Sunday, April 06, 2008

திமுக வெளியேறினாலும் கவலை இல்லை: தண்ணீர் தரமாட்டோம். காங்கிரஸ் அறிவிப்பு

திமுக விலகினாலும் கவலையில்லை- எஸ்.எம்.கிருஷ்ணா
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008


டெல்லி: ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக திமுக அதிருப்தி அடைந்திருப்பது குறித்து எங்களுக்குக் கவலை. இந்த விவகாரத்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டாலும் அதுகுறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். அதில் தவறு இல்லை. நமது பிரச்சினைக்கு உரிய தீர்வு வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தைத்தான் நாட முடியும். அதுதான் சரியான இடம்.

இந்த விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம். மற்றவர்கள் குறித்து எங்களுக்குக் கவலையில்லை.

இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படுமோ அல்லது திமுக அதிருப்தி அடையுமோ என்று நாங்கள் கவலைப்பட முடியாது. திமுக கூட்டணியிலிருந்து விலகினாலும் அதுகுறித்து கர்நாடகம் கவலைப்பட முடியாது என்றார் கிருஷ்ணா.

உச்சநீதிமன்றம்தான் சரியான தீர்வுக்கு உரிய இடம் என்று கூறும் இதே எஸ்.எம்.கிருஷ்ணாதான், முன்பு முதல்வராக இருந்தபோது, உச்சநீதிமன்ற் காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மறுத்து, உச்சநீதிமன்றத்தால் மிகக் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.

தமிழர்களுக்கு எதிராக அப்போது மூண்ட மோதலைத் தடுக்க முடியாவிட்டால், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாவிட்டால் எதற்காக முதல்வர் பதவியில் இருக்கிறீர்கள், பதவியை விட்டு போய் விடுங்கள் என்றும் உச்சநீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: