நக்சலிசம் : அனைத்துக் கட்சிளுக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை(ஏஜென்சி), 22 ஏப்ரல் 2008 ( 16:11 IST )
தீவிரவாதம் மற்றும் நக்சலிசத்தை தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டசபையில் இன்று கொடைக்கானலில் நகசலைட்டுகள் பிடிபட்டது மற்றும் நவீன் என்ற நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.
இதற்கு பதிலளித்து கருணாநிதி பேசியதாவது :
வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது எப்படி அனைத்துக் கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு, மக்களுக்காக ஒன்று சேர்ந்து செயல்படுகிறோமோ அது போலத்தான் தீவிரவாதம், நக்சலிசம் போன்றவற்றையும் சமாளிக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.
இளைஞர்கள் தீவிரவாதப் பாதைக்கு செல்வதைத் தடுப்பதில் அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
படித்த, வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் தான் நக்சல் பாதையில் காலடி எடுத்து வைக்கின்றனர் என்று சில உறுப்பினர்கள் இங்கு கருத்து தெரிவி்த்தனர்.அந்தக் கருத்து எனக்கும் ஏற்புடையதுதான்.
அவர்கள் ஏன் ஆயுதம் தூக்குகிறார்கள், ஏன் வன்முறை பாதைக்கு செல்கிறார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் நாம் ஆழாமாக சிந்தித்து இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோதிலும் பல்வேறு தீவிரவாத செயல்கள் நடந்துள்ளன.தீவிரவாத செயல்களைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபடி தான் உள்ளது.
நக்ஸல்களையும் தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்த மாநில எல்லைகளிலும், கடலோரங்களிலும் செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான நக்ஸல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராக்கெட் லாஞ்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொடைக்கானல் மலையில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன் திண்டுக்கல் மாவட்ட போலீசாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் மிகத் துரிதமாக செயல்பட்டு அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் போலீசார் மீதே கையெறி குண்டுகளை வீசிவிட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.
இதனால் தற்காப்புக்காகத் தான் போலீசார் வானை நோக்கி சுட வேண்டியதாயிற்று. தப்பியோடிய நக்சல்களை விரட்டிப் பிடிக்க முயன்றுவிட்டு திரும்பி அந்த இடத்துக்கு வந்தபோது தான் நக்சல் நவீனின் உடல் அங்கு கிடந்ததை போலீசார் பார்த்துள்ளனர்.தப்பியோடிய நக்சல்களைப் பிடிக்க தேடுதல் பணி நடந்து கொண்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.மதக் கலவரங்களைத் தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளால தான் கடந்த 2 ஆண்டுகளில் 24 நக்ஸல்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment