Monday, February 21, 2011

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை

First Published : 02 Feb 2011 03:40:38 PM IST

ராம் சிங் சோதோ
இஸ்லாமாபாத், பிப்.2- பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான "டெய்லி டைம்ஸ்" இன்றைய தலையங்கத்தில் எழுதியுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (பிஎம்எல்-எஃப்) கட்சியின் சார்பில் சிந்து தொகுதி எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சிங் சோதோ தனது பதவியை கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இந்தியா வந்துள்ள அவர் இங்கிருந்தபடியே தனது ராஜிநாமா கடிதத்தை சிந்து மாகாண பேரவைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

பாகிஸ்தானில் அச்சுறுத்தல் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து என்றும் அவர் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக "டெய்லி டைம்ஸ்" பத்திரிகை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வரலாற்று ரீதியாக சிறுபான்மையினர் குறிப்பாக இந்துக்கள் சமூகத்தின் ஓர் அங்கமாகவே திகழ்கின்றனர். பாக். பிரிவினையின்போது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் கூட மத வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டது. ஆனால், சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் மிகவும் அமைதியாக இருந்தன.

சிந்து மாகாணத்தின் கிராமப் பகுதிகளில் இந்து குடும்பங்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாண வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். சிந்து பகுதியின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அவர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

ஆனால், பாகிஸ்தானில் இனம் மற்றும் மதம் அடிப்படையிலான அனைத்து சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பற்ற நிலையே உள்ளது.

ஷியாக்கள், அகமதிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் முன்பு தாக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்துக்கள் தினமும் குறிவைக்கப்படுகின்றனர்.

சிறுபான்மையினர் நலனுக்கான பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அரசு இப்பிரச்னையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரை பாதுகாக்க சட்டரீதியாகவும் போதிய ஏற்பாடுகளை செய்யவும் தொடர்ந்து அமைந்த அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன.

பாக். பிரிவினையின் போது, சிறுபான்மையினர் சமமாக நடத்தப்படுவார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற அரசு தவறிவிட்டது குறித்து சிறுபான்மை அமைப்புகள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வந்தன. ஆனால், அதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

பாகிஸ்தானிய சமூகத்தில் எதிர்மறை நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. இதை கட்டுப்படுத்த இயலாத நிலையும் அதிகரித்துவிட்டது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் ஷாஹித் சல்மான் தஷீர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமே இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

இவ்வாறு "டெய்லி டைம்ஸ்" பத்திரிகை தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: