Monday, February 14, 2011

காலணியில் இந்து தெய்வப் படங்கள்: வேண்டுமென்றே இந்தியர்களை அவமதிக்கும் செயலா? - சார்ல்ஸ் சந்தியாகு கண்டனம்

காலணியில் இந்து தெய்வப் படங்கள்: வேண்டுமென்றே இந்தியர்களை அவமதிக்கும் செயலா?
14 Feb | செய்தி.


காலணியில் இந்து தெய்வப் படங்களை அச்சிட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையை டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு கடுமையாக சாடியுள்ளார்.

“இப்போதெல்லாம் இந்தியர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்த முடியுமோ அப்படியெல்லாம் இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்”, என்றார் சார்ல்ஸ்.

இதற்கு இண்டர்லோக் நாவல் விவகாரம் ஓர் எடுத்துக்காட்டு. அந்நாவலில் குறிப்பிட்ட ஒரு சாதியினரை கேவலப்படுத்தி எழுதி ஒட்டுமொத்த இந்தியர்களையும் இழிவுபடுத்தியுள்ளனர். பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தும் அந்நாவலை மீட்டுக்கொள்வதில் அரசாங்கம் இணக்கம் காட்டவில்லை என்றாரவர்.

இப்போது, காலணியில் இந்து தெய்வங்களின் படங்கள் அச்சிடப்படு விற்பனையாகிறது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று கூறிய சார்ல்ஸ், “இது வேண்டுமென்றே இந்தியர்களின் கோபத்தைத் தூண்டும் நடவடிக்கைபோல் தெரிகிறது”, என்றார்.

“அனைத்து சமயங்களையும் மதிக்க வேண்டியது மிக முக்கியம். ஆனால், மலேசியாவில் எல்லாம் தலைகீழாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்தும் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிக வியப்பாக உள்ளது”, என்று சார்ல்ஸ் கூறினார்.

“நாட்டின் ஒற்றுமையையும் நல்லுறவையும் பாழ்படுத்தும் நிகழ்வுகள் மலேசியாவில் நடந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தவும், அவை மீண்டும் தோன்றாமல் இருப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் என்ன செய்துள்ளது”, என்று அவர் வினவினார்.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஓங்கச் செய்வதும் அவர்களுடையில் பிளவுகள் தோன்றாமல் இருப்பதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் கடமை என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், “இந்தியர்களை மேலும் மேலும் புண்படுத்தும் செயல்களை தடுக்கவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும்”, என்பதை வலியுறுத்தினார்.


This entry was posted on Monday, February

1 comment:

Unknown said...

அந்த காலணிகளை திரும்ப பெற வேண்டும்.