நன்றி தினமலர்
வேலூர் கல்லூரி மாணவி வீட்டிற்கு சீல் : பயங்கரவாதிகளுடன் தொடர்பு உறுதி
வேலூர் : ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வேலூரில் தங்கியிருந்த வீட்டிற்கு `சீல்' வைக்கப்பட்டுள்ளது. அவர் படித்த `ஆக்ஸிலியம்' கல்லூரியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஐதராபாத்தில் கடந்த மாதம் 25ம் தேதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 43 பேர் பலியாயினர். போலீசார் விசாரணை நடத்திய போது, ஐதராபாத் ஓட்டலில் விசா இல்லாமல் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஷாகி ரப்ஜானி(27) என்ற பெண் பிடிபட்டார். கைதான பெண், வேலூர் கல்லூரியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. முன்னுக்குப்பின் முரண்பட்ட தகவல்களை கூறியதால், போலீசாருக்கு அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது. வேலுார் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்ஸிலியம் பெண்கள் கல்லுாரியில் ரப்ஜானி படித்து வருவதாகவும், காட்பாடி கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாவும், அந்த பெண் தெரிவித்தார். அவர் கூறும் தகவல் உண்மைதானா என்பதை விசாரித்து தெரிவிக்கும்படி, தமிழக போலீசாரை ஆந்திரா போலீசார் கேட்டுக் கொண்டனர்.
காட்பாடி டி.எஸ்.பி., பட்டாபி தலைமையில், போலீசார் அந்த பெண் தங்கியிருந்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்று அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அங்கு ஷாகி ரப்ஜானியின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட 23 ஆவணங்களை கைப்பற்றினர். பின் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர். அவர் படித்த ஆக்ஸிலியம் கல்லுாரிக்கு சென்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கல்லூரியின் முதல்வர் யூஜினி பாத்திமா போலீசாரிடம் கூறியதாவது : வங்கதேச நாட்டை சேர்ந்த ஷாகி ரப்ஜானி, 2005 ஜூன் மாதம் பி.ஏ., (ஆங்கிலம்) பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் தந்தை பெயர் ஜெய்னலாப்தீன் காஜி. கல்லுாரி விடுதியில் தங்காமல் வெளியில் தங்கி படித்து வந்தாள். நன்றாக படித்து வந்தாள். லீவு போட மாட்டாள். இந்திய பணத்தைக் கொடுத்து தான் கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளார். அவரது நடத்தை நன்றாக இருந்தது. அனைத்து மாணவிகளிடம் சகஜமாக பழகுவாள். கடந்த மாதம் 27ம் தேதி வரை கல்லுாரிக்கு வந்தாள். அதன் பிறகு கல்லுாரிக்கு வரவில்லை. விடுமுறை கடிதமும் கொடுக்கவில்லை. மாணவர் விசாவில் வந்திருக்கும் ரப்ஜானியின் விசா காலம் 2008ம் ஆண்டு வரை உள்ளது. இவ்வாறு கல்லுாரி முதல்வர் கூறினார்.
ரப்ஜானி குடியிருந்த காட்பாடி கோபாலபுரம் வீட்டின் உரிமையாளர் ஜெய்சனிடம் போலீசார் விசாரித்தனர். "ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒரு மாத வாடகை ரூ.500 கொடுத்து விட்டு தங்கியிருந்தார். கடந்த மாதம் 27ம் தேதி ஐதராபாத் போய் வருவதாக சொல்லி விட்டு சென்றவர், இது வரை வரவில்லை. மிகவும் நல்ல பெண்ணாக இருந்ததால் தான் அவர் தங்குவதற்கு வீட்டை கொடுத்தோம்," என்று அவர் தெரிவித்தார். ரப்ஜானி கோபாலபுரத்தில் தங்குவதற்கு முன், சத்துவாச்சாரியில் தங்கியிருந்தாள். அந்த இடத்துக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ரப்ஜானிக்கு நெருங்கிய தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
`பாஸ்போர்ட், விசாவை கோபாலபுரம் வீட்டில் வைத்து விட்டு சென்றதால், ரப்ஜானியை பயங்கரவாதிக்கு தொடர்புடையவர் என்று எண்ணி, ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். தன்னை பற்றி அவள் எடுத்துக்கூறியும் போலீசார் நம்பாமல், பயங்கரவாதியாக சித்தரித்துள்ளனர். உண்மையில், அவளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த விதத்திலும் சம்மந்தமில்லை' என்று ரப்ஜானியின் தோழிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
`மாணவி ஷாகி ரப்ஜானி குறித்து முழுமையாக விசாரணை நடந்து வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின் தான், அவர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவரா, இல்லையா, என்பது தெரியவரும்' என வேலூர் போலீசார் தெரிவித்தனர். ஷாகி ரப்ஜானியை பற்றி விசாரித்த தகவல்கள் உடனுக்குடன் ஆந்திர போலீசாருக்கு வேலூர் டி.ஐ.ஜி., சுந்தரமூர்த்தி தெரிவித்துவிட்டார். ஆனாலும், ரப்ஜானிக்கும் பயங்கரவாத கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவே, ஆந்திர போலீசார் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment