Monday, February 21, 2011

இந்து கலாசார முறைப்படி சார்ளி சாப்ளின் பேரன் திருமணம் - கர்நாடகத்தில் நடந்தது

இந்து கலாசார முறைப்படி சார்ளி சாப்ளின் பேரன் திருமணம் - கர்நாடகத்தில் நடந்தது


கார்வார், பிப்.21-

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளினின் பேரன், தனது 60-வது வயதில் 52 வயது பெண்ணை இந்து கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கர்நாடகத்தில் நடந்தது.

சார்ளி சாப்ளின் பேரன்

நகைச்சுவை நடிகர்களில் பிரபலமானவர் சார்ளி சாப்ளின். பேசாமலேயே தனது சேட்டைகளால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திறன் படைத்த அவரது பேரன் மார்க் ஜோப்ளின். இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர்.

மார்க் ஜோப்ளினுக்கு இசையில் மிகுந்த நாட்டம் உண்டு. தபலா, மிருதங்கம் பொன்ற கருவிகளை நன்றாக வாசிக்க தெரிந்தவர். அமெரிக்காவை சேர்ந்தவரான அவர் 40 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து விட்டார். கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கோகர்ணாவில் அவர் வசித்து வருகிறார்.

அமெரிக்க பெண்

இதேபோல அமெரிக்காவை சேர்ந்தவர் டெர்ரா டிப்பனி. நன்றாக ஆர்மோனியம் இசைக்கத் தெரிந்த இந்த பெண்ணுக்கு 52 வயது ஆகிறது. அமெரிக்காவில் வசித்தபோதிலும் டெர்ராவுக்கு மேற்கத்திய கலாசாரத்தில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. இந்து கலாசாரத்தையே அவர் பெரிதும் விரும்பினார்.

மார்க்கும், டெர்ராவும் அமெரிக்காவில் இருந்தபோது இருவரும் சேர்ந்து இந்திய பாரம்பரிய இசை, ராமாயணம், ஹரிகதை, சங்கீர்த்தனம் உள்ளிட்ட இந்து கலாசாரங்கள் குறித்து பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் ஆய்வரங்குகளை நடத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் இடையே முதன் முதலில் அறிமுகம் ஏற்பட்டது. இந்து கலாசாரத்தில் ஏற்கனவே பற்றுதல் கொண்டு இருந்த மார்க், தனக்கு டெர்ரா மனைவியாக வாய்த்தால் தனது வாழ்க்கை நன்றாக இருக்குமே என்று நினைத்தார்.

திருமணத்துக்கு சம்மதம்

இதை தொடர்ந்து தனது விருப்பத்தை டெர்ராவிடம் தெரிவித்தார், மார்க். அதைக்கேட்டு மகிழ்ந்த டெர்ரா, திருமணத்துக்கு சம்மதித்தார். அத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது நிபந்தனையையும் மார்க் கூறினார். அதற்கும் டெர்ரா பச்சைக் கொடி காட்டினார்.

இதை அடுத்து, கோகர்ணாவில் வசிக்கும் தனது நண்பரான பரமேஷ்வர் சாஸ்திரியை மார்க் சந்தித்து தனது திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி மார்க்-டெர்ரா திருமணத்துக்கான ஏற்பாடுகளை பரமேஷ்வர் சாஸ்திரி கவனிக்க தொடங்கினார்.

கடற்கரையில்...

மார்க்-டெர்ரா திருமணம், கார்வாரில் உள்ள குட்லேபீச் கடற்கரையில் நடந்தது. திருமணத்தை கோபால் சாஸ்திரி என்ற புரோகிதர் நடத்தினார். கணேச பூஜை முதல் கன்யாதானம் வரை அனைத்தும் இந்து பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டன.

திருமணத்தின்போது மணமக்கள் இருவரும் இந்திய கலாசார முறைப்படி உடை அணிந்து இருந்தனர். வேத மந்திரங்கள் ஓத, டெர்ரா கழுத்தில் மார்க் தாலி கட்டினார். திருமண நிகழ்ச்சியில் உள்ளூர் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது பற்றி மார்க்-டெர்ரா தம்பதிகளிடம் கேட்டபோது, ``எளிமையான இந்திய வாழ்க்கை முறை எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே தான் இந்திய கலாசாரப்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ``நாங்கள் எப்போதும் இந்தியர்களின் ஆடைகளையே விரும்பி அணிகிறோம்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.

தமிழ்-கன்னடம்

மார்க்குக்கு தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகள் நன்றாக தெரியும்.

கீர்த்தனை மற்றும் பஜனை பாடல்கள் அடங்கிய சி.டி.க்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: