நன்றி தினமணி
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர முடிவு: கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை
கோவை, செப். 19: சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அதன் மாவட்டச் செயலர் மு.லோகநாதன் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தமிழக அரசு தலா 3.5 சத தனி இடஒதுக்கீடு அவசர சட்டத்தைப் பிறப்பித்து அதை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. இச் சட்டத்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
1989-க்கு முன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு 50 சத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் இருந்து ஒரு சில ஜாதிகளை மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பிரித்து அவர்களுக்கு 20 சத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. எந்த அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
கள்ளர், மறவர், அகமுடையார், கொங்கு வேளாளர், சோழிய வேளாளர், அனைத்துப் பிரிவு செட்டியார்கள், போயர், ஈளுவர், கவுடர், நாயக்கர், நாயுடு, இந்துநாடார், துளவ நாயக்கர், ஒக்கிலியர், யாதவர்கள் என தமிழகத்தில் பெரும்பான்மையான சமுதாயத்தினருக்கு 23 சத இடஒதுக்கீடுதான் என்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை முதல்வர் பழிவாங்குகிறார் என்றுதான் அர்த்தம்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 30 சத இடஒதுக்கீட்டை 23 சதமாக தமிழக அரசு குறைத்ததை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சத இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தாவிடில் மற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
மேலும், சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று லோகநாதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment