Saturday, February 05, 2011

மீனவர்கள் படுகொலைக்கு மத்திய அரசே பொறுப்பு: சுஷ்மா ஸ்வராஜ்

மீனவர்கள் படுகொலைக்கு மத்திய அரசே பொறுப்பு: சுஷ்மா ஸ்வராஜ்

First Published : 05 Feb 2011 03:08:07 AM IST
Last Updated :

சென்னை, பிப். 4: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியது: வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்றிருந்தேன். 28 வயதில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

அவரது மனைவிக்கு 24 வயதுதான் ஆகிறது. ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும், 6 மாதத்தில் ஒரு குழந்தையும் அவருக்கு உள்ளனர். பாஜக சார்பில் ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கினேன்.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழகம் வரும் முன்பு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினேன். இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு செயல்படாமல் முடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கூட்டு நடவடிக்கைக் குழுவை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இந்திய மீனவர்கள் படுகொலைகளுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.பி.க்கள் இல்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவரான நானே மீனவர் பிரச்னை குறித்து மக்களவையில் குரல் எழுப்புவேன்.

கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது அதனை ஜன சங்கம் கடுமையாக எதிர்த்தது. கச்சத் தீவை மீட்பது குறித்து பாஜக உயர் மட்டக் குழுவில் முடிவெடுக்கப்படும்.

கூட்டுக்குழுவில் உறுதி: 2-ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டுள்ளார். இதில் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதில் அர்த்தமில்லை.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபில் கூறியிருப்பது பொய்யான தகவலாகும். அவர் கூறியதில் ஒன்றுகூட உண்மையில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கை வெளியான பிறகே அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.

இந்த ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) அமைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ராசாவுக்காக மட்டும் ஜே.பி.சி. விசாரணை கேட்கவில்லை.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரிய நிறுவனங்களின் பங்கு என்ன? அமைச்சர்களை நியமிக்கும் அளவுக்கு நடந்த பேரங்கள் என்னென்ன என அனைத்து உண்மைகளும் வெளியே வர வேண்டும். அதற்காகவே நாங்கள் ஜே.பி.சி.யை வலியுறுத்தி வருகிறோம்.

நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இரண்டு முறையும், மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் ஒரு முறையும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அதில் ஏன் ஜே.பி.சி. வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினோம். ஆனால், ஜே.பி.சி. வேண்டாம் என்பதற்கு அரசு தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.

எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்போம். இல்லையெனில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவெடுப்போம்.

திமுகவுக்கு கண்டனம்: திமுக பொதுக்குழுவில் பாஜக தலைவர் நிதின் கட்கரியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி 29-ம் தேதி சென்னையில் திமுகவையும், திமுக அரசையும் விமர்சித்து அவர் பேசியது அனைத்தும் உண்மையானவை. இதனை நேர்மறையாக எடுத்துக் கொண்டு நல்ல சூழ்நிலையை உருவாக்க திமுக முன்வர வேண்டும்.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் விவாதிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். வரும் தேர்தலில் பாஜகவின் வலிமையை வெளிப்படுத்துவோம் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமணன், தேசிய செயலாளர் முரளிதர் ராவ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், மாநில துணைத் தலைவர் எச். ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.



ராசாவை விட்டு வெளியே வாருங்கள்

வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடையே பேசிய சுஷ்மா ஸ்வராஜிடம், ஆ. ராசா குறித்து அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்துக்கும் பதிலளித்து வந்தவர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, ஏன் ராசா குறித்தே கேள்வி கேட்கிறீர்கள் அவரைப் பற்றி 8 கேள்விகளுக்கு பதிலளித்து விட்டேன். ராசாவை விட்டு வெளியே வாருங்கள். மற்ற விஷயங்கள் பற்றியும் பேசுவோம் என்றார்.

வேதாரண்யத்திலிருந்து நான் திரும்பும்போது, புஷ்பவனம் கிராமத்தின் தலைவர் என்னிடம் தங்களை இந்திய மீனவர்கள் என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

No comments: