ஓகனேக்கல்: தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது - நஞ்சே கெளடா
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2008
பெங்களூர்: ஓகனேக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்திற்குள்தான் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் இது குடிநீர்த் திட்டம். இதை கர்நாடகம் எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. உடனடியாக தமிழக அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நஞ்சே கெளடா கூறியுள்ளார்.
எந்தவித நியாய தர்மமும் இல்லாமல், கர்நாடகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும், கன்னட அமைப்பினரும் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்ைத எதிர்த்து வருகின்றனர்.
தேசியத் தலைவரான தேவெ கெளடா முதல் உள்ளூர் தலைவர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா வரை ஓகனேக்கல் திட்டம் கூடாது என்று பிடிவாதமாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது. இந்தத் திட்டத்தை கர்நாடகம் எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று முன்னாள் கர்நாடக அமைச்சர் நஞ்சே கெளடா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், நஞ்சே கெளடா கூறுகையில், உண்மை என்னவென்றால் போராட்டம் நடத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் குறித்துத் தெரியவில்லை.
இரண்டு மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயோ ஒரு ஆறு ஓடினால், அதன் நடுவில் ஒரு கோட்டைப் போட்டு எல்லை பிரிப்பது என்பது சர்வதேச அளவில் உள்ள நடைமுறை.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இன்னொரு நடைமுறை, ஆற்று நீரைப் பயன்படுத்தும்போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது குடிநீருக்குத்தான். அடுத்து நீர்ப்பாசனத்திற்கும், பிறகு மின் உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்துவார்கள்.
ஓகனேக்கல் திட்டம் முழுக்க முழுக்க குடிநீருக்கான திட்டம். மேலும், அந்தத் திட்டத்தை தமிழகத்திற்குட்பட்ட பகுதியில்தான் செயல்படுத்தப் போகிறார்கள். எனவே கர்நாடகத்தால் அதை எதிர்க்க முடியாது. எதிர்ப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.
ஓகனேக்கல் முன்பு கோவை மாவட்டத்தில் இருந்தது. 1956ம் ஆண்டு கொள்ளேகால் கர்நாடகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் கொள்ளேகாலுக்கும், ஓகனேக்கலுக்கும் இடையே ஓடும் காவிரி ஆறுதான் இரு மாநிலங்களுக்கும் எல்லைக் கோடாக நிர்ணயிக்கப்பட்டது.
1998ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி குடிநீருக்காகத்தானே தவிர, மின்சாரத்திற்கான திட்டத்திற்கு அல்ல. எனவே தமிழகம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அப்படி அவர்கள் மின்சாரம் தொடர்பான அணை கட்ட நினைத்தால் அதுகுறித்து கர்நாடகத்திடம் அறிக்கை தர வேண்டும். அப்படி இதுவரை எந்த அறிக்கையும், கடிதமும் கர்நாடகத்திற்கு வரவில்லை. எனவே அது குறித்த திட்டம் அவர்களிடம் இல்லை என்றே அர்த்தம்.
ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதுகுறித்து சுப்ரீம் கோர்ட் செல்லலாம்.
உணர்ச்சிப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோஷம் போடுகிறார்கள். இப்போது உள்ள பிரச்சினை தண்ணீர்ப் பங்கீடு தொடர்பானதே அல்ல. இது முழுக்க முழுக்க தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம். இதில் கர்நாடகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்ைல என்பதை உண்மை.
உண்மையில், ஓகனேக்கல் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தீவு குறித்துத்தான் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. ஆனால் அதுகுறித்து யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை.
இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஒத்திவைத்தது தேவையற்றது. பத்து வருடங்களாக கிடப்பில் போட்டிருந்தவர்கள், ஒரு மாதம் காத்திருந்து என்ன செய்து விடப் போகிறார்கள். உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கர்நாடக ஆளுநரை அழைத்து, இந்தத் திட்டம் குறித்த உண்மையை கர்நாடக மக்களுக்கு விளக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அப்போதுதான் கர்நாடக மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.
தவறாக வழிநடத்துபவர்களால் தவறான வழிக்கு யாரும் போய் விடக் கூடாது. வன்முறையில் இறங்காதீர்கள். அனைவரும் சகோதரர்கள். சகோதரர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் நஞ்சே கெளடா.
1 comment:
நல்ல மனிதர்
Post a Comment