Tuesday, July 29, 2008

தமிழகம்: போலீஸ் சோதனை: 'சிம்'மை கடித்து துப்பினார் அப்துல்லா

போலீஸ் சோதனை: 'சிம்'மை கடித்து துப்பினார் அப்துல்லா
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஜூலை 2008 ( 14:07 IST )


போலீசார் நடத்திய சோதனையின் போது, தீவிரவாதி அலி அப்துல்லா தன்னிடம் இருந்த 'சிம்' கார்டுகளை கடித்து துப்பி விட்டதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் போலீசார் தீவிரவாதிகளை வேட்டையாட ஆரம்பித்தனர்.

இதில் நெல்லையில் அப்துல் கபூர், முகமது அன்வர் பாதுஷா, சென்னையில், ஹீரா மற்றும் அபுதாஹிர் ஆகிய 4 பேர் சிக்கினர்.

சென்னை, புழல் சிறையில் இருக்கும் தீவிரவாதி அலி அப்துல்லா இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

கொறச்சேரியை சேர்ந்த அலி அப்துல்லா, ஆரம்பத்தில் சென்னை பல்லாவரத்தில் துணிக்கடை நடத்தி வந்தார். தீவிரவாத நட்பு காரணமாக தொழிலை விட்டு விட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

ஜிஹாத் கமிட்டி என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவராக இருக்கும் இவருக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் முக்கிய இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை கே.கே.நகர் பகுதி இமாமைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றார், பின்னர் அதிலிருந்து விடுதலை ஆனார்.

பாகிஸ்தான் சென்று தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளதாக கூறப்படும் இவர் மீது கொலை, வெடிகுண்டு வைத்தது உள்பட 8 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில்தான் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்தான், சிறையில் இருந்தபடியே ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலைகளில் ஈடுபட திட்டப்பட்டிருந்தார்.

இதன் பேரிலேயே, நெல்லையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நெல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகள் மூலம் போலீசாருக்கு இந்த தகவல்கள் தெரியவந்தன.

இதையடுத்து, புழல் சிறையில் அப்துல்லா அடைக்கப்பட்டுள்ள அறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த 2 செல்போன்களின் 'சிம்' கார்டுகளையும் அப்துல்லா கடித்து துப்பி விட்டார்.

இதனால் 'சிம்' கார்டுகளில் இடம் பெற்றிருந்த தொலைபேசி எண்கள் மற்றும் விபரங்களை போலீசாரால் மீட்க முடியாமல் போய் விட்டது.

இதைதொடர்ந்து, அப்துல்லாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

Anonymous said...

இந்த சொறியன்களுக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்நாட்டு அறிவுஜீவிகளையும் கடித்து துப்பினால் நல்லது