Saturday, April 12, 2008

இஸ்லாமுக்கு எது சினமூட்டுவதாக இருக்கிறது?

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு சம உரிமைகள் கிடையாது
மலேசியாஇன்று, Apr 12 2008, 7:07 pm (செய்தி)


மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு நிர்ப்பந்தத்தின்பேரில் குடியுரிமைகளை மலாய்க்காரர்கள் வழங்கியுள்ளார்கள். எனவே மலாய்க்காரர் அல்லாதவர்கள், சமத்துவத்தை அல்லது சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்கக்கூடாதென்று கிளந்தான் பட்டத்து இளவரசர் தெங்கு ஃபாரிஸ் பெத்ரா இன்று கூறியுள்ளார்.

இன்று கோலாலம்பூரில், புதிதாக தோற்றம் பெற்றுள்ள பாரிசான் பெர்திண்டாக் பெர்பாடுவான் மலாயு ஏற்பாடு செய்த “மலாய்க்காரர் ஐக்கியம், தேசிய ஐக்கியத்தின் மூலாதாரம்” என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் அவர் முக்கிய உரை நிகழ்த்தினார்.

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூட்டரசு அரசமைப்பு மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடுகளின் அடிப்படையில் அனைத்து மலேசியர்களுக்கு இடையிலும் ஐக்கியத்தை ஊக்குவிக்கும் முக்கிய அமைப்பாக மலாய் ஆட்சியாளர்கள் விளங்குகிறார்கள் என்று தெங்கு ஃபாரிஸ் கூறினார்.

“ஆக, மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதுடன் மலாய்க்காரர் உரிமைகள் மற்றும் சலுகைக்கள் தொடர்பான விவகாரங்களை ஒரு போதும் எழுப்பக்கூடாது. காரணம், தானா மலாயு கூட்டரசில் 2.7 மில்லியன் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு கட்டாயத்தின்பேரில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதால் அதற்கு அவர்கள் நன்றி கூற வேண்டும்.

“எனவே மற்ற இனத்தவர் குடியுரிமைகளைப் பெற்றுக் கொண்டபின்னர், பிறிதொரு காலத்தில், சமத்துவத்தையும் சலுகைகளையும் நாடக்கூடாது.” 11 பக்கங்களில் தயாரிக்கப்பட்ட வாசகமொன்றை வாசித்தபோது தெங்கு ஃபாரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இருப்பினும், மலாய்க்காரர்களை ஐக்கியப்படுத்தும் வேளையில், மலாய்க்காரர் அல்லாதவர்களின் உரிமைகளும், எடுத்துக்காட்டாக சமயம் போன்றவையும் காக்கப்படவேண்டும்.

தத்தம் மதத்தை அமைதியாக பின்பற்றுவதற்கு மலாய்க்காரர் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். என்றபோதிலும், சட்டத்துக்கேற்ப அது இருக்கவேண்டியதுடன் “இஸ்லாத்துக்கு சினமூட்டுவதாக,” இருக்கக்கூடாது.

“மலாய் ஆட்சியாளர்கள், இஸ்லாமிய சமயத்தின் தலைவர்களாக இருக்கின்றனர். மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு. (நெகாரா இஸ்லாம்) மதச்சார்பற்ற நாடல்ல. மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்ட நமது சொந்த அணுகுமுறையை நாம் கொண்டுள்ளோம்.” இப்படி அவர் கூறியபோது மக்கள் பலத்த கைத்தட்டலுடன் ஆரவாரம் செய்தனர்.

மலாய் ஐக்கியமும் மலாய்க்காரர் சிறப்புரிமைகளும் நிலைநாட்டப்படுவதால், மற்றவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறது என பொருள்படாது என்றார் அவர்.
“உண்மையில், மலாய்க்காரர் உரிமைகளும் சிறப்புச் சலுகைகளும் காக்கப்பட்டு இடையூறு விளைவிக்கப்படாதிருந்தால், அது தேசிய நல்லிணக்கத்தை உறுதிசெய்யும், மலாய்க்காரர் மட்டுமின்றி பிற இனத்தவருக்கும் அது நலன் பயக்கும்.

12 வது பொதுத் தேர்தல், மலாய்க்காரர்களுக்கு “சவால்” விடுக்கப்பட்டுள்ளதை காட்டுவதால் மலாய்க்காரர் ஐக்கியத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியுள்ளதாக தமதுரையில் தெங்கு ஃபாரிஸ் கூறினார்.

“மலாய்க்காரர்கள் பிளவுபட்டுள்ளதையும், அரசியல், பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் மற்ற இனத்தவரை அவர்கள் எதிர்கொண்டுள்ளதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன”, என்றார் அவர்.

மலாய்க்காரர்கள், மலேசியாவின் பூர்வீக மக்கள் (PENDUDUK ASAL) என அரசமைப்பு குறிப்பிடுவதால், ஒவ்வொரு மலாய்க்காரரும் அரசமைப்பையும் இஸ்லாத்தையும் காக்க வேண்டும். இதனை மலாய் ஐக்கியத்தின் வாயிலாகத்தான் சாதிக்கலாம்.

“ஒன்றுபடுவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிளவுபடாதீர்கள். நம்மை தனிமைப்படுத்தும் சச்சரவுகளை தவிர்க்க வேண்டும். மாறுபட்ட விளக்கங்களை தரும் சித்தாந்தங்கள், மலாய் ஐக்கியத்துக்கு பங்காற்றாது.”

“இஸ்லாமிய நாடு, மதச்சார்பற்ற நாடு, சமூக நலன் நாடு….. போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களை விவாதிப்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்,மலாய்க்காரர்களிடையே தப்பெண்ணங்கள் வேரூன்றத் தொடங்கியுள்ளன”, என்றும் அவர் கூறுகிறார்.

No comments: