கோத்ரா இரயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு: 31 பேர் குற்றவாளிகள்
[ செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011, 08:08.25 AM GMT +05:30 ] [ வெப்துனியா ]
குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு இரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது முன் திட்டமிடப்பட்ட சதியே என்று தீர்ப்பளித்துள்ள பொடா நீதிமன்றம்.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சபர்மதி விரைவு இரயில் சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதில் பயணிகள் பெட்டி எண் எஸ் 6 முழுமையாக எரிந்து போனது. அயோத்திக்குச் சென்று திரும்பிய கர சேவகர்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்தனர்.
அவர்களில் 59 பேர் தீயில் சிக்கி உயரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது. இதில் 1,200 பேர், பெரும்பாலானோர் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்திற்குக் காரணமான கோத்ரா இரயில் எரிப்பு வழக்கை குஜராத் பொடா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இன்று காலை நீதிபதி பி.ஆர்.பட்டேல் தீர்ப்பை அளித்தார். கோத்ரா இரயில் எரிப்பில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட மேலும் 63 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொடா நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அரசு வழக்கறிஞர் ஜே.எம்.பஞ்சால், நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment