உதயகுமாருக்கு மாரடைப்பு?
மலேசியாஇன்று, Apr 12 2008, 4:09 pm (செய்தி)
இசா கைதியும் இண்ட்ராப் சட்ட ஆலோசகருமான பி.உதயகுமாருக்கு
முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்
துவோர் வரிசையில் மலேசிய இந்திய ஐக்கிய கட்சியும்(ம இ ஐ க)
சேர்ந்து கொண்டிருக்கிறது.
நீரிழிவு நோயால் அவதியுறும் உதயகுமாருக்கு முறையான மருத்துவ
சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்
என்று ம இ ஐ க யின் தலைவர் கே. எஸ் நல்லகருப்பன் இன்று
கூறினார்.
“தடுப்புக் காவலில் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்
விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாய் இருத்தல் கூடாது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால்
அவர்களை அங்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவ நிபுணர்களின் கவனிப்பு தேவை என்றால் அதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்”,
என்று நல்லகருப்பன் கூறினார்.
“உதயகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அங்கிருந்து தடுப்பு மையத்திற்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்ட
போதும் கைவிலங்கிடப்பட்டிருந்ததைக் கண்டோம். அவ்வாறு செய்திருக்க கூடாது. அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி அல்ல. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்”, என்று நல்ல கருப்பன் கூறினார்.
மேலும் இரு இண்ட்ராப் தடுப்புக் கைதிகள் - வி.கணபதிராவும்
ஆர்.கெங்காதரனும் - தங்களுக்கும் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாக
புகார் செய்திருப்பதாய் நல்லகருப்பன் மேலும் கூறினார்.
“இவ்விஷயத்தை கவனிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். காவலில் வைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையும் மறுக்கப்படுவதால் உண்டாகும் வேதனையை நான் அறிவேன். அரசாங்கம் தடுப்புக்காவலில் உள்ளவர்களிடம்
மனிதாபிமானம் காட்டி அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்க ஆவன செய்யவேண்டும்”, என்று நல்லகருப்பன் மேலும் வலியுறுத்தினார்.
உதயகுமாருக்கு மாரடைப்பு
பன்னிரண்டு ஆண்டுகளாக இனிப்பு நீரால் அவதியும் உதயகுமார், இனிப்பின் அளவு மும்மடங்கு உயர்ந்ததால், ஏப்ரல் 07 ம் தேதி
தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏப்ரல் 10ம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் தடுப்பு மையத்திற்கு அழைத்து
செல்லப்பட்டார்.
ஆனால் அவரின் குடும்பத்தார் உதயகுமாரின் உடல்நிலை முழுமையாக குணமடையவில்லை என்று கூறிவருகின்றார்கள்.
சிகிச்சை முழுமையடைவதற்கு முன்பே உதயகுமார் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் என்று அவரின் சகோதரரும் இண்ட்ராப் தலைவருமான பி. வேதமூர்த்தி குறைகூறினார்.
அவர் இன்று இலண்டனில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “கவனக்குறைவாக நடந்து கொண்டதற்காகவும் முழுமையாக
குணமடைவதற்கு முன்பே உதயகுமாரை மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்றதற்காகவும்” தடுப்பு மைய இயக்குனர் மீதும் உள்துறை அமைச்சர்மீதும் போலீஸ் புகார் செய்யும்படி இண்ட்ராப் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
“அவரைச் சென்று கண்ட உறவினர் ஒருவரிடம்,
பார்வைத்திறன் குறைந்திருப்பதாகவும் தலைசுற்றல் இருப்பதாகவும்
இருதயம் பிரச்னை கொடுப்பதாகவும் உதயகுமார் கூறியிருக்கின்றார்.”
“உதயகுமாரின் இருதய தசைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும்
ஒருமாத காலத்திற்கு மேல் நீரிழிவு நோய்க்கு சரியான சிகிச்சை செய்யப்படாததால் அவருக்கு மிதமான மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தைப்பிங் மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த ஒரு மருத்துவர் சந்தேகப்படுகிறார்”, என்று அவர் கூறினார்.
அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தனியார் மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டிய தேவையிருப்பின்
அதற்கான செலவை ஏற்க தம் குடும்பம் தயாராக இருப்பதாகவும் வேதமூர்த்தி கூறினார்.
“அவரை தேசிய இருதய சிகிச்சை மையத்திற்கு உடனடியாக கொண்டு செல்லவேண்டும். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை
அளிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு பொதுமக்களின் ஆதரவும் தேவை”, என்றார் அவர்.
உதயகுமாருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்
என்பதை வலியுறுத்தி அவரின் தாயார் கே. கலைவாணியும் வருங்கால
மனைவி இந்திராதேவி சுப்ரமணியமும் சிரம்பானிலும் பிரிக்பீல்ட்ஸிலும்
தனித்தனி போலீஸ் புகார்களைச் செய்தனர்.
நேற்று, உதயகுமாருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுமார் 300 இண்ட்ராப் ஆதரவாளர்கள் கமுந்திங் தடுப்பு முகாமிற்கு எதிரில் பேரணி ஒன்றை நடத்தினர்.
No comments:
Post a Comment