குண்டுகளால் நாடே குலைநடுங்கிப்போய் கிடக்கும் நிலையில், நெல்லையில் ஒரு முஸ்லிம் தீவிரவாதியை குண்டுக்கட்டாக வளைத்து விட்டது போலீஸ். அவனிடம் இருந்து, குண்டுகளுக்குப் பயன்படும் டைமர் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் குண்டுகள் வைத்து ரத்தத்தில் தோய்த்தெடுக்க' தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த தகவல் அவன் மூலம் தெரிய வந்து திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தம் போட்டது பிடிக்கவில்லையா? அல்லது பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களை பின்னியெடுக்கத் தீர்மானித்தார்களா? தீவிரவாதிகள் பெங்களூருவிலும், அகமதாபாத்திலும் ஏன் குண்டுவெடிப்பு நடத்தினார்கள் என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை. இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குண்டுவெடித்த இடங்களை வெடிகுண்டு நிபுணர்கள் கிண்டிக் கிளறியபோது, அங்கே பழைய தமிழ் நாளிதழ்களின் எச்சங்கள் கிடைக்கவே, ஆச்சரியத்தால் புருவம் உயர்த்தினார்கள். `ஒருவேளை இந்த குண்டுகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்குமோ?' என்ற சந்தேகம் தலையை நீட்ட, அடுத்த கணமே தமிழக காவல்துறைக்கு பந்து பரிமாறப்பட்டது. இதனால் அலர்ட்டான தமிழக டி.ஜி.பி. ஜெயின், அதிரடி நடவடிக்கைகளில் இறங்க, அதன் எதிரொலியாகத்தான் நெல்லையில் சிக்கி இருக்கிறான். அந்தத் தீவிரவாதி.
இதுபற்றி உளவுத்துறை அதிகாரி ஒருவர் சில திகில் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
``தமிழ்நாட்டை குண்டு வைத்துத் தகர்க்க சதித்திட்டம் உருவான இடம் சென்னை புழல் ஜெயில். அங்கு அடைபட்டிருக்கும் அலி அப்துல்லா என்கிற தீவிரவாதிதான் அதன் மூளை. அவனுடன் சென்னை மண்ணடி குண்டு வெடிப்பில் கைதாகி, அதே சிறையிலிருந்த நெல்லையைச் சேர்ந்த இன்னொரு தீவிரவாதி ஹீராவும் சேர்ந்து இந்த சதித்திட்டத்தைத் தீட்டியிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அலி அப்துல்லாவுக்கு போலீஸார் உடனே `ஷேடோ' போட்டார்கள். ஆனால் ஹீரா அண்மையில் ரிலீசாகி விட்டதால், அவனைக் கழுகு போல கொத்திக் கொண்டு போய் விசாரித்ததில் அவன்தான், நெல்லையில் வெடிகுண்டுக்கான டைமர் கருவிகள் உருவாவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறான்.
அவன் தந்த தகவலின் பேரில், `நெல்லை பேட்டை ரொட்டிக்கடை பஸ்நிறுத்தம் அருகே பழைய பேப்பர் வியாபாரிகள் போல போலீஸார் சுற்றிச் சுழன்று, ஒரு வீட்டை நோட்டமிட்டபோது, அகப்பட்டவன்தான் தீவிரவாதி சேக் அப்துல் கபூர் (39). அவனது வீட்டில் வெடிகுண்டுக்கான டைமர்கள் தயாராவதை உறுதி செய்த போலீஸார், உயரதிகாரிகளிடம் தகவலை ஊத, அவர்கள் கோட்டைக்குப் பேச `அவனை உடனே அமுக்குங்கள்' என கோட்டையில் இருந்து உத்தரவு பாய்ந்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து நெல்லை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. கண்ணப்பன் ஆகியோர் நீண்டநேரம் மந்திராலோசனை நடத்தியிருக்கிறார்கள். `பேட்டை பகுதிக்கு பெரும் போலீஸ் படையோடு போனால் களேபரமாகி விடும்' என்பதால், சிம்பிளான ஒரு வழியை அவர்கள்தேர்ந்தெடுத்தார்கள். அதன்படி இரண்டே இரண்டு போலீஸார் மட்டும் 27-ம்தேதி பகல் 1.30 மணிக்கு ஒரு ஆட்டோவில் சேக் அப்துல் கபூரின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ``பாஸ்போர்ட் விசாரணை இருக்கு. வா'' என்றதும், பாவம், கபூர் வந்து விட்டான். அவனை அப்படியே அள்ளிக்கொண்டு நெல்லை கமிஷனர் அலுவலகத்துக்குப் போன போலீஸார் அங்கே, உரிய முறையில் விசாரித்தபோதுதான் உண்மையைக்கக்கியிருக்கிறான் அவன்.
அதன்பிறகு போலீஸார் அவனை ஒரு டாக்ஸியில் ஏற்றி, அவனது வீட்டிற்குப் போய் சத்தமில்லாமல் சோதனை போட்டபோது, அங்கே அணிவகுத்துக் கிடந்த பொருட்களைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். வெடிகுண்டில் வெடிமருந்து வைக்கும் சின்னச்சின்ன கலன்கள், பேட்டரிகள், எலக்ட்ரிக் சர்க்கியூட்டுகள், ஃபெவிக்கால், பேட்டரியால் இயங்கும் டைமர்கள் உள்பட வெடிகுண்டு தயாரிப்பதற்கான 21 அயிட்டங்கள் அங்கே பிடிபட்டன'' என்ற அந்த அதிகாரி, அதன்பிறகு சொன்னவை அதிர்ச்சி ரகம்.
``சேக் அப்துல் கபூரை மேல் விசாரணைக்காக களக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் அங்கு சுமார் பத்து மணி நேரம் விசாரணை நடந்தது. அதில் அவன் சொன்ன விஷயங்களை அப்படியே வெளியிட்டால் இந்தியாவே அலறிவிடும். சாம்பிளுக்கு ஒன்று சொல்கிறேன். வரும் ஆகஸ்ட் 15-ம்தேதி சுதந்திர தினத்தன்று தமிழ்நாட்டில் பத்து இடங்களில் தொடர் வெடிகுண்டுகளை வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
நெல்லையில் காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், சுதந்திர தின அணிவகுப்பில் முதல் குண்டை வெடிக்கச் செய்து விட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகம், அதன்பின் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி பெல் வளாகம், சென்னை கலெக்டர் அலுவலகம், மேம்பாலம், இவை தவிர நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் குண்டுகளை வெடிக்க வைத்து தமிழகத்தையும் ரத்தக்களறியாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். இவை தவிர நெல்லையில் இரண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளைத் தகர்க்கவும் இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். நல்லவேளை! ஆண்டவன் புண்ணியத்தில் அதெல்லாம் நடக்கவில்லை'' என்றவர், சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.
``பெங்களூரூ மற்றும் அகமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தீவிரவாதிகள் நான்கு டீம்களாய் பிரிந்து செயல்பட்டிருக்கிறார்கள். டைமர்செட் செய்வது மட்டும் ஒரு டீமின் வேலை. (அதுதான் நெல்லையிலா என்கிற விசாரணை நடக்கிறது). மற்றபடி வெடிகுண்டுகளைத் தயாரிக்க, குண்டுகளைக் கொண்டு போக தனித்தனி டீம்கள், அதை வைப்பதற்கு ஒரு டீம், ஆக நான்கு டீம்கள். நெல்லையில் தயாரிக்கப்பட்ட டைமர்கள்தான் பெங்களூரு மற்றும் குஜராத்தில் வெடித்த குண்டுகளிலும் இருந்ததா என்று விசாரணை செய்து வருகிறோம்'' என்றார் அவர்.
நெல்லையில் பிடிபட்ட தீவிரவாதி சேக் அப்துல் கபூரிடம் விசாரணை செய்த இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் பேசினோம்.
``சேக் அப்துல் கபூர் சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்திருக்கிறான். தவ்ஹீத் ஜமாத்தின் ஆலந்தூர் ஏரியா பொருளாளராகவும் இருந்திருக்கிறான். அங்குள்ள மசூதிக்குத் தினமும் தொழுகைக்குப் போன இடத்தில் அதே மசூதிக்கு வந்த ஹீராவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நெல்லைக்காரர்கள் என்பதால் இருவரும் நெருக்கமாகி இருக்கிறார்கள்.
அண்மையில் சிறையிலிருந்து ரிலீஸான ஹீரா, இந்தியாவில் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக சேக் அப்துல் கபூருக்கு ஏற்றி விட்டு, ஒருநாள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அலி அப்துல்லாவிடம் செல்போனில் பேசச் சொல்லியிருக்கிறான். அதன்பிறகு அலி அப்துல்லா தினமும் சேக் அப்துல் கபூருடன் பேசியிருக்கிறார். அப்போதுதான் தமிழகம் முழுவதும் குண்டு வைக்கும் திட்டம் உருவாகியிருக்கிறது.
`நெல்லை கலெக்டர் அலுவலகம், சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலம் ஆகியவற்றில் குண்டு வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முக்கிய இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தோம். கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரம் பேர் தமிழக சிறைகளில் வாடுகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கையை அரசுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே குண்டு வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது' என்றான்'' என்றார் அந்த விசாரணை அதிகாரி.
கடந்த 20-ம்தேதி நெல்லை வந்த சேக் அப்துல் கபூர், குண்டுகளைத் தயாரித்து விட்டு 29-ம்தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்கு டிக்கெட் எடுத்திருக்கிறான். 30-ம்தேதி சென்னையில் ரகசிய மீட்டிங் நடத்தவும் முடிவு செய்யப்பட்ட நிலையில், போலீஸில் சிக்கியிருக்கிறான் அவன்.
இதுபற்றி டி.ஐ.ஜி. கண்ணப்பனிடம் பேசினோம். ``மூன்று வெடிகுண்டுகள் தயாரிக்கப் போதுமான பொருட்களை அவனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறோம். தீவிரவாதி ஹீராவை நெல்லைக்குக் கொண்டு வந்து விசாரிக்கப் போறோம். அதன்பின்னரே அவர்களது தொடர்புகள் தெரிய வரும்'' என்றார் சுருக்கமாக.
போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் சேக் அப்துல் கபூருக்குச் சொந்த ஊர் பேட்டைதான். தற்போது தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியில் அவன் உயர் பொறுப்பிலிருப்பதாய்ச் சொல்கிறார்கள். தவிர, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராதிகா செல்வியைத் தோற்கடிப்பதற்காகஅ.தி.மு.க.வினர் இவனை சுயேச்சையாய் களமிறக்கியிருக்கிறார்கள். ஆனால் முன்மொழிந்தவரிடம் சரியான ஆவணம் இல்லாததால்,அவனது வேட்பு மனுவே தள்ளுபடி ஆகியிருக்கிறது.
சேக் அப்துல் கபூருக்கு உதவியதாய் அவனது வீட்டுப் பக்கம் டி.வி. மெக்கானிக் கடை நடத்தி வரும் அன்வர் முகம்மது பாட்சா என்பவரையும் போலீஸ் அமுக்கியிருக்கிறது. வெடிகுண்டு டைமரில் வயர்களைப் பொறுத்துவதில் இந்த டி.வி. மெக்கானிக் உதவி செய்திருப்பதாய்ச் சொல்கிறது போலீஸ். இது பற்றி கமிஷனர் மஞ்சுநாதாவிடம் பேசினோம். ``டைம்பாமில் பொருத்தப்படும் டைமர் டிவைஸுடன் நெல்லை இைளஞர் சென்னைக்குச் செல்வதாகக் கிடைத்த முக்கியத் தகவல்களையடுத்து சேக் அப்துல் கபூரைக் கைது செய்திருக்கிறோம். அவனுக்கும் வடமாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும் தொடர்புகள் உண்டா? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்'' என்று மட்டும் சொன்னார்.
ஆனால், ``சுதந்திர தினத்தன்று மதுரையில் `பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' என்கிற அமைப்பினர் நடத்த இருக்கும் சுதந்திர தினப் பேரணியைத் தடுக்க உளவுத்துறை போடும் நாடகம்தான் இது'' என்றே முஸ்லிம் அமைப்பினர் கருதுகிறார்கள். எது எப்படியோ? மிகப்பெரிய ஆபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது என்றே சொல்கிறது போலீஸ்
2 comments:
"உண்மையான குற்றவாளிகளை" கண்டுபிடித்து தண்டியுங்கள் என்று முஸ்லீம்களை கைது செய்யும்போதெல்லாம் அறிவுஜீவிகள் கூறுவதன் மர்மம் என்ன?
கையூட்டா?
கருத்துக்கு நன்றி
Post a Comment