தமிழக தேர்தலில் ஊழல் பிரச்னை எதிரொலிக்கும்: பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் பேட்டி
First Published : 09 Feb 2011 01:01:35 PM IST
Last Updated :
மதுரை, பிப். 8: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் பிரச்னை எதிரொலிக்கும் என பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் கூறினார்.
மதுரையில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவைச் சேர்ந்த 20 மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் பிரச்னை முக்கியமாக இருக்கும். ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் பேசப்பட்டு வரும் நிலையில் இப்போது புதிதாக இஸ்ரோ நிறுவன அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் துறையானது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
விலைவாசி உயர்வுக்கும் ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. யூகபேர வணிகத்தில் அத்தியாவசியப் பொருள்களும் இடம் பெறுவதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 60 ஆண்டுகளில் நாட்டில் எந்த மத்திய அரசுமே இதுபோன்ற ஊழல் புகாரைச் சந்தித்ததில்லை. அந்த அளவுக்கு ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், யூகபேரம் என பல லட்சம் கோடியில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் பாஜகவின் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஆகவே சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் நிச்சயம் இடம் பெறும் அளவுக்கு வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாடுபடுவதாக முதல்வர் கருணாநிதி கூறினாலும், தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நிதியை இலவசத் தொலைக்காட்சிக்கும், குறைந்த விலை அரிசித் திட்டத்துக்கும் பயன்படுத்தியிருப்பது சரியல்ல. அதேபோல தாழ்த்தப்பட்டோருக்கான பஞ்சமி நிலங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து சேலத்தில் வரும் மார்ச்சில் பாஜக மாநாடு நடத்தும்.
தமிழகத்தில் கருத்து ஒற்றுமையுள்ள கட்சிகளுடன் சேரவே பாஜக விரும்புகிறது. திமுக தற்போது ஊழலில் சிக்கியதால் அது காங்கிரசுடன் கூட்டணி வைப்பது கட்டாயமாகிவிட்டது.
திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும் என அதிமுக நினைத்தால், அதற்காக பாஜகவுடன் சேரும் காலம் கனிந்துவிட்டதாக எண்ணினால் நாங்கள் அதிமுகவுடன் சேருவதற்குத் தயாராக உள்ளோம்.
அதிமுகவுடன் இடதுசாரிகள் இருந்தாலும் பரவாயில்லை.
இடதுசாரிகளுக்கு உரிய இடத்தை கோரமாட்டோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றார்.
பேட்டியின்போது, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல. கணேசன் மற்றும் மாநிலச் செயலர் சுரேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன், பாஜக மதுரை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், புறநகர் மாவட்டத் தலைவர் கந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment