Sunday, April 06, 2008

பதவிக்காக ஹொகனேக்கல் கைவிட்ட கருணாநிதிக்கு பாஜக எதிர்ப்பு

மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து விட்டார் கருணாநிதி - பாஜக
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 6, 2008


சென்னை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது, ஏற்புக்குரியதல்ல என்று தமிழக பாஜக கூறியுள்ளது.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் திருநாவுக்கரசர். பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசுகையில், ஒகனேக்கல் பிரச்சினையில் மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி போனாலும், திமுகவுடன் கூட்டணி முறிந்தாலும், விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதியோ கூட்டு குடிநீர் திட்டத்தை தேர்தலைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில்தான் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக கர்நாடக தலைவர்கள் தான் அறிவிக்க வேண்டும்.

ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தம் காரணமாக கருணாநிதி இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ஏற்கத்தக்கதல்ல.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சனையை எடியூரப்பா கிளப்பியதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் கடந்த 1998ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியினர் இத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எல்லா பிரச்சனைகளுக்கும், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல, பாஜகவை குற்றம்சாட்டி சிலர் நேற்று கமலாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இங்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் நியாயமாக நேற்று காரைக்குடி சென்று சோனியாவுக்கு முன்பாகத் தான் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர். ஆனால் இந்த சிக்கல்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

No comments: