சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை-100 பேர் கைது
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008
சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூளக் காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போக் ரோடு தணிகாசலம் ரோட்டில் அணி வகுத்து நின்றனர். வைத்தியராமன் ரோட்டிற்கு சென்றவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் காலை 11 மணியளவில் வெற்றிச் செழியன் தலைமையில் தணிகாசலம் ரோட்டில் இருந்து பாஜக அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதேசமயம், பா.ஜ.கவினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.
மாநில துணைத் தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு ரோட்டுக்கு வந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
போலீசார் அவர்களை தடுத்து அலுவலகத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினும் மோதல் எண்ணத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீஸார் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த சமயத்தில், இன்னொரு குழு அங்கு வந்து எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தது.
இது குறித்து பாஜக துணைத் தலைவர் குமாரவேலு கூறுகையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடந்த 1998-ம் ஆண்டே ஒப்புதல் அளித்து 2 மாநில அரசுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் ஆட்சியில் இருந்த திமுகவும், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.
இப்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது. சில சமூக விரோத சக்திகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.
மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. பாஜக மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவே எங்கள் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
உண்மையில் இந்த அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால் ஓகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றார்.
2 comments:
//இப்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது. சில சமூக விரோத சக்திகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
//
It means the BJP accept that EDIYURAPPA is an anti social element. He is the first culprit to set fire to this issue
அகண்ட பாரதம் பேசும் பாஜக பிராந்திய உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது.
ஆனால் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் கும்பல்கள் மட்டும் மொழித்தேசியம் பேசலாம்.
கூத்துடா சாமி!
Post a Comment