Tuesday, April 15, 2008

சித்திரைதான் சர்வதாரி ஆண்டு பிறக்கும்- தினமணி தலையங்கம்

பகுத்தறிவல்ல, பாசிசம்!


தைத் திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு அறிவித்துவிட்டது என்பதால், சர்வதாரி ஆண்டு தை மாதம் தான் பிறக்க வேண்டும் என்று கூறும் வேடிக்கை அரங்கேறுகிறது. அண்டை மாநிலம் கேரளத்திலும், வடக்கே பஞ்சாபிலும், கிழக்கே அசாமிலும், அது ஏன், இந்தோனேஷியா மற்றும் கொரியா வரை புத்தாண்டு கொண்டாடும்போது, அது தவறு, நான் மட்டும் தை மாதம் தான் புத்தாண்டு கொண்டாடுவேன் என்று சொன்னால், அது அவரவர் விருப்பம். அதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை.
அதேநேரம், அரசு அறிவித்தது என்பதற்காக சமயச் சடங்குகளை மாற்ற வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்வதும், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அரசு ஆணைப்படிதான் ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், ஆட்சியாளர்களின் பாசிச மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது என்பது மட்டுமன்றி மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள ஆலயங்களில், வருடப்பிறப்பை ஒட்டி எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும், புது வருடப் பஞ்சாங்கம் படிப்பது போன்ற சடங்குகளை நடத்தக்கூடாது என்றும் வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் பிறக்கும் என்று உத்தரவிடத்தான் ஆட்சியாளர்களுக்கு அதிகாரமே தவிர, சர்வதாரி ஆண்டு வழக்கம்போலச் சித்திரையில் தொடங்கக்கூடாது என்று உத்தரவு போடும் அதிகாரம் இருக்கிறதா என்ன?
மக்கள் சர்வதாரி ஆண்டு சித்திரையில் பிறக்கிறது என்று நம்பினால், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப ஆலயங்களில் பூஜைகள் செய்ய விரும்பினால் அதைத் தடுக்கும் உரிமையோ, மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் உரிமையோ எந்த அரசுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கவில்லை. நமது அரசியல் அமைப்புச் சட்டம் இறைமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வழிபாடு மற்றும் மத நம்பிக்கைகளில் ஆட்சியாளர்கள் தலையிடுவதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இறைமறுப்புக் கொள்கையைப் பகுத்தறிவு என்று கொள்வதேகூடத் தவறு. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளும், உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 99 விழுக்காடு மக்களும், தலைமுறை தலைமுறையாக நமது மூதாதையரும் நம்புகிற விஷயத்தை மறுப்பது என்பது வள்ளுவர் வழியில் கூறுவதாக இருந்தால், பலகற்றும் கல்லாத அறிவிலாதவர்கள் செயல். அதைவிடப் பெரிய அறியாமை, மக்களின் நம்பிக்கைகளைச் சட்டம் போட்டுத் தகர்த்துவிடலாம் என்கிற அதிகார மமதை.
அரசின் சட்டமும், வாய்வழி உத்தரவும் எந்த அளவுக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை தமிழகத்திலுள்ள ஆலயங்களில் நேற்று கூடிய மக்கள் வெள்ளம் தெளிவுபடுத்தியது. பஞ்சாங்கம் படிக்கப்படவில்லை என்றாலும் பஞ்சாங்க விற்பனை சற்றும் குறையவில்லை. சிறப்பு வழிபாடுகள் செய்யப்படவில்லை என்றாலும், அத்தனை ஆலயங்களிலும் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் அலங்காரங்களுமாக சர்வதாரி வருடப்பிறப்பு அமர்க்களப்பட்டது.
தங்கள் குடும்பத்தினரையே இறைமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியாதவர்களும், தங்களது சுற்றமும் உறவும் சமயச் சடங்குகள் செய்வதைத் தடுக்க முடியாதவர்களும், தாங்களேகூட தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள சில மூடநம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்களும் ஊருக்கு உபதேசம் செய்வதும், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மதச் சடங்குகளில் தலையிடுவதும் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை நடைமுறைப்படுத்திவிட முடியாது என்பதுகூட இவர்களுக்கு ஏன் புரியவில்லை?
கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
""நதிபோகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்;
மதியம் தன் வானை எட்டு
மண்ணிலே விழட்டும் என்பான்;
இதுமுதல் கடல்நீ ரெல்லாம்
இனிக்கட்டும் தேன்போல் என்பான்;
அதிகாரி போடும் ஆணைக்(கு)
அடங்காமல் வேறென் செய்ய?"
முகம்மது பின் துக்ளக், ஒளரங்கசீப் வரிசையில் சரித்திரத்தில் இடம்பிடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்தால், அதைத் தடுக்கவா முடியும்? ஆனால், "சர்வதாரி' ஆண்டு சித்திரையில்தான் பிறக்குமே தவிர தை மாதம் பிறக்காது!

No comments: