Wednesday, April 02, 2008

கர்நாடக பஸ்கள் மீது தாக்குதல் - இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்

நன்றி தட்ஸ்டமில்

தமிழகம் பதிலடி: கர்நாடக பஸ்கள் மீது தாக்குதல் - புக்கிங் ஆபீஸ் மூடல்
புதன்கிழமை, ஏப்ரல் 2, 2008


மதுரை: கன்னடர்களின் வன்முறைக்குப் பதிலடியாக தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு இடங்களில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) பேருந்துகள் தாக்கப்பட்டன. மதுரையில் கே.எஸ்.ஆர்.டி.சி புக்கிங் அலுவலகத்தைப் பூட்டி, ஊழியரை சிறை வைத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

ஓகனேக்கல் பிரச்சினையைக் காரணம் காட்டி கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கன்னட வெறியர்கள் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக பேருந்துகளும் வழிமறிக்கப்பட்டன. தமிழ் டிவி சானல்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் ஒரு பேருந்தின் டயரில் காற்றை இறக்கி விட்டு, பேருந்தை சிலர் அடித்து நொறுக்கினர். விரைந்து வந்த போலீஸார் 8 பேரைக் கைது செய்தனர்.

கோவையிலிருந்து பெங்களூர் சென்ற பேருந்து கணபதி பகுதியில் தடுத்து நிறுத்தி தாக்கப்பட்டது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் மாற்றுப் பேருந்தில் பயணிகள் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரையில் சிறை வைத்துப் போராட்டம்:

இந்த நிலையில் மதுரையில் கேஎஸ்ஆர்டிசி புக்கிங் அலுவலகத்தை மூடி மதுரை வக்கீல்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குச் சென்றனர்.

அங்குள்ள கே.எஸ்.ஆர்.டிசி புக்கிங் அலுவலகத்திற்குச் சென்ற வக்கீல்கள், அலுவலகத்தை மூடுமாறு அங்கிருந்தவரிடம் கூறினர். ஆனால் அவர் அமைதியாக இருக்கவே, அவரை உள்ளே வைத்து வெளியே பூட்டுப் போட்டுப் பூட்டினர்.

பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் கரியைப் பூசியும், தாரைப் பூசியும் சுற்றி நின்று போராட்டம் நடத்தினர். புக்கிங் அலுவலக பெயர்ப் பலகையும் உடைக்கப்பட்டது. பின்னர் வக்கீல்கள் சிலர் பஸ்கள் மீது ஏறி கூரை மீது நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழர்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பூட்டை உடைத்து புக்கிங் அலுவலக ஊழியரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

தற்போது அதிக அளவில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கேஎஸ்ஆர்டிசி புக்கிங் அலுவலகத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில்...

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்து நேற்றிரவு பெங்களூர் புறப்பட்ட கர்நாடக அரசு பஸ் தஞ்சாவூர் புது பஸ்நிலையம் வந்தது. அங்கு தமிழ் தேச பொதுவுடமை கட்சி மாவட்ட செயலர் பழ.ராஜேந்திரன் தலைமையில் பலர் அந்த பஸ்சை மறித்தனர்.

பஸ்ஸின் டயரில் இருந்து காற்றை இறக்கி விட்டனர். கர்நாடகாவுக்கு எதிராகவும், அங்குள்ள தமிழர்களை காக்க கோரியும் கோஷம் எழுப்பினர். பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

ரயிலை மறிக்க முயற்சி:

இதேபோல, இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக பெங்களூர் செல்லும் ரயிலை மறிக்க மதுரை ரயில் நிலையம் நோக்கி விரைந்தனர்.

மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் திரளாக ரயில் நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ரயில் நிலையத்திற்குள் அவர்களை நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பஸ்களில் கூட்டம் இல்லை: இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக அரசுப் பேருந்துகளிலும், தமிழக அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

சென்னையிலிருந்து நேற்று பெங்களூர் கிளம்பிய பல பேருந்துகளில் சொற்ப எண்ணிக்கையிலேயே பயணிகள் இருந்தனர்.

பஸ்களுக்குப் பதில், ரயில்களில் போவது பாதுகாப்பானது என்பதால் பயணிகள் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ரயில்கள் வழக்கம் போல கூட்டத்துடன் காணப்படுகிறது.

No comments: