பொய்யாகவோ ஆவதில்லை. குரான் சொல்கிறது என்பதாலோ, யூதர்களின் தோரா சொல்கிறது என்பதாலோ, பைபிள் சொல்கிறது என்பதாலோ, வேதப்புத்தகம் சொல்கிறது என்பதாலோ, பஹாய் மதத்தினரின் வேதப்புத்தகம் சொல்கிறது என்பதாலோ ஒரு விஷயம் உண்மையாகவோ பொய்யாகவோ ஆவதில்லை.
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பது தமிழ் மரபு.

//சொல்லப்போனால், அந்த கால சமூகங்களில் ராணுவ தலைவர்களும், ராணுவ தலைவர்களுக்கு ஆலோசனை தரும் குருக்களும், அரசர்களும் தங்களை ஆண்டவனின் அருள் பெற்றவர்களாகவே

சித்தரித்துக்கொண்டனர். http://en.wikipedia.org/wiki/Divine_right_theory
பெரும்பாலான ஐரோப்பிய அரசர்கள் தங்களை கடவுளின் அருள் பெற்றவர்களாகவும், தங்களை எதிர்ப்பவர்களை கடவுளுக்கு எதிராக நடந்துகொண்டதாக சிரச்சேதம் செய்ததையும் பார்க்கலாம்.

ஜப்பானிய அரசர்கள் தங்ளை கடவுளின் சந்ததியில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இன்றும் ஜப்பானிய அரசரை கடவுளாகக் கருதும் மதம் ஜப்பானில் இருக்கிறது. உலகத்தில் ஜப்பானிய அரச

வம்சம் மட்டுமே வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. உலகத்தில் இந்த ஒரு அரச வம்சத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட பெருமை உண்டு. எகிப்திய பேரரசர்களும் தங்களை கடவுள் வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இந்திய அரசர்களும் தங்களை சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டனர்.

இதில் கவனித்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு விதமான வித்தியாசமான முறையில் கடவுளின் பெயரை பயன்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.

ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கவும், மக்களை கேள்வி கேட்காமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கவும் அந்த காலத்திலும் இந்தகாலத்திலும் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றனர்.

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்று கருதுகிறேன். (என்னைப் பொறுத்தமட்டில் அது தவறு அல்ல).

ஆனால், இன்று என்னிடம் உண்மையிலேயே ஜப்பானின் அரசர் கடவுளின் வம்சமா என்றோ அல்லது இங்கிலாந்து ராணி கடவுளால் நியமிக்கப்பட்ட பேரரசியா என்றோ கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? அதே பதிலைத்தான் நான் ஜனாப் முகம்மது நபி அவர்களுக்கும் கூற முடியும்.//

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்பது போன்ற அனுமானங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு முற்றிலும் நிராகரிக்கிறது. விரிவஞ்சி சில செய்திகளை மட்டும் இங்கு சுருக்கமாக சொல்கிறேன்.

நபியவர்கள் மக்காவில் வெளிப்படையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் குறைஷிகளில் பலர் இஸ்லாமை ஏற்கத் தொடங்கினர். தங்களது கடவுள் நம்பிக்கைகள் தகர்க்கப் படுவதை தடுக்க குறைஷிகள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராயினர். குறைஷிகளின் தலைவர்களுள் ஒருவனான உத்பா இப்னு ரபீஆ அவர்களின் சார்பாக நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்தான்.

“எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களை சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.” என்றான் உத்பா. இதற்கு பதிலாக நபியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களின் ஓரிறைப் பிரச்சாரத்தை கைவிட வேண்டும் என்பதுதான்.

இதற்கு பதிலளிக்குமுகமாக நபியவர்கள் குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார்கள். அதை கவனமாக கேட்டபின் தம் மக்களிடம் திரும்பிய உத்பா, “குறைஷிகளே, இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லா?வின் மீது சத்தியமாக! இவரிடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது” என்றான்.

இதன் பிறகும் தம் சமரச முயற்சியை கைவிடாத குறைஷித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை தங்களிடம் அழைத்து வரச் செய்து உத்பா சொன்னதையே மீண்டும்வலியுறுத்தி கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்: “உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லா? என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன்.

உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லா? எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லா?வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.'’

சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்துவதும் ஒருங்கிணைப்பதும்தான் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், அதை செயல்படுத்துவதற்கு இதை விட இன்னொரு சிறந்த சந்தர்ப்பம் நபியவர்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை. குறைஷித் தலைவர்களே முன்வந்து நபி (ஸல்) அவர்களை தங்களின் அரசராக ஏற்றுக் கொள்வதாக சொல்வதால் அவர்களின் அரசராக தம்மை முடிசூடிக் கொண்டு அந்த ஒழுங்கு படுத்துதலையும் ஒருங்கிணைப்பதையும் செய்திருக்கலாம். ஆனால், நபியவர்கள் அதை மறுத்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த நிலைப்பாடு குறைஷிகளின் கோபத்தை மென்மேலும் தூண்டி விட்டது. நபியவர்களை கொல்வதற்கும் அவர்கள் திட்டம் தீட்டினர். அது நிறைவேறாததால், நபி (ஸல்) அவர்களையும் பிற முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களையும் குறைஷிகள் ஊரை விட்டே விலக்கி வைத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முஸ்லிம்கள் கடும் இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாயினர்.

குறைஷிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முஸ்லிம்கள் ?பஷா என்ற நாட்டிற்கு புலம் பெயர வேண்டியிருந்தது. நபி (ஸல்) அவர்களும் மற்றும் பல முஸ்லிம்களும் தாங்கள் பிறந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவிற்கு சென்று வசிக்க வேண்டி வந்தது.

நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் எனக் கொண்டிருந்தால் அதைச் செய்யக் கிடைத்த வசதியான வாய்ப்பை நழுவ விட்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் இது போன்ற துன்பங்களுக்கு ஆளாக்கியிருப்பார்களா?

//நீங்கள் முன்னரே குறிப்பிட்ட பக்கத்தில் ரோமானிய அரசர் கூறியது போல பலரும், இறைதூதராக இருந்தால் செல்வாக்காக இருக்கலாம் என்று காப்பி அடிக்க முயன்றிருக்கலாம். ப?¡வுல்லா

தோற்றுவித்த ப?¡ய் மதம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நடுவேயும் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பல பக்கங்கள் குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜப்பானிய பேரரசரின் வம்சம் 1500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால், அவரை உண்மையிலேயே கடவுளின் வம்சம் என்று கூறவியலுமா?//

இறைத்தூதர் என்ற பணி மிகுந்த செல்வாக்குடன் ஆட்சி அதிகாரத்துடன் சொகுசாக வாழ்வதல்ல. இறைத்தூதர்கள் அனைவருமே கடுமையான துன்பத்திற்கும் சோதனைகளுக்கும்
ஆளாகியிருக்கின்றனர். செல்வாக்காக இருக்க நினைப்பவர்கள் காப்பி அடிப்பதற்கு கொஞ்சமும் லாயக்கில்லாதது இறைத்தூதர் பணி.

///


உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. இது முகம்மது தான் கொண்ட கொள்கையிலும் தான் கொண்ட கருத்திலும் பிடிவாதக்காராகவும், சொத்து சுகங்களுக்கு ஆசைப்படாதவராகவும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

ஒருவர் தான் கொண்ட கொள்கையில் பிடிவாதக்காரராகவும் சொத்து சுகங்களுக்கு ஆசைப்படாதவராகவும் இருப்பதும் ஒருவர் சொல்வதை உண்மை என்று ஆக்கிவிடாது. (உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒருவர் உலகம் தட்டையானதுதான் என்று தன்னிடம் இறைவன் சொன்னார் என்று நம்பி, அதனை எல்லோரிடமும் வலியுறுத்தி, அதற்காக சொத்து சுகங்களையும் துறந்து, ஏழையாக்கப்பட்டு துரத்தப்பட்டார், அவரது சீடர்கள் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவரது சீடர்கள் மிகவும் உத்தமர்களாக வாழ்ந்தார்கள் என்றாலும், அவர் சொன்னது உண்மையாகி விடாது அல்லவா?)

///
//சிந்தனைத்திறன் இருப்பதால் தானே கேள்வி கேட்கிறார்கள். சிந்தனைத்திறன் இருப்பதால்தான் ஒரு வரையறை செய்கிறார்கள்ஸ. //

கேள்விகள் கேட்கத்தான் வேண்டும். கேட்டால்தானே பதில் கிடைக்கும்? ஆனால் கேள்விக்கான பதிலை தேடிப்பெற முயலாமல் ‘நேரடியாக பதில் தரப்பட வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது சிந்தனைத்திறன் உடையவர்களுக்கு முறையல்ல.
///


முறையானதுதான். ஒரு சில நேரங்களில் நேரடியாக பதில் தரப்படாதது, பதில் இல்லை என்பதாகவும் மக்கள் புரிந்துகொள்ளலாமே?

///
//ஒருவர் இறைதூதர்தான் என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று அந்த இறைதூதர் மற்றவர் இறைவன். வேறு யாருக்கும் தெரியாது அல்லவா? அல்லது நீங்கள் சொல்வது போன்று வானவர் மூலம் சொல்லப்பட்டிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நான் வானவர் என்பதற்கு இந்த அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன. (இறக்கைகள், ஒளிவட்டம் ஆகியவை). நான் இவர் இறைதூதர் என்று சாட்சியம் கூறுகிறேன் என்று கூறலாம். அப்போது மக்கள் குழப்பமின்றி நம்புவார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஒரு அத்தாட்சி கேட்டதில் தவறே இல்லை. அந்த சாதாரண மக்கள் கேட்ட அத்தாட்சியை கொடுக்காததுதான் தவறு.

அத்தாட்சி இல்லை, ஆனால் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று கோரினால், மக்கள் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஒருவர் அதே போல நான் தான் இறைதூதர், எந்த
அத்தாட்சியும் நான் கொடுக்க முடியாது. ஆனால், எல்லோரும் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் அத்தாட்சி கேட்கமாட்டீர்களா? அப்படி நீங்கள் கேட்டால் “அறியாதவர்” ஆகிவிடுவீர்களா? ஆகவே முகம்மது இறைதூதர்தான் என்று எப்படி அறிவீர்கள்? அதற்காகத்தான் சொன்னேன்ஸ அவன் அனுப்பும் தூதர்களுக்கு எல்லோருக்கும் புரியக்கூடிய, ஒரே மாதிரியான எளிய அடையாளம் இருக்க வேண்டுமல்லவா. அதைத்தான் கேட்கிறேன்ஸ வேறு எந்த மக்களுக்கும் இல்லாத ஒரு அடையாளம், இறைதூதர்களுக்கு மட்டும் இருக்கும் பொதுவான அடையாளம் இருக்கும்போதுதான் மக்களுக்கு இவர் இறைதூதர் என்று தெரியும். இறைவன் வந்து சாட்சி சொல்லாத பட்சத்தில், அல்லது இறைவனிடம் கேட்டு உறுதி படுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில்
1) எல்லா இறைதூதர்களுக்கும் ஒரு பொது அடையாளம் இருக்க வேண்டும்
2) இறைதூதர்களுக்கு மட்டுமே அந்த அடையாளம் இருக்க வேண்டும்
3) இறைதூதர்கள் தவிர வேறெந்த மக்களுக்கும் அந்த அடையாளம் இருக்கக்கூடாது.//

எந்த இறைத்தூதரும் அத்தாட்சி இல்லாமல் அனுப்பப் படவில்லை என்கிறது குர்ஆன். எந்த இறைத்தூதரும் ‘எந்த அத்தாட்சியும் கொடுக்க முடியாது, ஆனால் என்னை நம்ப வேண்டும்’ என்று சொன்னதில்லை. எந்த அளவிற்கு அத்தாட்சிகள் கொடுக்கப் பட்ட போதிலும் அதை ஒரு சாரார் மறுத்தே வந்திருக்கின்றனர். இறைவன் கூறுகிறான், “இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்:

‘அல்லா? ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.” (குர்ஆன் 2:118)
///


"ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்."
ஈமான் என்றால் நம்பிக்கை என்று பொருள் என்று என் நண்பர் கூறினார். (இல்லை என்றால் தயவுசெய்து குறிப்பிடுங்கள்). நம்பிக்கை கொண்டவர்களுக்கு அத்தாட்சிகள் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். It is preaching to the converted.

என்னுடைய கேள்வி இது. இதே போல இன்னொருவர், தங்கப்பா என்று வைத்துக்கொள்வோம் அவர் கூறுகிறார்.

"இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைவன் ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.”

தங்கப்பாவை இறைதூதர் என்று ஒத்துக்கொள்வீர்களா?

///
அந்த அத்தாட்சிகள் நீங்கள் கேட்பதுபோல யாராலும் மறுக்கவே முடியாத அத்தாட்சிகளாக இருந்திருந்தால், உலகம் முழுவதுமே அந்த ஓரிறைவனை வணங்குபவர்களாக இருந்திருப்பார்கள்.

‘இன்னின்ன அத்தாட்சிகளை கொண்டவராக இருக்கிறாரா.. அப்படியென்றால் அவர் இறைத்தூதர்தான்’ என்று மறுபேச்சில்லாமல் அனைவரும் அவரை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். இங்கு சிந்தனைத் திறனுக்கு தேவையே இல்லை. நல்ல பகல் வெளிச்சத்தில் யானையையோ, முயலையோ பார்ப்பவர்கள், அது யானைதான் என்றும் முயல்தான் என்றும் சொல்வதற்கு சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் மறைந்திருக்கும் ஒரு பொருளைப் பற்றி விடுகதை போல சில உதவுக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருந்தால் அதன் விடையை கண்டுபிடிக்க கட்டாயம் சிந்தித்தே ஆக வேண்டும். அது போலத்தான் இறைத்தூதர்கள் விஷயத்திலும். போதுமான உதவிக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு சிந்தனைத் திறனும் வழங்கப் பட்டிருக்கிறது. “நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” - இதை நான் சொல்லவில்லை. குர்ஆன் பல இடங்களில் இவ்வாறு கேள்வி எழுப்புகிறது.
//தெளிவாக தன்னுடைய இறைதூதரை பிரித்துகாட்ட ஒரு தெளிவான எல்லோருக்கும் புரியக்கூடிய அடையாளத்தை மற்ற யாராலும் காப்பி அடிக்க முடியாத அடையாளத்தை தரவேண்டும் அல்லவா? கருணையாளனாகிய இறைவனுக்கு மக்களை இப்படி இக்கட்டில் விடுவதில் என்ன பயன்?//

இதற்கும் குர்ஆனில் பதிலிருக்கிறது;

“‘அல்லா? நாடினால் எங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு

செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லா?வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்’ (என்று கூறுவீராக.) (5:48)

மனிதர்களுக்கு சிந்தனைத் திறனை வழங்கிய இறைவன், அவர்களிடையே தனது தூதர்களை அனுப்பி தனது வேதத்தை போதிக்கச் செய்தான். தனது உயர்ந்த படைப்பாகிய மனிதன் அவனது அறிவைக்கொண்டு இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என இறைவன் விரும்புகிறான் போலும். பாடங்கள் போதிக்கப்பட்டபின் நடைபெறும் தேர்வில் யாரெல்லாம் தேறுகிறார்கள், யாரெல்லாம் தவறுகிறார்கள் என்று பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் சோதனைதான் இது. ஆனால் மனிதர்கள், ‘வினாத்தாட்களுக்கு பதிலாக எங்களுக்கு விடைத்தாட்கள் வழங்கப் பட்டிருந்தால் நாங்கள் அனைவருமே எளிதாக தேறியிருப்போமே’ என்கிறார்கள்.

“(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லா?வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக்
கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லா? மறுமை நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.‘ (22: 68-69)

“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:20)

இந்த விளக்கங்களை எழுத தூண்டுகோலாக இருந்த பதிவை எழுதிய சகோதரர் எழில் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
///


சகோதரர் சுவனப்பிரியன் அவர்களின் விளக்கத்தின் மீது கேள்விகள் வைத்தபோது கீழ்க்கண்டதை குறித்திருந்தேன்.

முதலாளி ஒரு வேலைக்காரனை ஒருவரிடம் அனுப்பி, இவன் சொல்வது படி நடவுங்கள். இவன் சொல்வது படி நடக்கவில்லை என்றால், உங்களை கடுமையாக தண்டிப்பேன் என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

பிரச்னை என்னவாயிற்று என்றால், நான்கைந்து பேர்கள் இப்போது என்னைத்தான் முதலாளி அனுப்பினார். நான் சொல்வது போலத்தான் நீ நடக்கவேண்டும். இல்லையேல் உன்னை முதலாளி கடுமையாக தண்டிப்பார் என்று சொல்கிறார்.

இவர் வந்த வேலைக்காரர்களிடம் கேட்கிறார். சரி. உங்கள் முதலாளி தன்னுடைய வேலைக்காரன் தான் இவர் என்று அத்தாட்சி ஏதும் கொடுத்தாரா? என்று கேட்கிறார். அதற்கு எல்லோரும்,

"உன்னுடைய மூளையை உபயோகித்து கண்டுபிடித்துக்கொள். கொடுக்க வேண்டிய அத்தாட்சி எல்லாம் கொடுத்திருக்கிறார். இதென்ன? வினாத்தாட்களுக்கு பதிலாக விடைத்தாட்கள் கேட்கிறாய்? நான் தான் அந்த இறைதூதர். நானா இவரா என்று தர்க்கம் செய்துகொண்டிருக்கிறாய், முரண்பட்டுக்கொண்டிருக்கிறாய். அது நீ செத்தவுடன் தான் தெரியும். யார் உண்மையான வேலைக்காரன் என்பது முதலாளிக்கு மட்டும்தான் தெரியும். அத்தாட்சி கொடுப்பார் என்று எதிர்பார். அத்தாட்சி கொடுப்பார் என்றுதான் நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்." என்று சொல்கிறார்கள்.

இவர்களை எதிர்கொள்ளும் மனிதர் என்ன முடிவு எடுப்பார்?


நீங்கள் கூறுவது இதுபோலத்தான் உள்ளது என்று நான் கூறுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

வேலைக்காரரை கேட்டவரின் நிலையை யோசித்துப்பாருங்கள். சாதாரண வேலைக்கே எத்தகைய அத்தாட்சிகளை வேலைக்காரரிடமிருந்து எதிர்பார்ப்பீர்கள். வாழ்வா சாவா என்பது போன்ற பிரச்னையில் எதனை வைத்து முடிவு செய்வீர்கள் என்று கேட்கிறேன்.

--
மீண்டும் பழைய கேள்வியை நினைவூட்டுகிறேன்.


நீங்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?


ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியோ குரான் பற்றியோ என் கேள்வி இல்லையென்றாலும், அதனையே நீங்கள் மேற்கோள் காட்டுவது எனக்கு பிரச்னையாக முடிகிறது. ஏனெனில். நான் அந்த வசனங்களையும், முஹம்மது பெருமானார் பற்றிய வரலாற்று நிகழ்வுகளையும் விமர்சிக்க விரும்பவில்லை.

இருப்பினும் நீங்கள் தொடர்ந்து ஜனாப் முஹம்மது பெருமானர் வரலாற்று நிகழ்வுகளையும் குரான் வசனங்களையும் குறிப்பிட்டு ஆதாரம் காட்டி வருகிறீர்கள். இந்த குரான் வசனங்களும், வரலாற்று நிகழ்வுகளும் இயேசுவுக்கு முந்தைய காலத்தில் இல்லை. எனவே அதன் அடிப்படையில் இறைதூதரை கண்டறிய முடியாது என்பதனை குறிப்பிட்டுக்காட்டுகிறேன்.

இருப்பினும் நீங்கள் கூறியுள்ள வசனங்களை அந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் கூறினார்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஆகவே அந்த குரான் வசனங்களை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நாள் ஒருவர் " ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்." என்று கூறுகிறார்.

இன்னொருநாள் "இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘" என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

"அய்யா, நேற்று அத்தாட்சி கொடுத்தாய்விட்டது என்று கூறினீர்கள், இன்று அத்தாட்சி வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறுகிறீர்கள்? அத்தாட்சி வந்ததா இல்லையா?" என்று கேட்கமாட்டீர்களா?

--
நீங்கள் சொல்வதை இப்படி புரிந்துகொள்கிறேன். சரியா என்று விளக்குங்கள்.

இறைவன் இரண்டு சோதனைகளை வைத்திருக்கிறான். ஒன்று யார் உண்மையான இறைதூதர் என்று கண்டுபிடிப்பது. அடுத்தது அந்த இறைதூதர் சொன்னபடி வாழ்வது. இரண்டில் ஒன்றில் தோற்றாலும் நரகம்தான்.

இறைவன் இறைதூதரை நமக்கு அனுப்பி எப்படி சரியாக வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், நமக்கு அது தெரியாது என்ற காரணத்தினால்தானே? நாமாக சிந்தித்து எப்படி நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பது நமக்கு தெரியாததால், அல்லது நமது சிந்தனைத்திறன் ஏற்புடையதாக இல்லை என்பதால்தான் இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலையே வருகிறது.

வினாத்தாளை கொடுக்கும் கணக்கு வாத்தியார் எப்படி விடையை கண்டுபிடிக்கும் முறை என்பதை சொல்லித்தர வேண்டும். அதன் பின்னால் தான் பரிட்சை வைக்க வேண்டும் அல்லவா?

அப்போது வினாத்தாள் கொடுத்தால், சொல்லிக்கொடுத்த முறையை பயன்படுத்தி விடையை ஒரு சிலர் கண்டுபிடிக்கலாம். அவ்வாறு சொல்லிக்கொடுத்தும் விடையை கண்டுபிடிக்காமல் போகலாம்.

அதது அவரவர் அறிவுத்திறனைப் பொறுத்தது.
ஆக முன்னாலேயே ஒருவர் இறைதூதர் என்று கண்டுபிடிக்கும் முறை சொல்லித்தரப்பட வேண்டும். அதன் பின்னால் பரிட்சை வைத்து, பஹாவுல்லா இறைதூதரா, முஹம்மது இறைதூதரா, ஜப்பானிய பேரரசர் இறைதூதரா என்ற கேள்வியை கேட்கலாம்.

எப்படி ஒரு இறைதூதரை கண்டுபிடிப்பது என்ற முறையை ஒன்றுமே சொல்லித்தர மாட்டேன். ஆனால் நீ விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது சரியல்ல.

நீங்களே சிந்தித்து விடையை கண்டுபிடிக்கும் முறையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள். அதனைத்தான் நான் அப்போதிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். விடையை
கண்டுபிடிக்கும் முறை என்ன? நீங்கள் சிந்தித்து கண்டறிந்த முறை என்ன?

-
என் கேள்விகளுக்கு மதித்து பதில் கூறும் இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள் உரித்தாகுக.

Saturday, October 21, 2006

இறைதூதர் பற்றி- சகோதரர் சுவனப்பிரியனுக்கு

அன்பு சகோதரர் சுவனப்பிரியனுக்கு,

///
சகோதரர் எழிலுக்கு!
//உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள். //
எந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவினேன் என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.
//


மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வாறு நான் எழுதியதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு சில இடங்களில் நீங்கள் இவ்வாறு எழுதியது அதன் மீது தொடர்ந்து விவாதம் நடப்பதை நீங்கள் விரும்பவில்லை என்ற தோற்றத்தை தந்தது. அவ்வள்வே.

///
//நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//
'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் நபிமார்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில்
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'
2 : 213 - குர்ஆன்
ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல் தகுதி அவருக்கு இறைவனிடம் இருந்து வேதம் வர வேண்டும். ஒவ்வொரு தூதருக்கும் தான் வேதங்களை
அருளியதாக இறைவன் குர்ஆனிலும் இதற்கு முந்திய வேதங்களிலும் குறிப்பிடுகிறான்.
//


மிகச்சரியான வார்த்தை. இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல்தகுதி அவருக்கு இறைவனிடமிருந்து வேதம் வரவேண்டும்.

அப்படி வரும்போது அது இறைவனிடமிருந்துதான் வருகிறது என்ற அடையாளமும் வேண்டும். இல்லையெனில் அது உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்த வேதம்தானா என்ற சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது.

அதற்கு கீழே இன்னொன்றும் எழுதியிருந்தேன். அதாவது "இந்த காலத்தில் உங்களிடம் குரான் அல்லது இயேசுவின் போதனைகள் இல்லை ஆகவே அதனை மேற்கோள் காட்டமுடியாது" என்று குறித்திருந்தேன். அதனை உங்கள் பதிலில் நீக்கிவிட்டீர்கள். இருப்பினும் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன்.

//
என்னிடமும் வேதம் இருக்கிறது என்று யாரும் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் இறைவனின் வார்த்தைக்கும் மனிதனின் வார்த்தைக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு அரபி மொழி தெரிந்தவர்கள் குர்ஆனின் போதனைக்கும், முகமது நபியின் போதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதில் விளங்கிக் கொள்வார்கள். குர்ஆனின் எழுத்து நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும். முகமது நபியின் போதனைகளோ நாம் சாதாரணமாக உரையாடுவது போன்று சாதாரண மொழியில் இருக்கும். இதன் வித்தியாசத்தை மொழி பெயர்ப்புகளிலேயும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். மேலும் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளோடு மோதாமலும் அத்தகைய வசனங்கள் இருக்க வேண்டும். எல்லா காலத்துக்கும் பொருந்தியும் வர வேண்டும்.
//


தயவுசெய்து குரான் உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்ததா என்று கேட்கவில்லை. இருப்பினும் அதனை உதாரணமாக பயன்படுத்துகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும் என்று சொல்வது subjective. ஒருவருக்கு உயர்ந்த தரமாக தோன்றுவது மற்றொருவருக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம். ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கிறது என்று பத்து பேர் எழுதியதை மேற்கோள் காண்பித்தால், அதே புத்தகத்தின் நடை மிகச்சாதாரணமானது என்று இன்னொரு பத்து பேர் எழுதியதை வேறொருவர் மேற்கோள் காட்டலாம். அந்த புத்தகத்தை இறைவனின் வேதம் என்று கூறும் நபர்கள் அது மேலான நடை என்றும் அந்த இறைதூதரை ஒப்புக்கொள்ளாதவர்கள் அது கீழான நடை என்றும் சொல்லலாம். (உதாரணமாக கிரிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)

காளிதாசரின் காவியங்கள் எந்த வித சமஸ்கிருதக்கவிதையையும் விட மிக மிக உயர்ந்தவை என்பது என் எண்ணமாக இருக்கலாம். அதன் கவித்துவமும் நடையும் மிகச்சிறந்தவை என்று நான் கருதலாம். நீங்கள் கருதாமல் இருக்கலாம். கம்பனின் கவி அமுது எட்டிய உயரங்களை இன்னமும் உலகத்தின் எந்த மொழிக்கவிதையும் எட்டியதில்லை என்று நான் கருதலாம். நீங்கள் அப்படி கருதாமல் இருக்கலாம். இவர்கள் இறைதூதர்களா? அவர்களது புத்தகங்களுக்கு குரான் போன்ற அந்தஸ்து உண்டா? கம்பன் சாதாரணமாக பேசுவதற்கும் கவிதையாக பொழிவதற்கும் வித்தியாசம் இருந்திருக்கும். அதனால் கம்பன் இறைதூதராக ஆவாரா?

அறிவியல் சம்பந்தமாக எடுத்துக்கொள்வோம். ஒரு இறைதூதரை பின்பற்றுபவர்கள் அவரது புத்தகத்தில் உள்ளவை எல்லாம் அறிவியலை ஒத்து இருக்கின்றன என்று வாதிடலாம். மறுசாரார் அப்படி இல்லை என்று வாதிடலாம். இதனை இரண்டாம் நிலையில் வைப்போம்.
ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?

//
அடுத்து அந்த இறைத் தூதர்களுக்கு கொடுக்கப் பட்ட அதீத சக்திகள். அந்த மக்கள் தூதர்களிடம் அத்தாட்சியைக் கேட்கும் போது இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான். ஏசு இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறியதாக குர்ஆன் சொல்லும் போது...'உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து அதில் ஊதுவேன். இறைவனின் விருப்பப்படி அது பறவையாக மாறும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும் குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.நீங்கள் உண்பதையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்'
3 : 49 - குர்ஆன்
அந்த மக்களை இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வதற்காக இறைவன் இது போன்ற சக்திகளை அந்த தூதர்களுக்குத் தருவான். இதைப் பார்த்தும் இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வர். முகமது நபி காலத்தில் சந்திரன் பிளந்த அற்புதத்தை கேரள அரசன் சேரமான் பெருமாள் தன் சாளரத்தின் வழியாகப் பார்த்து அதிசயிததார். பிறகு தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் முந்தய வேதங்களை ஆராய்ந்து அரபுலகில் தூதர்அவதரித்திருப்பதன உண்மையை விளக்குகின்றனர். அதன் பிறகு அரசர் இஸ்லாமியராக மாறி முகமது நபியைச் சந்திக்க மெக்கா நோக்கி புறப்பட்டதையும் நாம் நம் நாட்டு வரலாறுகளில் பார்க்கிறோம். கண்ணதாசனும் கல்கியில் 'சேரமான் காதலி' என்ற தொடரை எழுதியதையம் நாம் அறிவோம். இது போன்று பல அற்புதங்களினால் நாம் ஒருவரை இறைவனின் தூதர் என்று முடிவு செய்கிறோம்.
//


அடுத்து, நீங்கள் குறிப்பிடுவது போன்ற வித்தைகளை செய்யும் ஏராளமானவர்கள் இந்தியாவில் இருந்தார்கள். ஏன் இன்னமும் இருக்கிறார்கள். இன்றும்கூட பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலாம். குஷ்டத்தை இன்று மருத்துவர்கள் நீக்குகிறார்கள். பிறவிக்குருடரையும் இன்று பார்வை உள்ளவராகா மாற்றும் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. (பரிசோதனையில் இருக்கிறது). இந்த மருத்துவர்களும் சுவிசேஷ பிரச்சாரகர்களும் இறைதூதர்களா?

ஒரு மேஜிக் ஷோவின் போது, நான் வீட்டிலிருந்து எடுத்து வந்த ரூபாய் நோட்டின் எண்ணை மந்திரவாதி சரியாகச் சொன்னார். இப்படிப்பட்ட திறமையான மந்திரவாதி கூறுவதையும் இறைதூதர் கூறுவதையும் எப்படி வித்தியாசப்படுத்தி பார்க்கப்போகிறீர்கள்?

சந்திரன் இரண்டாக தெரிவது முகம்மதுவின் சாட்சியம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் இன்னொரு முறை கூறுகிறேன். முகம்மது இறைதூதரா அல்லவா என்பது என் கேள்வி அல்ல. இரண்டு மூன்று நபர்கள் ஆளுக்கொரு கண்கட்டு வித்தை செய்து தனது சாட்சியமே இறைவன் அளித்தது என்று கோரினால், நாம் எப்படி உண்மையான இறைதூதரை கண்டுபிடிப்பது என்பதுதான்.

(ஆனால், சந்திரனோ சூரியனோ இரண்டாக தெரிவது கானல் என்று சொல்லப்படும் மிராஜ் வகையைச் சார்ந்த ஒரு நிகழ்வு. ஒரு சந்திரன் இரண்டாக தெரிவது அதிசயமல்ல என்று உங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன். வெப்பக்காற்று மேலெழும்போதோ அல்லது குளிர்காற்று மேலெழும்போதோ, அந்த காற்று ஒரு கண்ணாடி போல நின்று அந்த காற்றின் ஒரு பக்கத்திலிருக்கும் சந்திரனை பிரதிபலித்து இரண்டாக காட்டும். இதன் பெயர் லாட்டரல் மிராஜ் lateral mirage. பக்கவாட்டில் இன்னொரு சந்திரன் தோன்றும் லாட்டரல் மிராஜ் அபூர்வமாக தென்படும். ஆனால் அது அதிசயமல்ல.இன்னொருவர் சூரியன் இரண்டாக தெரியும்போது, என் சாட்சியம் இது என்று கூறினால், நாம் எப்படி அதனை புரிந்து கொள்ள வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு மிராஜ் நடக்கும்போது அதனை ஒருவர் இதுதான் என் சாட்சியம் என்று ஏமாற்றினால் நம்மால் எப்படி அடையாளம் காண முடியும்?)

ஆகவேதான், எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவான அடையாளம் ஒன்றை கேட்கிறேன். இந்திய தூதுவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இலச்சிணையை இந்திய அரசு கொடுப்பது போன்று, இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.

///
//இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே?
பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்//

'அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.'
2 : 117 -குர்ஆன்
'இறைவன் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்ததாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.'
2 : 118 - குர்ஆன்.
தன்னுடைய அடியானான எழில் மற்றொரு அடியானான சுவனப்பிரியனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று இறைவனுக்குத் தெரிந்ததால்தான் பதிலை இறைவன் குர்ஆனிலேயேத் தருகிறான்.
//


நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை?

சாதாரண மக்களும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடியதாகத்தானே இறைதூதரின் குணாம்சங்கள் இருக்க வேண்டும்? இவ்வாறு கேள்வி கேட்கும் வரைக்கும் மக்களை வைத்திருப்பது ஒரு முக்கியமான இறைதூதரை அனுப்பிவிட்டு அதற்கு தக்க சாட்சியங்களை அனுப்பாமல், கேள்வி கேட்பவரை பார்த்து "அறியாதோர்" என்று சரியாகப்படவில்லை. இதனைப்பற்றி இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் பதிவு சம்பந்தமாக எழுதியதில் எழுதியிருக்கிறேன்.

நம்பிக்கை கொள்ளும் சமுதாயம் என்றால் என்ன? யாரேனும் ஒருவர் தன்னை இறைதூதர் என்றுகூறினால் உடனே நம்பும் சமுதாயமா? அதாவது எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. எந்த ஆதாரமும் கேட்கக்கூடாது. எந்த சான்றும் கேட்கக்கூடாது. நான் இறைதூதர் என்று ஒருவர் கூறினால் உடனே நம்பிவிடவேண்டும் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் இரண்டு பேர் நான் இறைதூதர் அவர் இறைதூதர் இல்லை என்று கூறினால் யாரை நம்புவீர்கள்? இருவருமே ஒரு சில வித்தைகளை
செய்து காட்டுகிறார்கள். இருவரும் எனக்கு இறைவன் கொடுத்த சான்று இது என்று கூறுகிறார்கள். யார் உண்மையான இறைதூதர் என்று நம்புவீர்கள்?

//
ஒரு முதலாளி தன் வெலைக்காரனை அனுப்பி தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முதலாளியால் கடையில் சென்று வாங்குவதற்கு இயலாது. அதனால்தான் அவர் வேலையாட்களை வைத்துள்ளார் என்று நாம் கூற மாட்டோம். அவரால் அந்தக் காரியத்தை செய்ய முடியும்.
என்றாலும் அவர் தனது அந்தஸ்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ கூட வேலையாட்களை வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தை உங்கள் கேள்வியோடு பொருத்திப் பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்.
இறைவனால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் இங்கு மனிதர்களை நேர்வழிப் படுத்த வேண்டும். மனிதர்களை நேர்வழிப் படுத்த மனிதர்களைத்தான் தூதராக அனுப்ப முடியும். ஒரு மனிதன் எப்படி இறை வணக்கம் புரிவது? எப்படி திருமணம் செய்து கொள்வது? கொடுக்கல் வாங்கலை எவ்வாறு அமைத்துக் கொள்வது? மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடந்து கொள்வது? என்பதை எல்லாம் ஒரு மனிதன்தான் செய்து காட்ட முடியும். பிரச்சாரம் பண்ணும் போது எதிர்ப்புகள் வரலாம். நாடு கடத்தப் படலாம். சில நேரங்களில் கொலையும் செய்யப் படலாம். இதற்கு முந்திய சமுதாயங்களில் கூட சில நபிமார்கள் கொல்லப் பட்டும் இருக்கிறார்கள். சில நபிமார்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக இறைவன் மனிதனையே அனுப்புகிறான். இந்த ஏற்பாடுஇல்லாமல் வேறொரு ஏற்ப்பாட்டை இறைவன் செய்திருந்தால் 'மனிதர்களாகிய எங்களுக்கு எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக் கூடாதா?' என்று மாற்றியும் கேட்பான் மனிதன்.
இறைவனே மிக அறிந்தவன்.
///


கேள்வி மிக எளியது. ஒருவர் இறைதூதர் என்பது யார் யாருக்கெல்லாம் நிச்சயமாக தெரியும்? ஒன்று அந்த இறைதூதருக்குத் தெரியும். அவரை அனுப்பிய இறைவனுக்குத் தெரியும். அல்லது இறைவனிடமிருந்து வானவர் வந்திருந்து மக்களுக்கு சாட்சியம் சொன்னால், அந்த வானவருக்கு தெரியும்.

ஒருவர் வந்து "வானவர் வந்து சொல்ல வேண்டியதுதானே என்று கேட்கிறாய். சாட்சி கொடு என்று கேட்கிறாய். அதெல்லாம் காட்டியும் பல இறைதூதர்களை நீ கொன்றுவிட்டாய். அதனால், நான் உனக்கு எந்த விதமான சாட்சயமும் தரமாட்டேன். நீ நம்பிக்கையுள்ள சமுதாயமாக என்னை நம்ப வேண்டும்" என்று சொன்னால் நீங்கள் உடனே அவரை இறைதூதர் என்று நம்ப ஆரம்பித்துவிடுவீர்களா? ஹிட்லர் "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்று மக்களை நம்ப வைத்தார். இங்கிலாந்து பேரரசி தன்னை கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்கிறார். இதே போல பிரான்ஸ் அரசர்களும் கூறிக்கொண்டார்கள். பஹாவுல்லா தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்டார். ஜப்பானிய அரசர் தன்னை இறைவனின் வம்சம் என்று கூறிக்கொண்டு 1600 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வம்சத்தினராக ஆட்சி செய்துவருகிறார்கள்.

இப்படி கேள்வி கேட்காமல் நம்புபவர்களை, நம்பிக்கையுள்ள சமுதாயம் என்று இறைவன் போற்றுவாரா? மேற்கண்டவர்களில் யார் உண்மையைச் சொல்கிறார் என்று நாம் நம்புவது? கடவுள் உன்னை நியமித்தார் என்பதற்கு சாட்சியம் கொடு என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

சரி அப்படி ஒரு தெளிவான அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்பினால், மனிதன் "ஒரு அடையாளமும் இல்லாமல் எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக்கூடாதா?" என்று கேட்பானா?

மனிதனையே அனுப்பட்டும்.

ஆனால் எந்த வித சந்தேகத்தும் இடமின்றி தெளிவான அடையாளத்துடன் அனுப்பட்டும் என்று சொல்கிறேன். பொய் இறைதூதர்களிடம் ஏமாந்து விடாமல் காப்பதற்கு மிகவும் அறிந்த இறைவன் ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா?

கடவுள் ஒரு சாட்சியம் கொடுத்தால் அதனை மனிதனால் மறுக்க முடியுமா? யானையை யானை என்று ஒரு குழந்தை கூட சொல்லிவிடும். புறாவை புறா என்று குழந்தை கூட சொல்லிவிடும். இதற்கு நிரூபணம் வேண்டாமே? அப்படிப்பட்ட தெளிவான குழப்பமில்லாத அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்புவது இறைவனுக்கு கடினமானதா என்ன?

முதலாளி வேலைக்காரனை வெறுமே வைத்துக்கொள்வதில்லை. ஒரு காரணத்துடன் தான் வைத்துக்கொள்கிறார். அவருக்கு நிறைய வேலை இருக்கலாம். அவருக்கு இந்த சின்ன வேலையைச் செய்வதற்கு நாமே ஏன் செய்ய வேண்டும். இவர் செய்யட்டும் என்று ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், அந்த வேலைக்காரனை ஒருவரிடத்தில் அனுப்பி "என் சார்பாக இவனை அனுப்புகிறேன். இவன் சில விஷயங்களை எப்படி செய்வது என்று சொல்லித்தருவான். அது படி நடவுங்கள்" என்று அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது அந்த முதலாளி இந்த வேலைக்காரன், என் வேலைக்காரன் தான் என்பதற்கு அனுப்பியவரிடம் சாட்சியம் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் கண்டவனெல்லாம் நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன் என்று சொல்லிக்கொள்வான். முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.

முதலாளி உண்மையிலேயே ஒரு வேலைக்காரனை அனுப்பினால், அவர் நிச்சயம் குழப்பமில்லாமல் தன்னுடைய வேலைக்காரனை அடையாளப்படுத்திவிடுவார்.

அப்படி குழப்பமில்லாத தெளிவான அடையாளம் கொண்ட வேலைக்காரன் வரவில்லை என்றால், முதலாளி எந்த வேலைக்காரனையும் அனுப்பவில்லை என்றுதான் பொருள்.


இந்த கருத்துக்களை யோசித்து எழுத தூண்டிய சகோதரர் பொதக்குடியன், சகோதரர் இப்னுபஷீர் அவர்களுக்கும், சகோதரர் சுவனப்பிரியனுக்கும் மிக்க தாழ்மையான நன்றிகள்

Thursday, October 19, 2006

இப்னு பஷீர் அவர்களின் இரண்டாம் பதிவு

இப்னு பஷீர் அவர்களின் இரண்டாம் பதிவு

இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் நான் அவருடைய முதல் பதிவுக்கு பதில் என்று எழுதியிருந்ததையும் மதித்து அதற்கு பதில் எழுதியிருக்கிறார்.

அவருக்கு என் பணிவான நன்றிகள். மேலும் சில கேள்விகளையும் சுய விளக்கங்களையும் வைக்கிறேன். இதனையும் அவர் நடுநிலையோடு வாசிக்கும்படியும், அவரை இது புண்படுத்துவதற்காக எழுதவில்லை என்பதையும் மீண்டும் குறிக்கிறேன். அவர் எழுதியவற்றில் பல அனுமானங்கள் இருக்கின்றன. அவை எனக்கு புரியாதவை என்றும் தெரியாதவை என்பதாலுமே இவை எழுதப்படுகின்றன என்பதையும் தெளிவு படுத்திவிடுகிறேன். நீங்கள் கூறிய பதில்களை கூகுளில் சரிபார்த்து எனக்கு பட்ட இணைப்புக்களையும் கொடுத்திருக்கிறேன். சரியா என்று பாருங்கள்.

//
இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? - 2

அன்புச் சகோதரர் எழில் அவர்கள் எனது முந்திய பதிவு தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி ஒரு தனி பதிவிட்டிருந்தார். இஸ்லாமை விமரிசித்து எழுதும் ஒரு சில வலைப்பதிவர்களைப் போலல்லாது மிக நாகரீகமான முறையில் எழுதியிருக்கும் இனிய சகோதரர் எழில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோ. எழில்,

ஒரு விஷயத்தை முதலில் தெளிவு படுத்தி விடுவது நலம் பயக்கும் என்று நினைக்கிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

தூதுத்துவம் என்பது யூதம், கிருஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை. இவர்களுக்கிடையில் வித்தியாசம் என்பது, இவர்கள் யார் யாரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்தான். யூத மதம் ஆப்ரஹாமுக்கு (நபி இப்ராஹீம் (அலை)) பின் வந்த ஏசு உட்பட்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கிருஸ்துவம் ஏசுவுக்கு (நபி ஈசா (அலை)) பின் வந்த முஹம்மது (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்லாம் இவர்கள் அனைவரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதோடு, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு தூதர்கள் யாரும் இல்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறது.
//

யூதம் மிகவும் பழையது என்று அறிகிறேன். அவர்களில் பல இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறேன். ஆபிரஹாமுக்கு பிந்தைய இறைதூதர்களை யூதர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்

http://www.shamash.org/lists/scj-faq/HTML/faq/12-11.html

ஆப்ரஹாமுக்கு பின் 46 யூத இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். 7 பெண் இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் குறிப்பிடுகிறது.

கிரிஸ்து தன்னை புரோபட் என்று கோரவில்லை. கிறித்து தன்னை இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆகவே யூதர்கள் அவரை ஒரு புரோபட் என்று அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது சரியாக பொருந்தாது என்று நினைக்கிறேன். ஆகவே யூதமும் இஸ்லாமும் மட்டுமே இறைதூதர்களை கொண்டவை என்பதுதானே சரியாக இருக்கும்?

இஸ்லாமுக்கு பின்வந்த பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் போன்ற மதங்கள் முகம்மதை இறைதூதராக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் பஹாவுல்லா போன்றவர்களை இறைதூதர் என்று ஒப்புக்கொள்வதில்லை.

தூதுத்துவம் என்பது மேற்கண்ட மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது இல்லையே?

சொல்லப்போனால், அந்த கால சமூகங்களில் ராணுவ தலைவர்களும், ராணுவ தலைவர்களுக்கு ஆலோசனை தரும் குருக்களும், அரசர்களும் தங்களை ஆண்டவனின் அருள் பெற்றவர்களாகவே சித்தரித்துக்கொண்டனர்.

http://en.wikipedia.org/wiki/Divine_right_theory

பெரும்பாலான ஐரோப்பிய அரசர்கள் தங்களை கடவுளின் அருள் பெற்றவர்களாகவும், தங்களை எதிர்ப்பவர்களை கடவுளுக்கு எதிராக நடந்துகொண்டதாக சிரச்சேதம் செய்ததையும் பார்க்கலாம். ஜப்பானிய அரசர்கள் தங்ளை கடவுளின் சந்ததியில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இன்றும் ஜப்பானிய அரசரை கடவுளாகக் கருதும் மதம் ஜப்பானில் இருக்கிறது. உலகத்தில் ஜப்பானிய அரச வம்சம் மட்டுமே வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. உலகத்தில் இந்த ஒரு அரச வம்சத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட பெருமை உண்டு. எகிப்திய பேரரசர்களும் தங்களை கடவுள் வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இந்திய அரசர்களும் தங்களை சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டனர். இதில் கவனித்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு விதமான வித்தியாசமான முறையில் கடவுளின் பெயரை பயன்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.

ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கவும், மக்களை கேள்வி கேட்காமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கவும் அந்த காலத்திலும் இந்தகாலத்திலும் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்று கருதுகிறேன். (என்னைப் பொறுத்தமட்டில் அது தவறு அல்ல).

ஆனால், இன்று என்னிடம் உண்மையிலேயே ஜப்பானின் அரசர் கடவுளின் வம்சமா என்றோ அல்லது இங்கிலாந்து ராணி கடவுளால் நியமிக்கப்பட்ட பேரரசியா என்றோ கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? அதே பதிலைத்தான் நான் ஜனாப் முகம்மது நபி அவர்களுக்கும் கூற முடியும்.

///
இறைத்தூதர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. அவர்கள் எந்த தனி நபராலோ, அமைப்பாலோ
நியமிக்கப் படுவதுமில்லை. உண்மையான இறைத்தூதர்கள் தக்க சான்றுகள் இன்றி தம்மைத் தாமே
இறைத்தூதராக அறிவித்துக் கொள்வதுமில்லை. அவ்வாறு பொய்யாக அறிவித்துக் கொண்டவர்கள் தம்
வாழ்நாட்களிலேயே பொய்ப்பிக்கப் பட்டதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு
வேண்டுமானால் பா. ராகவன் தனது ‘நிலமெல்லாம் ரத்தம்’ நூலில் குறிப்பிடும் ‘ஷபாத்தி இஜ்வி’ என்ற
பொய்த்தூதரை சொல்லலாம்.///

நீங்கள் முன்னரே குறிப்பிட்ட பக்கத்தில் ரோமானிய அரசர் கூறியது போல பலரும், இறைதூதராக இருந்தால் செல்வாக்காக இருக்கலாம் என்று காப்பி அடிக்க முயன்றிருக்கலாம்.

பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் மதம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நடுவேயும் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பல பக்கங்கள் குறிப்பிடுகின்றன.

மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜப்பானிய பேரரசரின் வம்சம் 1500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால், அவரை உண்மையிலேயே கடவுளின் வம்சம் என்று கூறவியலுமா?

//
இறைத்தூதர்களை அனுப்பிய இறைவன் அவர்கள் அனைவரையுமே தகுந்த அத்தாட்சிகளுடன் அனுப்பியதாக குர்ஆனில் பல இடங்களில் சொல்கிறான். ( ‘தமிழில் குர்ஆன்’ என்ற இந்த தளத்தில் ‘அத்தாட்சி’ என்ற சொல்லை தேடிப் பார்த்தால் ஏராளமான வசனங்களைப் பார்க்கலாம். அல்லது, இந்த வலைப்பக்கத்திலேயே உள்ள ‘Search In Quran’ -ல் ’signs’ என்ற ஆங்கில வார்த்தையை தேடலாம்.) ஏக இறைவன் மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் அந்த அத்தாட்சிகளை உணர்ந்து அந்த இறைத்தூதரை ஏற்றுக் கொண்டார்கள்.

நம்பிக்கை கொள்ளாத பிறர் “இந்த ரஸ¥லுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்)” - (குர்ஆன் 25:7-8)

இறைத்தூதர்கள் இது போன்ற அசாதாரணமான அத்தாட்சிகள் இன்றி அனுப்பப் பட்டதை, இறைவன் மனிதர்களை சிந்திக்கத் தூண்டுகிறான் என்பதற்கு ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். தனது இருப்பை அறிவிப்பதற்கு ஏராளமான சான்றுகளை அளித்த இறைவன், அவற்றைப் பற்றி சிந்தித்து உணர்ந்து கொள்ளும்படி மனிதர்களை ஏவுகிறான். பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே ஆறாவது அறிவு எனப்படும் சிந்தனைத் திறன் தான். அத்தகைய திறன் படைத்த மனிதர்கள் ‘எனது சிந்தனைக்கே வேலை வைக்காமல், கேஜி பிள்ளைகளுக்கு புரிவது போல எனக்கும் அத்தாட்சியை காட்டு’ என்று அடம் பிடித்தால் எப்படி?

எனது முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்த உரையாடல், இறைத்தூதர்களுக்கான இலக்கண வரையறை அல்ல. அப்படி ஒரு இலக்கணத்தை இதுவரை யாரும் வரையறுக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாத்திற்கு கடும் எதிரியாக இருந்த ஒருவரின் வார்த்தைகளைக் கொண்டே, முஸ்லிமல்லாத ஒரு மன்னர் மு?ம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அந்த உரையாடலை எடுத்துக் காட்டினேன். அதாவது, புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களுக்கு இந்த எளிய அத்தாட்சிகளே போதுமானதாக இருக்கிறது. அந்த விருப்பம் இல்லாதவர்களுக்கு எவ்வளவு அசாதாரண அத்தாட்சிகள் காண்பிக்கப் பட்டாலும் போதாது. மோஸஸ் (நபி மூசா (அலை)) அவர்களின் சமூகத்தாரிடம், இறைவன் ‘தூர்’ மலையை அவர்களின் தலைக்கு மேல் உயர்த்தி அவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்த தவ்ராத் வேதத்தை உறுதியுடன் பற்றிக் கொள்ளும்படி வாக்குறுதி வாங்கிய பின்பும் அவர்களில் பெரும்பாலோர் அதற்கு மாறு செய்தனர் என்பது இங்கு நினைவு கூறத் தக்கது.
///

சிந்தனைத்திறன் இருப்பதால் தானே கேள்வி கேட்கிறார்கள். சிந்தனைத்திறன் இருப்பதால்தான் ஒரு
வரையறை செய்கிறார்கள். மேலே ஈரான் நாட்டு இந்திய நாட்டு தூதுவர் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.
ஈரான் நாட்டின் தூதுவன் என்று தன்னை கூறிக்கொண்டு 5 பேர்கள் இந்தியாவின் அரசாங்கத்திடம்
வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் வெறுமே "நான் தான் ஈரான் நாட்டின் தூதுவன்" என்று
ஜனாதிபதியிடம் சொன்னால் அவர் என்ன செய்வார்? ஆதாரம் கொடுங்கள் என்று கேட்பார்.

அவர் கொடுத்த ஆதாரத்தை ஈரான் நாட்டுக்கு போன் போட்டு எது சரி என்று கேட்கலாம். அல்லது
முந்தைய ஈரான் நாட்டு தூதுவர் கொண்டுவந்திருந்த அத்தாட்சி பத்திரத்துடன் ஒப்பிட்டு சரி இதுவும் அதே
போல்தான் இருக்கிறது. அதே முத்திரை இலச்சிணை இருக்கிறது. சரி இவரும் ஈரான் நாட்டு தூதுவர் என்று
அறியலாம்.

இறைவன் அனுப்பும் தூதுவர், உண்மையிலேயே இறைவன் அனுப்பியவர்தானா என்று நம்மால் இறைவனுக்கு போன்
போட்டு கேட்க முடியாது.

ஒருவர் இறைதூதர்தான் என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று அந்த இறைதூதர் மற்றவர் இறைவன்.
வேறு யாருக்கும் தெரியாது அல்லவா? அல்லது நீங்கள் சொல்வது போன்று வானவர் மூலம்
சொல்லப்பட்டிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நான் வானவர் என்பதற்கு இந்த அடையாளங்கள் எனக்கு
இருக்கின்றன. (இறக்கைகள், ஒளிவட்டம் ஆகியவை). நான் இவர் இறைதூதர் என்று சாட்சியம் கூறுகிறேன் என்று
கூறலாம். அப்போது மக்கள் குழப்பமின்றி நம்புவார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஒரு அத்தாட்சி கேட்டதில் தவறே
இல்லை. அந்த சாதாரண மக்கள் கேட்ட அத்தாட்சியை கொடுக்காததுதான் தவறு. அத்தாட்சி இல்லை, ஆனால்
என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று கோரினால், மக்கள் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஒருவர்
அதே போல நான் தான் இறைதூதர், எந்த அத்தாட்சியும் நான் கொடுக்க முடியாது. ஆனால், எல்லோரும்
என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் அத்தாட்சி
கேட்கமாட்டீர்களா? அப்படி நீங்கள் கேட்டால் "அறியாதவர்" ஆகிவிடுவீர்களா?

ஆகவே முகம்மது இறைதூதர்தான் என்று எப்படி அறிவீர்கள்? அதற்காகத்தான் சொன்னேன்.

ஈரான் நாட்டு தூதுவர் விஷயத்தில் சில வேளைகளில் அரசாங்கம் மாறலாம். அப்போது லச்சிணையும்
மாறும். ஆனால் இறைவன் விஷயத்தில் இறைவன் ஒருவனே. அவன் அனுப்பும் தூதர்களுக்கு எல்லோருக்கும்
புரியக்கூடிய, ஒரே மாதிரியான எளிய அடையாளம் இருக்க வேண்டுமல்லவா. அதைத்தான் கேட்கிறேன்.

வேறு எந்த மக்களுக்கும் இல்லாத ஒரு அடையாளம், இறைதூதர்களுக்கு மட்டும் இருக்கும் பொதுவான அடையாளம்
இருக்கும்போதுதான் மக்களுக்கு இவர் இறைதூதர் என்று தெரியும்.

இறைவன் வந்து சாட்சி சொல்லாத பட்சத்தில், அல்லது இறைவனிடம் கேட்டு உறுதி படுத்திக்கொள்ள
முடியாத பட்சத்தில்

1) எல்லா இறைதூதர்களுக்கும் ஒரு பொது அடையாளம் இருக்க வேண்டும்
2) இறைதூதர்களுக்கு மட்டுமே அந்த அடையாளம் இருக்க வேண்டும்
3) இறைதூதர்கள் தவிர வேறெந்த மக்களுக்கும் அந்த அடையாளம் இருக்கக்கூடாது.

அப்படி இல்லையென்றால், ஏதோ மந்திரவாதி கூட, தொப்பியிலிருந்து புறாக்களை வரவழைத்துவிட்டு,
அல்லது சுவிசேஷ கூட்டத்தில் செய்வது போன்று மாஸ் ஹிஸ்டீரியா உருவாக்கி முடவர் நடக்கிறார் குருடர்
பார்க்கிறார் என்று நம்ப வைத்துவிட்டு, பிறகு மக்கள் நல்ல வழி நடக்கவேண்டும் என்று பேசிவிட்டு
இறைதூதராகி விடும் அபாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தவறான ஆனால், வெற்றிகரமான
மந்திரவாதியை மக்கள் இறைதூதர் என்று நம்பி கெட்டுப்போய்விடும் அபாயமிருக்கிறது அல்லவா?

அப்படிப்பட்டவர்களிடமிருந்து தெளிவாக தன்னுடைய இறைதூதரை பிரித்துகாட்ட ஒரு தெளிவான
எல்லோருக்கும் புரியக்கூடிய அடையாளத்தை மற்ற யாராலும் காப்பி அடிக்க முடியாத அடையாளத்தை தரவேண்டும்
அல்லவா? கருணையாளனாகிய இறைவனுக்கு மக்களை இப்படி இக்கட்டில் விடுவதில் என்ன பயன்?

இப்படிப்பட்ட குழப்பமான ஒரு கருத்து பிரயோசனமாக இருக்கிறது என்று அவரவர் தன்னை இறைதூதர் என்று கூறிக்கொள்ள இடமளித்திருக்கிறதே. பஹாவுல்லா உண்மையான இறைதூதர் அவரே கடைசி இறைதூதர் என்று பஹாய் மதத்தினர் கூறுகின்றனர்.

நாம் எப்படி நம்புவது? யாரை நம்புவது? எந்த அடிப்படையில் நம்புவது?

///
//நல்ல குடும்பத்தில் பிறப்பவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்லர். .. எளியவர்கள் பின்பற்றுபவர்கள்
எல்லோரும் இறைதூதர்கள் அல்லஸ நற்பண்புகளை போதிப்பவர்கள் அனைவரும் இறைதூதர்களாக இருக்க
வேண்டுமென்பது அவசியமில்லை.//

ஒரு உதாரணம்:

ஒருவர்: “உன் அம்மாவைப் பற்றி கொஞ்சம் சொல்!”

மற்றவர்: “என் அம்மா மிக அன்பானவர், என் மேல் மிக பாசம் உடையவர், தினமும் எனக்கு உணவு
ஊட்டுகிறார், எனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார்”

முதலாமவர்: “இதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? உன் அம்மா உன்னை கண்டிப்பதை நான்
பார்த்திருக்கிறேன். அதனால் அவர் அன்பானவர், பாசமுள்ளவர் என்பது சரியல்ல. உடுப்பி ஹோட்டல் முதலாளி
கூடத்தான் உனக்கு சாப்பாடு போடுகிறார். அவர் என்ன உனக்கு அம்மாவா? சாப்பாடு போடும் எல்லோரும் உனக்கு
அம்மா அல்ல. பள்ளிக் கூட ஆசிரியரும் உனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார். அவரும் உனக்கு
அம்மா இல்லையே! நல்ல விஷயங்களை போதிக்கும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல”

முதலாமவரின் நண்பர்: “வெரி குட். இந்த ஆளுக்கு யாருமே அம்மா கிடையாது என்பதை நிரூபித்து
விட்டீர்கள். வாழ்த்துக்கள்”

மற்றவர்: ??????

இந்த உரையாடல் அபத்தமாக தெரிகிறது அல்லவா? மன்னிக்கவும், உங்கள் கேள்விகள் அப்படித்தான்
எனக்கு தெரிகின்றன.
//

கேள்வி அப்படி இருக்கக்கூடாது. கேள்வி இப்படி இருக்க வேண்டும்.

கேள்வி: இவர் தான் உன் அம்மா என்பதற்கு அடையாளம் என்ன?

மற்றவர்: “என் அம்மா மிக அன்பானவர், என் மேல் மிக பாசம் உடையவர், தினமும் எனக்கு உணவு
ஊட்டுகிறார், எனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார்”

முதலாமவர்: “இதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என் அம்மா உன் மேல் அன்பானவர், பாசமுள்ளவர்.
அதனால் அவர் உன் அம்மாவா? உடுப்பி ஹோட்டல் முதலாளி கூடத்தான் உனக்கு சாப்பாடு போடுகிறார்.
அவர் என்ன உனக்கு அம்மாவா? சாப்பாடு போடும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல. பள்ளிக் கூட
ஆசிரியரும் உனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார். அவரும் உனக்கு அம்மா இல்லையே! நல்ல விஷயங்களை
போதிக்கும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல”

இது சரியா?

நான் கேட்டது, இறைதூதர் என்பதற்கான அடையாளம். அதற்கு நீங்கள் மேற்கண்டவாறு பதில் கூறியதால்,
நான் அப்படி கேட்க நேர்ந்தற்கு மன்னிக்க வேண்டுகிறேன். மேலும் நாம் உலகத்தில் கோடிக்கணக்கான அம்மாக்கள் இருப்பதையும் அம்மாக்கள் பிள்ளைகளை பெறுவதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால் இறைதூதர் என்பது அப்படி அல்ல. ஆயிரம் வருடத்தில் ஒருமுறைதான் நடக்கிறது. அதற்கு ஆதாரம் சாட்சியம் வேண்டாமா?

அவர் இறைதூதர் என்பதற்கான அடையாளத்தை நீங்கள் தரவேண்டும். அந்த அடையாளம் வேறு யாருக்கும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அந்த அடையாளம் இருக்கக்கூடிய எல்லோரையும் நீங்கள் இறைதூதர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன். சரிதானே?

என் பதிவில் ஒரு நபர் பின்னூட்டம் இட்டிருந்தார்.
16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர் என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

முன்னர் ஜனாப் முகம்மதுவை அனுப்பிய இறைவன் பின்னால் குரான் வசனத்தை மாற்ற இன்னொருவரை இறைதூதராக அனுப்பினால், நமக்கு எப்படி தெரியும்? அந்த புதிய இறைதூதரை இட்டுக்கட்டுபவர் என்றுதானே சொல்வோம்? அந்த புதிய இறைதூதர் உண்மையான இறைதூதர்தான் என்று குறிப்பிட நன்கறிந்த அல்லா, நம் மாதிரி சாதாரண மனிதர்கள் நம்புவதற்காக ஆதாரம் கொடுக்க வேண்டுமல்லவா?


//
//முகம்மது நபிகள் பொய் கூறாதவர் என்பதற்கு அத்தாட்சி தாங்கள் வழங்க வேண்டும்ஸமுன்னர் சொன்ன
சொல்லுக்கு மாற்றாக முகம்மது நபி நடக்கவே இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும்//

நான் அத்தாட்சி வழங்குவது இருக்கட்டும். அபூஸ¤·ப்யான் முஹம்மது (ஸல்) அவர்களில் காலத்திலேயே
வசித்தவர். அவர்களை ஒழித்து விடவேண்டும் என்று பல முறை முயன்றவர். அப்படிப்பட்டவரே ‘நபிகளார்
பொய்யுரைப்பார் என சந்தேகப் பட்டதில்லை’ என்றும் ‘அவர் மோசடி செய்ததில்லை’ என்றும் அத்தாட்சி
வழங்கியிருக்கிறாரே, அது போதாதா உங்களுக்கு?
//

போதாது. நம் ஊர் அரசியல்வாதிகளை பார்த்த பின்னாலும் இப்படி சொல்கிறீர்களே நியாயமாக
இருக்கிறதா உங்களுக்கு? :-)

நேற்றுவரை கலைஞர் கருணாநிதியை தூற்றிக்கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி அதிமுகவிலிருந்து திமுக போனதும், கருணாநிதி மாதிரி ஒரு உத்தம புத்திரன், பொய்யே பேசாதவர், சொன்ன சொல் காப்பவர் உலகத்தில் யாருமே இல்லை என்று சூடம் வைத்து சத்தியம் பண்ணுவதை பார்த்ததில்லையா? நேற்று என்ன சொன்னோம் என்பது பத்திரிக்கையில் ஆவணமாக கிடக்கும் இந்த நாளிலேயே இப்படி கட்சி மாறி பேசுபவர்கள் அந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள். சிந்தித்து பாருங்கள்.

///
//யாராவது வெறுப்பு கொண்டு மதம் மாறினாலும், இஸ்லாம் பொய்யாகிறது.//

மன்னரின் கேள்வியையும் விளக்கத்தையும் கவனமாக பாருங்கள். “உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில்
இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று
கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன்
தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.”
இஸ்லாம் மார்க்கத்தில் ‘இணைந்து‘ அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றிவிட்ட எவரும் அதை விட்டு வெளியேற
மாட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இஸ்லாம் மார்க்கத்தில் ‘பிறந்து‘ அதன் உண்மை விளக்கத்தை
புரிந்து கொள்ளாமலேயே அதை விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி இங்கு சொல்லப் படவில்லை.
///

நீங்கள் சொல்வது மிகவும் எளிய விளக்கம். அதாவது வெளியேறுபவர்கள் எல்லோருமே அதன் உண்மை விளக்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்று ஒரே போடாக போட்டுவிட்டால், அதே விஷயத்தை இஸ்லாமில் மாற்று மதத்திலிருந்து இணைபவர்களுக்கும் பிரயோகிக்கலாமே? இந்து மதத்திலிருந்து இஸ்லாமில் இணைபவர்கள் இந்து மதத்தின் உண்மை விளக்கத்தை புரிந்துகொள்ளவில்லை என்றும் சொல்லிவிடலாமே?

///
சுருக்கமாக சொல்வதென்றால், எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ஒரு முன் முடிவோடு அணுகினால், அதன்
உண்மை நிலவரம் உங்களுக்கு புரிபடாமலேயே போய் விடும். ‘இறைத்தூதர் என்ற கருத்தே தவறு’ என்ற
உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், நான் எவ்வளவு
அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் காட்டினாலும் அதனால் பயனேதும் விளையப் போவதில்லை. என் கருத்தை நீங்கள்
ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என நானும் உங்களை வற்புறுத்தவில்லை. ‘இது முஸ்லிம்களின் நம்பிக்கை’
என்ற அளவில் இக்கருத்துக்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும். முஹம்மது (ஸல்) அவர்களை
இறைத்தூதர் என்று நம்பினால் நீங்களும் முஸ்லிமாகி விடுவீர்கள்! நம்பாமல் இருப்பதால்தான் நீங்கள்
முஸ்லிமல்லாதவர்; இந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும், தவிர்க்க முடியாது. ஆகவே

‘’லகும் தீனுகும் வலியதீன் - உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு'’ குர்ஆன்
109:6
///

"இறைதூதர் என்ற கருத்து தவறு" என்பது என் முன்முடிவு அல்ல. அது பின்முடிவு. அதாவது, அது பற்றி சிந்தித்து, அதில் இருக்கும் அனுமானங்களும் பிரச்னைகளும் தீர்க்க முடியாதவை என்பதால் வந்த முடிவு.

நான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று நீங்களும் வற்புறுத்தப்போவதில்லை. அதனை நான் மதிக்கிறேன். இறைவன் ஒரு இறுதி இறைதூதரை அனுப்பியிருந்தால், நீங்கள் காட்டும் அத்தாட்சிகளும் ஆதாரங்களும், நான் மட்டுமல்ல வேறு யாருக்கும் சந்தேகம் கூட வராத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் நான் எதிர்பார்ப்பது. அப்போது நீங்கள் வற்புறுத்தும் வேலையே தேவையில்லை அல்லவா?

அதனால்தான் கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட புரியும் ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்று கோருகிறேன். அந்த குழந்தைக்கு தெரியும். எல்லோருக்கும் சாதாரண தலை இருக்கிறது. இறைதூதருக்கு மட்டும் ஒளி வீசும் தலை இருக்கிறது என்று. அல்லது நான்கு கைகள் இருக்கும் என்று. அவர்தான் இறைதூதர் என்பதற்காக அவரது எலும்பு கூட்டினை பத்திரமாக வைத்திருக்கலாம். எல்லா இறைதூதர்களையும் கல்லரைகளில் பாதுகாத்தால், எல்லா இறைதூதர்களுக்கும் 4 கைகள் இருக்கும் விஷயம் தெள்ளென தெரிந்துவிடும். சந்தேகப்பட என்ன இருக்கிறது? இல்லையா? இறுதி இறைதூதர் என்பதற்கு வேறு அத்தாட்சியே வேண்டாம் இல்லையா? அடுத்த இறைதூதர் 4 கைகளுடன் பிறக்கும் வரைக்கும் கடைசியாக வந்தவர்தான் இறுதி இறைதூதர். அவர்தான் இறுதி இறைதூதர் என்று நிரூபிக்க யாருமே கஷ்டப்படவேண்டாம் இல்லையா? பிறகு நான் எந்த அடிப்படையில் வாதிட முடியும்? அப்படிப்பட்ட ஒரு அடையாளத்தை தாருங்கள் என்றுதான் கேட்கிறேன்.

ஒவ்வொரு இறைதூதரும் ஒரு அதிசயத்தை செய்வது இறைதூதர் என்ற நிரூபணம் ஆகாது. ஏனெனில், தன்னால் முடிந்த ஒரு மந்திர வேலையை ஒரு மந்திர வாதி செய்து, எனக்கு இறைவன் கொடுத்த சாட்சியம்/அதிசயம் இதுதான் என்று ஏமாற்ற முடியும். ஆகவே, எல்லா இறைதூதர்களும் ஒரே அதிசயத்தை செய்ய வேண்டும். அந்த அதிசயத்தை மற்ற எந்த மக்களாலும் செய்ய முடியாது என்று இருக்க வேண்டும்.

ஒரு யானையை யானை என்று நிரூபிக்க கஷ்டப்பட வேண்டுமா? ஒரு புறாவை புறா என்று நிரூபிக்க கஷ்டப்படவேண்டுமா? ஒரு கேஜி குழந்தை கூட யானையை யானை என்று கூறிவிடுமே. வானவர் இறக்கைகள் வைத்திருப்பது போல இறைதூதர்கள் இறக்கைகளோடு பிறந்தால், யாரால் மறுக்க முடியும்? அது போன்ற மறுக்கமுடியாத ஆதாரத்தை எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவான ஆதாரத்தை கேட்கிறேன்.

இறுதி இறைதூதர் என்று நீங்கள் சொல்லும் முகம்மது "உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள்மார்க்கம் எங்களுக்கு" என்றால் பொருளென்ன? அவர் உண்மையான இறுதி இறைதூதராக இருந்தால் அவர் எப்படி அதனைச் சொல்லலாம்? உங்கள் மார்க்கத்தில் நீங்கள் இருந்துகொள்ளுங்கள். என் மார்க்கத்தில் நான் இருந்து கொள்கிறேன் என்று பொருளா? அது எப்படி சரியானதாகும்? "நான் தான் இறுதி இறைதூதர். அதற்காக இறைவன் கொடுத்த அத்தாட்சி இதோ" என்றல்லவா சொல்ல வேண்டும்?

ஆனால், இறுதி இறைதூதர் என்று நீங்கள் சொல்வதன் முக்கியத்துவத்தை மற்ற முஸ்லீம்கள் சரியாகவே புரிந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். இறுதி இறைதூதர் என்று நீங்கள் ஜனாப் முகம்மது நபி அவர்களை மிகவும் ஆழமாக நம்பினால், மற்றவர்களை துப்பாக்கிமுனையில் மதம் மாற்றுவது கூட அவர்களுக்கு நல்லது செய்வதாகவே நினைப்பீர்கள்.

வெறும் நம்பிக்கை மட்டும் ஒரு விஷயத்தை உண்மையாக்கி விடுவதில்லை. பூமி உருண்டை என்று கண்டுபிடிக்குமுன்னர் எல்லோரும் பூமி தட்டை என்று தான் கருதிக்கொண்டிருந்தார்கள். 100 சதவீதத்தினர் நம்பினாலும் பூமி தட்டையாகிவிட வில்லை. அது உருண்டையாகத்தான் இருந்தது. பஹாவுல்லாவை உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பின்பற்றினாலும், அவர் இறைதூதராக இறைவனால் அனுப்பப்படவில்லை என்றால் அவர் இறைதூதர் அல்ல தான். உலகத்தில் உள்ளவர் எல்லோரும் இஸ்லாமுக்கு மதம் மாறினாலும், முகம்மது நபி அவர்களை இறுதி இறைதூதர் என்று கருதினாலும், அவரை இறைவன் இறைதூதராக அனுப்பவில்லை என்றால், அவர் இறைதூதர் இல்லைதான்.

மேற்சொன்ன காரணங்களால்தான் இறைவன் யாரையும் இறைதூதர் என்று அனுப்பவில்லை என்று கருதுகிறேன். இறைதூதர் என்று ஒருவரை குறிப்பிட்டால், இறைவன் அவரை இறைதூதர் என்று அனுப்பினார் என்று நிரூபியுங்கள் என்று கேட்கிறேன். அவர் தன்னை இறைதூதர் என்று நிரூபிக்கும் பொறுப்பு அவரிடம் தான் இருக்கிறது. அவர் என்னை நம்ப கேட்கலாம். அவரை இறைதூதர் என்று நம்பாதவர்கள் அறியாதவர்கள் என்று கூறலாம். ஆனாலும், பொறுப்பு என்னிடம் இல்லை. இறைதூதர் என்று ஒருவரை அனுப்பிய இறைவனிடம் தான் இருக்கிறது. இறைதூதர் என்று தன்னை கூறிக்கொள்கிறவரிடம் தான் இருக்கிறது.

இறைவன் அனுப்பாத ஒருவரை இறைதூதர் என்று பின்பற்றுவது தவறு. அவர் எவ்வளவு நற்குணம் கொண்டவராக இருந்தாலும், பிரசித்தி பெற்றவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வலிமை உள்ளவராக இருந்தாலும், அவரை பின்பற்றுபவர்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், அவரை இறைதூதராக இறைவன் அனுப்பவில்லை என்றால் அவரை பின்பற்றுவது தவறு.

இறைவன் அனுப்பிய ஒருவரை அவர் என்ன தவறுகள் செய்தவராக இருந்தாலும், அவர் பிரசித்தி பெறாதவராக இருந்தாலும், வலிமையற்றவராக இருந்தாலும், அவரைபின்பற்றுபவர்கள் யாருமே இல்லாமல் இருந்தாலும் அவரைத்தானே பின்பற்ற வேண்டும்?

அப்படியாயின் தன்னை இறைதூதர் என்று அவர் அடையாளம் காட்டாமல் எப்படி அது மக்களுக்கு முடியும்? வலிமையும், துப்பாக்கிகளும், பின்பற்றுபவர்களின் நற்குணங்களும் ஒருவரை இறைதூதர் என்று ஆக்கிவிடுமா?

அப்படி இதுவரை ஏதாவது மனிதர்களை இறைதூதர் என்ற தெளிவான ( இறைதூதர் அல்லாத மக்களுக்கு இல்லாத) அடையாளத்துடன் இறைவன் அனுப்பியிருக்கிறாரா?

எனக்குத் தெரிந்து அப்படி யாரும் அனுப்பப்படவில்லை. அதனால்தான் இந்த இறைதூதர் என்ற கருத்தையே நான் ஒப்புக்கொள்ளவில்லை.

நன்றி

மீண்டும், இந்த பதிவை எழுத தூண்டிய இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்களுக்கு என் தாழ்மையான நன்றிகள்

Tuesday, October 17, 2006

மதிப்புக்குரிய சகோதரர் இப்னு பஷீர் பதிவு

என் மதிப்புக்குரிய சகோதரர் இப்னு பஷீர் என்னையும் என் கேள்வியையும் மதித்து பதிலளித்திருக்கிறார். அதற்கு முதலில் நன்றி கூறுகிறேன்.

பாரபட்சமின்றி நடுநிலையாக சிந்திக்கக்கூடியவர் என்று அவரை நான் நினைப்பதால், என் கேள்விகளை அவர் எழுதிய பதிவின் மீது வைக்கிறேன். இந்த கேள்விகள் கேட்பது அவரை புண்படுத்தாது என்று நம்புகிறேன். மேலும் விளக்கங்கள் கேட்டுத்தான் இந்த கேள்விகள் கேட்கப்படுகின்றனவே அல்லாது, அவரை புண்படுத்த அல்ல என்பதை விளக்கிவிடுகிறேன்.

மீண்டும் ஒருமுறை இனிய சகோதரர் இப்னுபசீர் அவர்களுக்கு என் நன்றிகள்.

--
இறைதூதர் இலக்கணம் என்று இப்னு பசீர் குறிப்பிடும் விஷயங்களையே எடுத்துக்கொள்வோம்.

//இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.//

நல்ல குடும்பத்தில் பிறப்பவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்லர்

//அடுத்து, உன்னிடம் ‘’இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'’ எனக் கேட்டேன், ‘’இல்லை'’ என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன். //

முகம்மது நபிக்கு முன்னர் நிறைய இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி முகம்மதுநபி அறிந்திருக்கக்கூடும். அவருக்கு முன்னால் பல இறைதூதர்கள் இருந்திருந்தார்கள் என்பதை அறிந்தவராக இருந்தால், அவர் இறைதூதர் அல்ல என்று ஆகுமா? (என்னைப் பொறுத்தமட்டில் அது அவரை இறைதூதர் அல்ல என்று ஆக்காது)

//அடுத்து உன்னிடம் ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன். //

மன்னர் குடும்பத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் மன்னர்கள் அல்லர். மனனர்கள் எல்லோரும் மன்னர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களும் அல்லர்.

//அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லா?வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். //

முகம்மது நபிகள் பொய் கூறாதவர் என்பதற்கு அத்தாட்சி தாங்கள் வழங்க வேண்டும். அது மட்டுமல்ல, யாரேனும் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதையோ, அல்லது பொய் சொல்வதை அங்கீகரித்திருக்கிறார் என்பதையோ நிரூபித்தால், முகம்மது நபி ஒரு இறைதூதர் அல்ல என்பது நிரூபணமாகி விடும்.


//அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா'’? என்று உன்னிடம் கேட்டேன் ‘’அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'’ என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.//

எளியவர்கள் பின்பற்றுபவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்ல.

//அடுத்து உன்னிடம் ‘’அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'’ என்று கேட்டேன். ‘’அதிகரிக்கின்றனர்'’ என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

அடுத்து உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.
//

யாராவது வெறுப்பு கொண்டு மதம் மாறினாலும், இஸ்லாம் பொய்யாகிறது. சல்மான் ருஷ்டி போன்ற ஏராளமானவர்கள்
இஸ்லாம் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறியிருக்கிறார்கள். ஹதீஸ் என்று நீங்கள் கூறும் புத்தகங்களிலிருந்து யாரேனும் "இஸ்லாமிலிருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள்" என்று நிரூபித்தாலும் முகம்மது நபி ஒரு இறைதூதர் என்பது பொய்யாகிவிடும்.

//அடுத்து உன்னிடம் ‘’அவர் மோசடி செய்ததுண்டா'’? என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.//

முன்னர் சொன்ன சொல்லை காப்பாற்றாமல் இருப்பது மோசடி செய்ததாக கூறப்படுமே ஆனால், அப்படி முன்னர் சொன்ன சொல்லுக்கு மாற்றாக முகம்மது நபி நடக்கவே இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாக யாரேனும் முகம்மது நபி சொன்ன சொல்லுக்கு மாறாக நடந்திருந்தார் என்று உங்கள் புத்தகங்களிலிருந்து ஒரே ஒரு நிகழ்வை காட்டிவிட்டாலும், முகம்மது நபி அவர்கள் இறைதூதர் அல்ல என்பது நிரூபணமாகிவிடும்.


//அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘’அல்லா? ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'’ என்று கூறினாய். ‘’நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'’ என்றார். //


நற்பண்புகளை போதிப்பவர்கள் அனைவரும் இறைதூதர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
--
திரும்பி வருவோம்.
இறைதூதருக்கான இலக்கணமாக இப்னுபஷீர் கூறுவது
1) அவர் மன்னர் குடும்பத்தில் பிறவாதிருக்க வேண்டும்
2) அவரது சமூகத்தில் அவருக்கு முன்னர் ஒருவர் தன்னை இறைதூதர் என்று கூறாதவராக இருக்க வேண்டும்
3) பொய் கூறாதவராக இருக்க வேண்டும்
4) எளியவர்கள் அவரை பின்பற்ற வேண்டும்
5) அந்த மதத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும்
6) அந்த மதத்திலிருந்து யாரும் வெளியேறாமல் இருக்க வேண்டும்
7) அவர் மோசடி செய்யாதிருக்க வேண்டும்
8) இறைவன் ஒருவனை வணங்குங்கள், சிலை வணக்கத்தை தடுத்து, தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவை பேணுதல் ஆகிய நற்பண்புகளை ஏவ வேண்டும்.

இந்த 8 குணங்களும் உள்ள ஏராளமான மக்களை இன்றும் பார்க்கலாம்.
அவர்கள் அனைவரும் இறைதூதர்களா?
இந்த எட்டு குணங்களும் இன்றும் முகம்மது நபிக்கு பொருந்துமா? (உதாரணமாக இஸ்லாமிலிருந்து யாருமே வெளியேறுவதில்லையா?)

--

முதலாவது என் கேள்வி முழுமையாக அவர் கூறவில்லை. என் கேள்வியில் ஒரு முக்கிய பகுதி "நீங்கள் இயேசு கிறுஸ்துவுக்கு முந்தைய காலத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்" என்பது.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதும், அவருக்கு இந்த "இறைதூதர் பற்றிய இலக்கணத்துக்கும்" அவர் இஸ்லாமிய புத்தகங்களையே நாடியிருக்கிறார். இந்த விஷயம், அவர் இயேசு கிறுஸ்துவுக்கு முந்தைய காலத்தில் அவருக்கு இருந்திருக்காது என்பதை நினைவூட்டுகிறேன்.

இரண்டாவது, ரோமானிய அரசர்தான் இறைதூதருக்கான இலக்கணம் அறிந்தவர் என்பது சரியல்ல என்று கருதுகிறேன். இறைதூதருக்கான இலக்கணத்தை ரோமானிய அரசர் அறிந்திருந்தார் என்றால், அவருக்கு அது எப்படி தெரியும் என்ற கேள்வி வரும். "உண்மையான இறைதூதருக்கான இலக்கணம் இதுதான்" என்பதை அவருக்கு யார் சொன்னார்கள் என்ற கேள்வியும் வரும். அவர் சொல்வதுதான் சரியான இறைதூதருக்கான இலக்கணம் என்பதை எப்படி இப்னுபஷீருக்கு அறுதியாக தெரியும் என்ற கேள்வியும் வரும்.

மேலும் இறைதூதருக்கான இலக்கணம் மிகவும் கற்றறிந்தவர்களுக்கும், மிகவும் பெரிய ஞானவான்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருப்பது சரியல்ல. இறைதூதர் எல்லா ஏழை எளிய படிப்பற்ற மக்கள் உட்பட எல்லோருக்காகவும் அனுப்பப்பட்டவர். ஆகவே அவருக்கு இருக்கும் இறைதூதர் என்ற குணாம்சம் எல்லோருக்கும் புரிந்ததாக தெரிந்ததாக இருக்க வேண்டும். இதைத்தான் அபுமுஹை "போய் கேஜி படிக்கும் குழந்தையிடம் கேளுங்கள்" என்று குறிப்பிட்டார் என்று புரிந்து கொள்கிறேன்.

உதாரணமாக ஈரான் நாடு இந்தியாவுக்கு தூதராக ஒருவரை நியமிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் இந்திய நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து, இதோ என் கிரெடென்ஷியல்கள். ஈரான் நாடு என்னை இந்தியாவுக்கான தூதராக நியமித்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை என்று அவர் இந்திய ஜனாதிபதியிடம் காட்டுகிறார். அவற்றை சரிபார்த்த இந்தியா அவரை ஈரானின் தூதராக அங்கீகரிக்கிறது.

இதே போல இறைவனின் தூதர் உலகத்துக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். உலகத்தில் உள்ள எல்லோருக்கும் விஷயங்களைச் சொல்ல வருகிறார். ஆகவே அவரிடம் ஒரு கேஜி குழந்தைகூட புரிந்துகொள்ளும் அளவுக்கு அவரிடம் சாட்சியங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, அவர் தலையில் ஒரு ஒளிப்பிழம்பு எப்போதும் இருக்கலாம். அல்லது அவருக்கு நான்கு கைகள் இருக்கலாம். ஏதோ ஒன்று.

அதாவது முதலாவது இறைதூதரிலிருந்து கடைசி இறைதூதர் வரைக்கும் ஒரே ஒரு அடையாளமாக ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அந்த அடையாளம் அசாதாரணமாக இருக்க வேண்டும். அது இறைதூதர் அல்லாத வேறு யாருக்கும் இருக்கக்கூடாது.

ஒரு சமூகத்தில் ஒரு இறைதூதர் வந்ததுமே அவரை இறைதூதர் என்று குழந்தைகூட புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட குணாம்சம் இறைதூதர் என்று இவர்கள் குறிப்பிடும் எவருக்கும் இல்லை.


மீண்டும் ஒருமுறை இனிய சகோதரர் இப்னுபசீர் அவர்களுக்கு என் நன்றிகள்.

Sunday, October 15, 2006

நீயும் நானும்

உன்னை முதன் முதலாக பார்த்தபோது
நூறாண்டுகள் பழகி வாழ்ந்திருந்த உணர்வு இருந்தது
நூறாண்டுகள் பழகி வாழ்ந்தபின்னர்
ஏதோ எங்கோ ஒரு மூலையில் நீ
அந்நியளாக இருக்கிறாய்

Saturday, October 14, 2006

போப்பாண்டவர் சொன்னதில் தவறேதுமில்லை

இன்றைய கூகுள் நியூஸில் ஒரு செய்தி படித்தேன்.

அதனை பல்வேறு பத்திரிக்கைகளிலிருந்து படிக்க இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்

கூகுள் தேடல்


Reciting the Shehada in Gaza


ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவ் செண்டாணி, நியூஸிலாந்து பத்திரிக்கை கேமராமேனான ஓலோப் விக் ஆகிய இருவரும் ஹோலி ஜிகாத் பிரிகேட் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் கடத்தப்பட்டார்கள்.

72 மணி நேரத்துக்குள் அமெரிக்க சிறைகளில் இருக்கும் எல்லா முஸ்லீம்களும் விடுதலை செய்யப்படவேண்டும் இல்லையேல் இவர்களது கழுத்தை வெட்டுவோம் என்று பயமுறுத்தினார்கள்.

நியூஸிலாந்து அரசும் அமெரிக்க அரசும் பயங்கரவாதிகளுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்த போவதில்லை என்று அறிவித்தார்கள்.

ஆகஸ்ட் 27ஆம் தேதி இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

செண்டானியின் வார்த்தையில்

"We were forced to convert to Islam at gunpoint, and donஒt get me wrong here, I have the highest respect for Islam, and learned a lot of very good things about it, but it was something we felt we had to do, because they had the guns, and we didnஒt know what the hell was going on."


வாளினால் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இன்று துப்பாக்கியால் இஸ்லாம் பரப்பப்படுகிறது.

இப்படியிருக்கும்போது அந்த காலத்தில் வாளினால் இஸ்லாம் பரப்பப்பட்டிருக்காதா என்ன?

போப் சொன்னதில் எந்த தவறுமில்லை என்றே தோன்றுகிறது.

இவர்களது கடவுள் இப்படித்தான் தன் மதத்தை பரப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறதா என்ன?

அப்படிப்பட்ட கடவுள் ஒரு கடவுளா?

Saturday, October 07, 2006

மற்றொரு மரணதண்டனை பதிவு



இது மரண தண்டனை பற்றியோ தார்மீக விழுமியங்கள் (அப்டீன்னா என்ன?) பற்றிய பதிவோ அல்ல.

இது வெறும் கேள்விதான்.

--


ஸ்ரீநகரில் முஸ்லீம் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டதின் படம்

இதில் ஒரு தட்டியில் உள்ள வாசகம்

Indian Judiciary is biased towards minorities

மற்றொரு தட்டியில் உள்ள வாசகம்

Afzal your sisters are proud on you.

இதிலிருக்கும் முரண்பாடு தெரிகிறதா?

அப்சலை இரண்டாம் தட்டி எதற்காக பாராட்டுகிறது?

அதே காரணத்துக்காக தூக்கு தண்டனை கொடுத்தால் முதல் தட்டி ஏன் மைனாரிட்டிகளுக்கு ஆதரவாக இந்திய நீதித்துறை இல்லை என்று புலம்புகிறது?


-
படத்துக்கு நன்றி தினமலர்.

எனக்குத் தேவையில்லாத வேலை

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவது போல், திருக்குர்ஆனுக்கு முந்தய வேதங்களும் ஏன் பாதுகாக்கப்படவில்லை?

//பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//- தருமி.

கேள்விக்கான விளக்கம்.
ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னும் அவர்கள் கொண்டு வந்த வேதங்கள், அவற்றைப் பின்பற்றுபவர்களாலேயே மறைக்கப்பட்டது. மறைக்கப்பட்டது மட்டுமல்ல, வேதத்தைப் பெற்றிருந்த அறிஞர்களால் அவர்களின் சொந்தக் கருத்தும் வேதமெனத் திணிக்கப்பட்டு அதுவும் வேதத்தில் உள்ளதுதான் என மக்களுக்கு போதிக்கப்பட்டது. இதை சரிசெய்வதற்காக இன்னொரு இறைத்தூதரின் வருகை அவசியமாயிற்று இது ஒரு காரணம். (இது பற்றி இன்னும் விரிவாக ''யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்? என்ற பகுதியில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்)

இந்த காரணத்தைப் பார்ப்போம்.

அல்லாவுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.
அதனால் சீரழிக்கப்பட்டபின்னர் அதனை சரிக்கட்ட இன்னொரு இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலைக்கு வருகிறார்.
ஆனால், அல்லா எல்லாம் அறிந்தவர் என்றே கூறப்படுகிறது.

அல்லா எதிர்காலம் அறிந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.

எதிர்காலம் அறிந்த அல்லா, இது போல மனிதர்களின் சொந்தக்கருத்து திணிக்கப்பட்டு தான் அனுப்பிய வேதம் சீரழிக்கப்படும் என்று தெரிந்தவராகவே இருப்பார். ஆனால், அல்லா அதனை ஒன்றும் தடுக்கவில்லை. சீரழிக்கப்படக்கூடாது என்று உண்மையிலேயே அல்லா விரும்பியிருந்தால், எல்லாம் வல்ல அல்லாவால் அந்த பழைய வேதங்கள் சீரழிக்கப்படாமல் தடுக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே சீரழிக்கப்பட்டதற்கு அல்லாவே காரணம் என்று கூறலாம்.

ஆகவே இவ்வாறு வேதங்கள் மாற்றப்பட்டதற்கு அந்த வேதங்களை பின்பற்றுபவர்களை குறை சொல்வது முட்டாள்த்தனம்.


இறைத்தூதர்கள் வேதங்களைக் கொண்டு வரும்போதும் பழைய வேதங்களை உள்ளடக்கியும், அதைத் தொடர்ந்து புதிய சட்டங்களை சேர்த்தும் அனுப்பப்பட்டார்கள். உதாரணமாக:

3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.'' (இறைத்தூதர்களின் மீள் வரவின் காரணத்தை மேலும் பல திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கலாம்)

முந்தய வேதத்தை உண்மைப்படுத்த வந்த இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் முன்பு விலக்கப்பட்ட சிலவற்றை நீக்கி புதிய சட்டங்களை சேர்க்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார். இப்பொழுது - தவ்ராத் வேதத்தையும் உள்ளடக்கி அதோடு புதிய சட்டங்களையும் சேர்த்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கொண்டு வந்த - இன்ஜீல் எனும் வேதம் பின்பற்றத்தக்கது. ஏனென்றால் தவ்ராத் எனும் வேதத்தோடு புதிய இறைச் சட்டங்கள் இன்ஜீல் எனும் வேதத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களால் சேர்க்கப்பட்டன.


ஏன் ஒரு காலத்தில் விலக்கி வைக்கப்பட்டவை பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும்? அல்லது முன்னர் அனுமதிக்கப்பட்டவை ஏன் பின்னர் விலக்கி வைக்கப்பட வேண்டும்? இந்த பிரச்னையை விவாதம் இல்லாமல் முந்தைய வேதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டு விடலாமே? அதாவது, இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள். இந்த வருடத்திலிந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்ற வேண்டாம். இந்த ஊரில் இருந்தால், இதனை பின்பற்றவேண்டாம் என்று முதலாவதாக கொடுத்த வேதத்திலேயே சுத்தமாக எழுதி வைத்துவிட்டு அந்த வேதத்தை மக்கள் சீரழிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாமே?


''இன்று (மோசே எனும்) மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களே முஹம்மது நபியைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது முன் சென்ற நபிமார்களைப் பின்பற்றியே புதிய சட்டங்களுடன் பிந்திய நபியின் வருகை இருந்ததால் இந்த இறைத்தூதர் கொண்டு வரும் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. விளங்கிக் கொள்ள:

ஏற்கெனவே ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், பழைய ஆட்சியை ஆதரித்த குடிமக்களும் அதற்குக் கட்டுப்பட வேண்டும், பழைய ஆட்சியாளர்களும் புதிய அரசின் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

மிகச்சரி. ஆனால், இது ஆட்சியாளராக வெவ்வேறு நபர்கள் வருவதால் நடக்கிறது. ஆனால், உலகத்து மக்களுக்கு வாழும்முறை எழுதித்தரும் அல்லா, ஒரே மாதிரியான மாற்றமில்லாத வேதத்தை கொடுத்து அதனை பாதுகாத்திருக்கலாமே?


இறைச் செய்தியை அறிவித்து இறைத்தூதராக வாழ்ந்து, வழிகாட்டிய ஒரு நபியின் மறைவுக்குப்பின் அந்த சமுதாயம், அடுத்த இறைத்தூதர் வரும்வரை மறைந்த இறைத்தூதரையேப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். மீண்டும் இறைத்தூதரின் வருகை அவசியமென இறைவன் தீர்மானித்து அடுத்த இறைத்தூதரை நியமிக்கிறான். அதுவரை மறைந்த இறைத்தூதரைப் பின்பற்றியவர்கள் இப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டும். இதைத்தான் மறைந்த இறைத்தூதர்களும் தமக்குப்பின் வரவிருக்கும் இறைத்தூதரைப் பின்பற்றும்படியும் அறிவித்தார்கள்! மக்களும் அடுத்த இறைத்தூதரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்பதை வரலாற்றில் அறிந்து கொள்கிறோம்.

மாற்றமில்லாத ஒரே ஒரு வேதத்தை எந்த இறைதூதர் இடையூறும் இல்லாமல் ஒரு புத்தகத்தில் எழுதி, அதனை யாரும் எபோதும் படித்துக்கொள்ளலாம் என்று மனிதர்களின் மூளையில் மாற்றமுடியாதபடி செருகி விட்டால், இந்த இறைதூதர் பிரச்னையே இல்லையே? இறைதூதர் இப்படி நடந்துகொண்டார் அதனால் இந்த வேதம் சரியல்ல என்று மக்கள் கூற எந்த விதமான காரணமும் இல்லாமல், எல்லோரும் சரியாக தெரிந்துகொண்டிருப்பார்களே!

//இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//

முந்தய வேதங்களையும் இறைவனால் பாதுகாக்க முடியாதா? என்றால் இறைவனால் அது முடியாத காரியமில்லை! ஆனால் அதற்கான அவசியமில்லை. அடிப்படைக் கொள்கை நீங்கலாக, வணக்க வழிபாடுகளிலும், வாழ்க்கை நெறிகளிலும் சில மாற்றங்களுடன் ஒவ்வொரு இறைத்தூதர்களும் வேதங்களைக் கொண்டு வந்தார்கள். முழுமையடைந்த வேதம் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். முழுமையடையாத முந்தய வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை.

நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே! இன்று ஒவ்வொரு இறைதூதரின் பின்னால் நிற்பவர்களுக்கும் பின்னால் வந்த இறைதூதரை இறைதூதர் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றும் அல்லது அதனைப் பற்றி விவாதம் செய்வதற்கும் இடமில்லாமல் போயிருக்குமே!

முந்தய வேதங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவு பெற்ற இறுதியான வேதம் திருக்குர்ஆன். ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்'' (திருக்குர்ஆன், 5:3) என இறைச் செய்தியை பறைசாற்றித் திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்று, தூதுப்பணியும் முடிந்து விட்டதால் இறைத்தூதர்களின் வருகையும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது. இனி தூதர்களின் வருகை இல்லை அதனால் வேதங்களின் வருகையும் இல்லை. திருக்குர்ஆனே இறுதி வேதம் எனும்போது இறுதி வேதமாகிய திருக்குர்ஆன்தான் பாதுகாக்கப்பட வேண்டும்.

இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?

மனித குலத்துக்கு வழிகாட்டியாக இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்படுகிறது. திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். (பார்க்க: திருக்குர்ஆன், 15:9) திருக்குர்ஆனில் இடைச் செருகல் ஏற்படாமல் இன்னும் தொடர்ந்து இறைவனால் பாதுகாக்கப்படும் இறுதி நாள்வரை!

இதனை முன்னமே செய்திருக்கலாம்!

எழுதியவற்றில் மேலும் கேள்விகள் இருந்தால் இங்கே பதிவு செய்யலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை


எழுதியவற்றில் மேலும் கேள்விகள் இருந்தால் இங்கே பதிவு செய்யலாம் நன்றி!