Sunday, April 27, 2008

தடுப்பூசி: ஒரிஸ்ஸாவிலும் 2 குழந்தைகள் பலி-அமைச்சர் அன்புமணி

தடுப்பூசி: ஒரிஸ்ஸாவிலும் 2 குழந்தைகள் பலி
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற



டெல்லி: தமிழகத்தைத் தொடர்ந்து தடுப்பூசிக்கு ஒரிஸ்ஸாவிலும் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை தடுப்பூசி மருந்தை பயன்படுத்த மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.

தட்டம்மை நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய நோய் தடுப்பு நிறுவனம் (இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட் நிறுவனம்-ஐ.ஐ.எல்.) தான் அரசுக்கு சப்ளை செய்தது.

இந் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசிப் போடப்பட்டது. ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.

உயர் நிலைக் குழு அவரச ஆலோசனை:

தமிழகத்தில் 4 குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உயர்நிலைக்குழுவின் அவசரக் கூட்டத்தை அமைச்சர் அன்புமணி கூட்டினார்.

அதில் சுகாதாரத் துறை செயலாளர் நரேஷ் தயாள், சுகாதாரத் துறை இயக்குனர் ஜெனரல் ஸ்ரீவத்ஸவா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மருந்துக்கு தடை:

இதையடுத்து அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை ஹைதராபாத் நிறுவனம் சப்ளை செய்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

ஆய்வகத்தில் பரிசோதனை:

மருந்தின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கவுசாலியில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகம் இந்த பரிசோதனையை நடத்தவுள்ளது.

உயர் மட்ட டாக்டர்கள் குழு வருகை:

மேலும் திருவள்ளூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு உயர் மட்ட டாக்டர்கள் குழுவையும் அனுப்பி வைத்துள்ளார் அன்புமணி. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தொற்றுநோய் நிறுவனம், சுகாதார சேவை இயக்குனர் ஜெனரல், இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குனரகம் ஆகியவற்றை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கியுள்ளனர்.

விசாரணை அறிக்கையை விரைவில் அளிக்குமாறு மத்திய குழுவுக்கு அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, குழந்தைகள் பலி குறித்த விசாரணை நடத்தும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார மையத்தின் தேசிய போலியோ கண்காணிப்பு திட்ட நிபுணர்கள் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பனனீருடன் அன்புமணி பேச்சு:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை அன்புமணி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் பேசினார். அப்போது, சம்பவம் குறித்து அன்புமணியிடம் பன்னீர் செல்வம் விளக்கினார். தடுப்பு ஊசி போடுவதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அன்புமணி,

ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.எல். நிறுவனத்துக்கு 90 லட்சம் யூனிட் தடுப்பூசி மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதில், 45 லட்சம் யூனிட் இதுவரை சப்ளை செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனம் வினியோகம் செய்துள்ள அனைத்து தடுப்பூசி மருந்துகளையும் பயன்படுத்த தடை விதித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய மருத்துவ நிபுணர் குழு, தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அந்த குழு தனது அறிக்கையை அளிக்கும். அதுபோல, தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்துகளின் மாதிரிகள் கவுசாலியில் உள்ள மருந்து ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவு குறித்த அறிக்கையை விரைவில் தர கேட்டிருக்கிறேன். அதன் பிறகே தவறு எங்கு நடந்தது என்பது தெரியவரும் என்றார்.

ஒரிஸ்ஸாவிலும்...

இதற்கிடையில் ஒரிஸ்ஸா மாநிலம் பூரியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளுக்கு நோய் தடுப்புப்பூசி போடப்பட்டது. சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் மூச்சுத் திணறல் ஏற்ப்படு பரிதாபமாக இறந்தன. இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் இருந்த தங்கள் குழந்தைகளை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பெற்றோர்கள் முயன்று வருகின்றனர்.

No comments: