ராஜஸ்தான்-2 நகர்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
செவ்வாய்க்கிழமை, ஜூலை 29, 2008
நன்றி தட்ஸ்டமில்.காம்
ஜெய்ப்பூர்: பெங்களூர், அகமதாபாத்தைத் தொடர்ந்து பாஜக ஆட்சி புரியும் ராஜஸ்தானிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் இரு நகரங்களில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில்அடுத்தடுத்து வெடிக்காத வெடிகுண்டுகளை போலீஸார் கண்டுபிடித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பீதியும், பதட்டமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் மார்வார் நகரில் 3 வெடிக்காத குண்டுகளையும், பரத்பூர் நகரில் ஒரு வெடிபொருளையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பாலி மாவட்டம் மார்வார் நகரில் உள்ள ஒரு சாலையில், 3 பிளாஸ்டிக் பெட்டிகளில் இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
மார்வார் - ரனவாஸ் சாலையில், ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் இந்த வெடிகுண்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் அதைப் பார்த்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்து அதை மீட்டனர்.
குண்டுகள் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பெட்டி, மேல் புறம் சிமென்ட் வைத்து மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து மார்வார் மற்றும் ஜோத்பூரிலிருந்து வெடிகுண்டுகளை செயலிழக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் முயற்சிகள் தொடங்கின.
இதேபேல பரத்பூர் மாவட்டம், பஹடி என்ற இத்தில் வெடிபொருள் ஒன்றை போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர். அது என்ன வகையான வெடிபொருள் என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
பாஜக ஆளும் கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment