குஜராத், மகாராஷ்டிராவில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2008
அகமதாபாத்: குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில்,அடுத்தடுத்து 17 வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலுப்பூர் தர்வாஸா என்ற இடத்தில் குப்பைத் தொட்டியில் இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு குஜராத் மாநிலம் மோடோசா நகரில் வெடிகுண்டு வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி மெஹ்ராலி பகுதியில் வெடித்த வெடிகுண்டைப் போலவே இதுவும் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிகு செளக் என்ற இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. அங்குள்ள ஹோட்டலில் இந்த குண்டு வெடித்தது.
மோடோசா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்
மோடோசா நகரில் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டு பையை தூக்கி வீசி விட்டுச் ெசன்றுள்ளனர்.
இதே போலத்தான் டெல்லியிலும் இரு மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டுச் சென்றது நினைவிருக்கலாம்.
மாலேகானில் ஸ்கூட்டியில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களால் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நவராத்திரி விழா தொடங்கவுள்ள நிலையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதால் இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு உச்சகட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment