அமைச்சரவையில் இன்று மாற்றம் - கனிமொழிக்கு அமைச்சர் பதவி?
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 6, 2008
டெல்லி: மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படுகிறது. சரத்பவாரின் மகள் உள்ளிட்ட இளம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. ஜி.கே.வாசன் கேபினட் அமைச்சராக்கப்படவுள்ளார்.
சமீப காலமாகவே அமைச்சரவையில் மாற்றம் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்துப் பேசினார்.
இன்று காலை பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து இன்று மாலை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
இளம் எம்.பிக்களுக்கு வாய்ப்பு:
இளம் எம்.பிக்கள் சிலருக்கு இம்முறை அமைச்சரவையில் இடம் கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மறைந்த முன்னாள் அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர்ஆதித்யா சிந்தியா, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின் பிரசாத், ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் ஆகிய இளம் காங்கிரஸ் எம்.பிக்கள் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.
சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மத்திய அமைச்சராகிறார். புதுச்சேரி எம்.பி. நாராயணசாமியும் அமைச்சராகிறார். அவருக்கு கேபினட் பொறுப்பு தரப்படும் எனத் தெரிகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மணிசங்கர அய்யர் நியமிக்கப்படக் கூடும்.
இணை அமைச்சராக உள்ள ஜி.கே.வாசனுக்கு கேபினட் அந்தஸ்து தரப்படும் எனத் தெரிகிறது.
முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்லும் அமைச்சராகிறார்.
சுரேஷ் பச்சோரி ராஜினாமா:
இதற்கிடையே, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் பச்சோரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜ்யசபா எம்.பி. பதவி ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைந்தது. அன்றே தனது ராஜினாமா கடிதத்தை பச்சோரி, பிரதமரிடம் கொடுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பச்சோரி, அம்மாநில தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.
சுரேஷ் பச்சோரி தவிர நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ், திட்டத் துறை இணை அமைச்சர் எம்.வி.ராஜசேகரன், சுரங்கத்துறை இணை அமைச்சர் சுப்பராமி ரெட்டி, உருக்குத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் தாஸ், உள்துறை இணை அமைச்சர் மாணிக்ராவ் காவிட் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அனைவரது ராஜினாமா கடிதங்களையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஏற்றுக் கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவிக்கிறது.
ராஜினாமா செய்த அனைவரும் அவரவர் மாநில தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள்.
No comments:
Post a Comment