Monday, July 28, 2008

சென்னை, நெல்லையில் குண்டு வைக்கும் சதி முறியடிப்பு

சென்னை, நெல்லையில் குண்டு வைக்கும் சதி முறியடிப்பு
நெல்லையில் தீவிரவாதி கைது
குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு பொருட்கள் பறிமுதல்


சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதி சென்னை, நெல்லையை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய தீவிரவாதி நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, ஜுலை.28-

பெங்களூர், ஆமதாபாத் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

தீவிரவாதி கைது

தமிழ்நாட்டில் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

நெல்லையை அடுத்த பேட்டையில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில் பயங்கர தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர், அப்துல் கபூர்.

சுதந்திர தினத்தன்று குண்டு வைக்க

39 வயதான இவர், வருகிற சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதி அன்று சென்னை மற்றும் நெல்லையில் வெடிகுண்டுகளை வைக்க சதித்திட்டம் தீட்டிய கும்பலில் முக்கியமானவர் என்பது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக்கூடிய வெடிகுண்டு உதிரி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவரை கைது செய்ததன் மூலம் தீவிரவாதிகளின் மிகப்பெரிய நாச வேலையை போலீசார் முறியடித்தனர்.

டி.ஜி.பி. அலுவலக அறிக்கை

அப்துல் கபூர் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

டைமர் கருவிகள்

பெங்களூர் மற்றும் ஆமதாபாத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி முதல்-அமைச்சர் ஆணையிட்டதன்பேரில், தமிழக காவல் துறை முடுக்கிவிடப்பட்டது.

திருநெல்வேலி, பேட்டையை சேர்ந்த அப்துல் கபூர், வயது 39, (சேவுகானின் மகன்) என்பவர், வெடிகுண்டுகளை இயக்கும் டைமர் கருவிகளை திருநெல்வேலியில் தயாரித்து, சென்னைக்கு கொண்டு வர இருக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் நெல்லை காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.



வெடிகுண்டு பொருட்கள்

காவல் துறையினர் நெல்லை பேட்டையில் மக்தூம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அப்துல் கபூர் தங்கி இருக்கும் வீட்டை 27-ந்தேதி (நேற்று) சோதனையிட்டபோது வெடிகுண்டுக்கான `கிளாக் மெக்கானிசம்', மின்சுற்றுக்கான மாதிரி வரைபடம், பேட்டரி செல்கள், இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்பட 21 உபகரணங்களை கைப்பற்றி, அப்துல்கபூரை கைது செய்தனர். அவருடன் இதில் சம்பந்தப்பட்ட கூட்டாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னையில் வேலை செய்தவர்

போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள ஒரு கடையில் அப்துல்கபூர் வேலை செய்ததாகவும் சமீபத்தில்தான் நெல்லைக்கு திரும்பியதாகவும் தெரிய வந்தது. இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் பொறுப்பு வகித்து வந்த அப்துல் கபூர் சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து விலகிய தகவலும் தெரிய வந்துள்ளது.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: