கும்பகோணம் தீ: 4ம் ஆண்டு-பெண் தீக்குளிக்க முயற்சி!
வியாழக்கிழமை, ஜூலை 17, 2008
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்தில் 94 இளம் பிஞ்சுகள் உயிரோடு எரிந்த பரிதாப சம்பவத்தின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கண்ணீர் மல்க அனுசரிக்கப்பட்டது. அப்போது, அரசு தங்களைப் புறக்கணிப்பதாக கூறி குழந்தையைப் பறி கொடுத்த ஜெயலட்சுமி என்ற பெண் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி கிருஷ்ணாபள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியாவையே உறைய வைத்த இந்த கோர விபத்தின் 4-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சம்பவம் நடந்த பள்ளி முன்பு நடைபெற்றது.
இதற்காக தீ விபத்து நடைபெற்ற பள்ளியின் முன்பு மறைந்த குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளை இழந்த பெற்றோரும், உறவினர்களும் அந்த படங்களின் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் மலர்கள் தூவியும், மெழுகுவர்த்திகள் ஏந்தியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். சின்னஞ்சிறு குழந்தைகளும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அரசு சார்பில் அஞ்சலி செலுத்த வந்த கோட்டாட்சியர் செல்வமணியிடம் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், குழந்தைகளின் உயிரை பலி கொண்ட ஜூலை 16-ந் தேதியை அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தினமாக அரசு அறிவித்து அந்நாளில் உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
தீ விபத்து தொடர்பாக தஞ்சையில் நடைபெற்று வரும் வழக்கில் 350 பேர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தஞ்சை சென்று வருவது கடினமாக உள்ளது. எனவே இவ்வழக்கை கும்பகோணத்தில் தனி நீதிமன்றம் அமைத்து மாற்றம் செய்து வழக்கை விரைவு படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தீ விபத்தில் குழந்தையை பறிகொடுத்த ஜெயலட்சுமி என்ற பெண்ணும் அஞ்சலி செலுத்த வந்து இருந்தார். அவர் திடீரென்று ஆவேசம் அடைந்து, மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்கப்போவதாக கூறினார். சொன்னது போலவே மண்எண்ணை கேனையும் எடுத்து வந்தார்.
உடனே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். எனினும், அவர் ஆவேசம் அடங்காமல் போலீசாருடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்குள், கும்பகோணம் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) செல்வமணி அங்கு வந்தார். அவரும், போலீசாரும் பேசி, ஜெயலட்சுமியை சமாதானம் செய்தனர்.
கும்பகோணம் தீவிபத்துக்கு காரணமானவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சோகத்தில் குமைய வைத்துக் கொண்டுள்ளது. தவறு செய்த பலர் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் வாங்கிக் கொண்டு போய் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். பலருக்கு பதவி உயர்வும் கிடைத்துள்ளது.
ஆனால் நாங்கள் குழந்தைகளையும், நிம்மதியையும் தொலைத்து விட்டு இன்னும் துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் புலம்புகின்றனர்.
1 comment:
தமிழக அரசு குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.
Post a Comment