ஜார்கண்டில் கடும் மோதல்: 3 மாவோயிஸ்டுகள் பலி!
செவ்வாய், 29 ஜூலை 2008( 12:46 IST )
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் மோதலில் மாவோயிஸ்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகார்க் வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்து பயிற்சி பெற்று வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மத்திய ரிசர்வ் காவல்படை கூடுதல் கமாண்டர் ஆர்.கே.மிஸ்ரா தலைமையிலான காவலர்கள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனையின்போது ஹசாரிபாக்- பொக்காரோ எல்லையில் மாவோயிஸ்டுகளுக்கும் காவலர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் வெடித்தது. இருதரப்பிற்கும் இடையில் இன்று காலை வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே.சிங் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள் நேற்று தியாகிகள் தினத்தைக் கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோதலில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் 350 சுற்றுத் தோட்டாக்கள் சுடப்பட்டதாகவும், கொல்லப்பட்டுள்ள மாவோயிஸ்டுகளின் உடல்கள் மூன்றும் மீட்கப்பட்டு விட்டதாகவும் பி.கே.சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment