Tuesday, September 11, 2007

சுனாமி நிதி ஊழல் மற்றும் இதர பிரச்னைகளுக்காக கத்தோலிக்கத்துக்கு எதிராக மீனவர்கள் போர்க்கொடி

தூத்துக்குடி பிஷப்பை முற்றுகையிட்டு
50,000 மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007



தூத்துக்குடி:

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட பிஷப் இவான் அம்புரோஸின் செயல்பாடுகளை எதிர்த்து அம்மாவட்டத்தைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தில் மொத்தம் 105 பங்குகள் உள்ளன. இவற்றின் கீழ் 226 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 13 பங்குகளில் பள்ளிகள் இல்லை. பொதுவாக இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் அந்தந்த பங்கு சீனியாரிட்டி அடிப்படையில் நடந்து வருகிறது.

ஆனால் ஆசிரியர் நியமனத்தில் பங்கு மூப்பு பட்டியலுக்கு பதிலாக மறை மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய தற்போதைய பிஷப் இவோன் அம்புரோஸ் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதற்கு கடலோர கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை கடலோர கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, ஊட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை, மணப்பாடு, குலசேகரபட்டிணம் உள்ளிட்ட 20 கிராமங்களின் மீனவ மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கடலோர மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பாளர் மணப்பாடு காயஸ் தலைமையில் தூத்துக்குடி கத்தோலிக்க ஆயர் இல்லத்திற்கு திரண்டு வந்தனர்.

அனைவரும் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து வந்த பல கோடி ரூபாய் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பிஷப் மறுத்து வருகிறார். அதில் மர்மம் புதைந்துள்ளது என்றனர்.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

No comments: