நெல்லை: மேலும் ஒரு தீவிரவாதி கைது!
திங்கள்கிழமை, ஜூலை 28, 2008
-நமது நிருபர் இசக்கிராஜன்
நெல்லை: தமிழகத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு பயங்கரங்களை நடத்தத் திட்டமிட்டிருந்த லஷ்கர் இ தொய்பா இயக்க ஆதரவாளரான முகமது அன்வர் பாதுஷா (35) இன்று காலை கைது செய்யப்பட்டார்.
டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா தலைமையிலான போலீசார் இன்று காலை அன்வரின் வீட்டைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்து தீவிரவாத இயக்கங்கள் தமிழகத்தில் நடத்தவிருந்த பயங்கர சதி வேலைக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட அப்துல் கபூர் கொடுத்திருந்த தகவல்களின் அடிப்படையில் அன்வர் பாதுஷாவை சுற்றி வளைத்தனர். கபூரிடம் இருந்த வரைபடங்கள், சதி வேலைத் திட்டங்களின் நகல்கள் அன்வர் பாதுஷாவிடமும் இருந்துள்ளது. இவர்களின் கூட்டாளிகள் மேலும் 16 பேர் தப்பிவிட்டனர். அவர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர் போலீசார்.
அன்வரை விசாரிக்க சென்னையிலிருந்து கூடுதல் டிஜிபி நடராஜன் நெல்லைக்கு விரைந்துள்ளார். இன்று பகல் 1 மணி வாக்கில் செய்தியாளர்களைச் சந்திக்கும் கூடுதல் டிஜிபி மற்றும் டிஐஜி ஆகியோர் நிலைமையை விளக்குகின்றனர்.
மத்திய உளவுப் பிரிவுப் போலீசாரின் எச்சரிக்கை கிடைத்த 12 மணி நேரத்துக்குள் இரு தீவிரவாதிகளையும் அவர்களது பயங்கர திட்டங்களையும் கண்டுபிடித்து தமிழக போலீஸ் சாதனைப் படைத்திருக்கிறது.
தட்ஸ்டமில்.காம்
No comments:
Post a Comment