தமிழக மீனவர் பிரச்னை; மக்களவையில் பா.ஜ.க. குரல் எழுப்பும்: சுஷ்மா ஸ்வராஜ்
First Published : 05 Feb 2011 01:35:58 AM IST
Last Updated :
மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு ஆறுதல் கூறினார் சுஷ்மா ஸ்வராஜ். உடன் தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
நாகப்பட்டினம், பிப். 4: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. தீவிரமாக குரல் எழுப்பும் என்றார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட நாகை மாவட்டம், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற அந்தக் கிராமத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை வந்தார். மீனவர் ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியிடம் பா.ஜ.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியை வழங்கி குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து, நாகை மாவட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பஞ்சாயத்தார்களுடன் சுஷ்மா கலந்துரையாடினார்.
அப்போது மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை கடற்படையின் அத்துமீறிய தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இந்திய, இலங்கை கடல் பரப்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை மத்திய அரசு மற்ற மீனவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்று மீனவப் பஞ்சாயத்தார்கள் வலியுறுத்தினர்.
கலந்துரையாடலின் நிறைவில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
இலங்கை கடற்படையின் அத்துமீறிய தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது வருத்தத்துக்குரியது. மீனவர் ஜெயக்குமாருக்கு ஏற்பட்ட நிலை, இனி வரும் காலங்களில் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், கச்சத்தீவை மீட்பது குறித்தும் மக்களவையில் பா.ஜ.க. வலியுறுத்தும்.
தமிழக மீனவர்களைக் கொல்ல மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதியளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் தெரிவித்தார். அப்போது, மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாள்களுக்கு முன்பு இலங்கை கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியனின் குடும்பத்துக்கு பா.ஜ.க. சார்பில் ரூ. 2 லட்சம் நிதி விரைவில் வழங்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு மக்களவை உறுப்பினர் இல்லை. இருப்பினும், நான் தமிழக மக்களவை உறுப்பினரைப் போலச் செயல்பட்டு, தமிழக மீனவர்களின் பிரச்னைகளை மக்களவையில் முன்வைப்பேன் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
No comments:
Post a Comment