Thursday, September 27, 2007

கருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ

கருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ
புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007



சென்னை:

ராமர் பாலத்தை உடைப்பதில் தீவிரமாக உள்ள திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஊட்டியில் ஜெயலலிதா பங்கேற்றார்.

ராமர் பாலத்தை உடைக்க திமுக முயற்சிப்பதை கண்டித்தும், ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி அவதூறாக பேசியதைக் கண்டித்தும், திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது ஜெயலலிதா பேசுகையில்,

மைனாரிட்டி அரசின் முதலமைச்சர் கருணாநிதி தனது பொறுப்பு மற்றும் கடமையை மறந்து உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கையை ஆழமாக காயப்படுத்தியுள்ளார்.

ராமரை அவமானப்படுத்தி பேசியதோடு ஒருமையில் இழிவுபடுத்தி பேசி வருவதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோமாக நடந்து கொள்ளும் கருணாநிதி உடனே பதவி விலக வேண்டும்.

இல்லையென்றால் மத்திய அரசு கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தில் 5 மாற்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 6-வது திட்டம்தான் ராமர் பாலத்தை இடிக்கும் திட்டம். மற்ற 5 திட்டங்களை கைவிட்டு விட்டு பாலத்தை இடிக்கும் திட்டத்தை மட்டுமே கருணாநிதி வலியுறுத்தி வருகிறார்.

நான் தொடர்ந்த வழக்கு காரணமாக உச்ச நீதிமன்றம் தற்போது தடை ஆணை விதித்ததையொட்டி தமக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் கருணாநிதி ராமரை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

ராமர் பாலத்தை கட்டியது யார், ராமர் என்ற ஒருவர் இருந்தாரா, அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்றெல்லாம் கேட்டு வருகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் கல்லணையை கட்டிய கரிகாலன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜசோழன், உலக அதிசயமான தாஜ் மகாலை கட்டிய ஷாஜகான் எந்த கல்லூரியில் படித்தார்கள் என்பதை கருணாநிதி கூறுவாரா. இவற்றுக்கெல்லாம் ராமாயணத்தில் பதில் உள்ளது.

கருணாநிதி ராமாயணத்தை ஒழுங்காக படித்துள்ளாரா ராமாயணத்தில் தேவ தச்சனான விசுவகர்மா என்பவரது மகன் நளன் என்பவர்தான் ராமாயணத்தில் ராமர் பாலத்தை கட்டியதாக வருகிறது.

இதை புரிந்து கொள்ளாத கருணாநிதி அர்த்தமற்ற, தேவையற்ற, கண்டிக்கத்தக்க பேச்சுக்களை பேசி இந்து மக்களையும், மதநம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தி, காயப் படுத்தி வருகிறார்.

இதுபோன்று மத துவேஷத்தை ஏற்படுத்தினால் இ.பி.கோ. 295ஏ பிரிவின்படி 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கலாம். அதேபோல் 298வது பிரிவின்படி ஓராண்டு சிறை தண்டனையும், 505சி பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கலாம்.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருக்க கூடிய கருணாநிதி அரசியல் சட்டத்தை மதிக்காமல் ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி பேசுவது தண்டனைக்குரியது.

இவர் மீது வழக்கு தொடர்ந்தால் 3 பிரிவுகளின் கீழ் கருணாநிதிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை உண்டு.

குற்றமென தெரிந்தும் இதுபோன்று பேசி வரும் மைனாரிட்டி திமுக முதலமைச்சர் கருணாநிதி தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு திமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அதுவரை அதிமுக சார்பில் நாடு முழுவதும் தொடர்ந்து இது போன்ற போராட்டங்கள் நடைபெற்று கொண்டே இருக்கும் என்றார்.

இதேபோல சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில், தலைமைத் தபால் நிலையம் முன்பு பெரும் திரளான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் ராசா தலைமை தாங்கினார். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்று துணை நிலை ஆளுநர் முகுத் மித்தியிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

இதுதவிர டெல்லி, அந்தமான் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

No comments: