ராமர் பாலத்தை காக்க வலியுறுத்தி பா.ஜ., மறியல் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேர் கைது
சென்னை :சேது சமுத்திர திட்டத்திற்காக வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, பா.ஜ., மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரம் பெண்கள் உட்பட பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில், பா.ஜ., மாநில தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட ஏராளமானோர் கைதாயினர். சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக கடலில் உள்ள ஆடம்ஸ் பாலத்தை (ராமர் பாலம்) இடிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆரம்பத்தில் இருந்து பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
"பல நுõறு ஆண்டுகளுக்கு முன் ராமர், தனது வானரப்படை மூலம் கட்டியது தான் அந்தப் பாலம். வரலாற்று சிறப்புமிக்க அந்தப் பாலத்தை இடிக்காமல், மாற்று திட்டத்தின் மூலம் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்று அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. பல்வேறு இந்து இயக்கங்களும், அமைப்புகளும் ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்னை பார்லிமென்ட்டிலும் வெடித்தது.இந்நிலையில் ராமர் பாலத்தை இடிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராமர் பாலத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், ராமர் சேது பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. பா.ஜ., இந்து முன்னணி, வி.எச்.பி., உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், ராமர் சேது பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்து நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சென்னையில், பா.ஜ., மாநில தலைவர் இல. கணேசன் தலைமையில் அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது இல. கணேசன் கூறுகையில், "சேது திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ராமர் பாலத்தை தகர்க்காமல் நான்காவது வழித்தடத்தில் பாதையை மாற்ற வேண்டும். அணுசக்தி மூலம் நுõறு ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்காக அமெரிக்காவுடன் இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், ராமர் பாலத்தை சுற்றியுள்ள அரிய வகை தோரியத்தை பயன்படுத்தினால் 400 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரம் பெற முடியும்' என்றார். வடசென்னையில் வி.எச்.பி., அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் தலைமையில், பா.ஜ., பொதுச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வடபழனியில் இந்து முன்னணி மாநில தலைவர் ராமகோபாலன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்த போராட்டத்தால் நுõறு அடி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. உடனே ராமகோபாலன், தி.நகர் வேதா உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த போராட்டங்களிலும் நுõற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் ராமருக்கு நடுரோட்டில் பூஜை செய்துவிட்டு, அணி அணியாகச் சென்று மறியல் செய்ய முயன்ற 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், அவிநாசி உட்பட 60 இடங்களில் நடந்த மறியலால் இரண்டாயிரம் பேர் கைதாயினர். திருச்சி, பெரம்பலுõர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் ஆறு இடங்களில் நடந்த போராட்டங்கள் நடந்தன. இதில் கலந்துகொண்ட 200 பேர் கைது செய்யப்பட்னர். நாகையில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திய 500 பேர் கைதாயினர். மொத்தத்தில் மாநிலம் முழுவதும் 150 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஆயிரம் பெண்கள் உட்பட பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அனைரும் ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு, மாலை ஆறு மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment