Tuesday, February 22, 2011

தமிழ்மொழியை அழிக்கத் திட்டமிட்ட இலங்கை அரசாங்கம் இன்று எமது இந்து மதம், கலாசாரத்தை அழித்து வருகிறது

தமிழ்மொழியை அழிக்கத் திட்டமிட்ட அரசாங்கம் இன்று எமது மதம், கலாசாரத்தை அழித்து வருகிறது மட்டக்களப்பில் ஆனந்தசங்கரி

மட்டக்களப்பு நிருபர் : தமிழ்மொழியினை அழிக்க திட்டமிட்ட அரசாங்கம் எமது சமயம், கலாசாரத்தை அழித்து வருவதாகத் தெரிவிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வடக்கில் அனைத்துக் கிராமங்களும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் இந்து ஆலயங்கள் முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு அருகில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்புக்கு வந்துள்ள அவர், செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்; எமது யுவதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதாகக் கூறிக்கொண்டு கண்டிய நடனம் பழக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையில் நாம் ஒருவருக்கு ஒருவர் குறை கூறிக்கொண்டு பிரிந்து செயற்படமுடியாது.
எனவே நாம் எமது பகைமைகளை மறந்து ஒற்றுமைப்பட்டு அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்க்கட்சிகள் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்கானது அரசை திணறவைக்கவேண்டும். இதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்.
வடக்கில் இராணுவத்தினரின் அராஜகமே நிலவுகிறது. சகல கிராமங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆலயங்கள், தனியார் கட்டிடங்கள், வீதிகள், கடைத்தொகுதிகள் எல்லாம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் முட்கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளன. அருகில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எமது சமயத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.
இரணைமடுவில் காவல் தெய்வம் என அழைக்கப்பட்டு வந்த கனகாம்பிகை அம்மன் ஆலயம் முட்கம்பி வேலியால் மூடப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல சந்திக்குச் சந்தி புத்தர் சிலைகளை வைத்து பௌத்த மதத்தை பரப்புகின்றனர்.
நான் பௌத்த மதத்துக்கு எதிரானவன் அல்ல. ஒரு மதத்தை மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். எமது மக்களிடம் இராணுவத்தினர் பௌத்தத்தை திணிக்கக்கூடாது.
ஒரு சமயத்தை சமயக்குரவர்கள் ஊடாக வளர்க்கவேண்டும். மாறாக ஆயுத முனையில் இராணுவத்தினரினூடாக வளர்ந்த அரசு முயல்வதை ஏற்க முடியாது.
விடுதலைப்புலிகளின் போராளிகள் எனக்கைதான யுவதிகளுக்கும் பரத நாட்டியம் பழக்கவேண்டும். ஆனால் கண்டிய நாட்டியத்தை பழக்குகின்றனர். இவ்வாறாக எமது கலாசாரத்தை அழிக்கின்றனர்.
விடுதலைப்புலிகளிடம் இருந்த 10 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிப்பதாக கூறுகின்றனர். இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அல்ல. அப்பாவி இளைஞர்களையும் கைது செய்து புலி முத்திரை குத்தி புனர்வாழ்வு என்ற பெயரில் முகாமில் வைத்துள்ளனர்.
இதனால் எத்தனையோ இளைஞர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை டாக்டர்களாக்க வேண்டும் எனக் கனவு கண்டிருக்க அரசாங்கம் அப்பிள்ளைகளுக்கு மரவேலை, தையல்வேலை என்று பழக்குகிறது.
வடக்கில் கிராமங்களில் இராணுவம் நிலை கொண்டிருப்பதால் மாலை 6 மணிக்குப் பின்னர் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலையில் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இப்படியான நிலையில் நாம் கடந்த கால சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு பிரிந்து நிற்காமல் 1972 இல் தந்தை செல்வநாயகத்தின் பின்னால் ஓரணியில் திரண்டதுபோல ஒன்றுபட்டு செயற்படவேண்டியது அவசியம். இதன் மூலம் அரசுக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு பரீட்சார்த்தமான தேர்தலாகும். எமக்கு கிடைக்கின்ற வெற்றியானது அரசை திணறவைக்க வேண்டும். அதற்காக தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு எமது வெற்றிக்காக உழைக்கவேண்டியது அவசியம்.
இச்சந்தர்ப்பத்தில் தற்போது தமிழ்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரே அணியில் இருக்கும்போது ஈ.பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபா அணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன உள்வாங்கப்படவில்லை. இவர்களை இணைத்துக் கொள்ளாததால் குறிப்பாக கிழக்கில் தமிழ் மக்களிடையே பிளவுகள் காணப்படும் நிலை உள்ளது. இவர்களையும் இணைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி பிரமுகர் சோமசுந்தரம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
 (ஆனந்தசங்கரி சொல்லும் இந்த விசயத்தைமட்டுமே இங்கே பதிகிறேன். மற்றபடி அவருக்கு நான் ஆதரவில்லை)

No comments: