Wednesday, July 30, 2008

இந்தியாவின் சொந்த இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சிமி (இஸ்லாமிய மாணவர் அமைப்பு) பற்றிய ஆய்வு கட்டுரை தமிழில்

நன்றி தினமலர்

பெங்களூரு மற்றும் ஆமதாபாத் தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான "இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்' என்ற "சிமி' அமைப்பே காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு, தீவிரமாக செயல்படவில்லை என, போலீசார் கூறி வந்தாலும், அது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நன்றாக வேரூன்றி இருப்பதும், பல கிளைகளைக் கொண்டிருப்பதும் சமீபத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அல்-குவைதா, லஷ்கர்-இ-தொய்பா உட்பட பல சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தூண்டுதலின் பேரிலேயே, இந்த அமைப்பினர் சதி வேலைகளை அரங் கேற்றி வருகின்றனர்.




கடந்த 1977ம் ஆண் டில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் துவக்கப் பட்ட அமைப்பு, "இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்' என்ற "சிமி' அமைப்பு. மேலை நாட்டு கலாசாரத்தில் இருந்து, இந்தியாவை விடுவிப்பது மற்றும் ஒரு இஸ்லாமிய சமுதாயமாக இந்தியாவை மாற்றுவது என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவன தலைவர் முகமது அகமதுல்லா சித்திக். இவர் தற்போது, அமெரிக்காவின் வெஸ்டர்ன் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார்.




"ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பின் மாணவர் அமைப்பாகவே, "சிமி' முதலில் உருவானது. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் கவரப்பட்ட இந்த அமைப்பினர், இந்தியாவிலும், அதேபோன்ற மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், வன்முறைகளில் ஈடுபடத் துவங்கினர். புனிதப் போர் என அழைக்கப் படும், பயங்கரவாத செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டினார். இதனால், "சிமி' அமைப்பினர் அணுகுமுறை, "ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்'திற்கு பிடிக்கவில்லை. முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்ததால், அந்த அமைப்புடனான கூட்டணியை "சிமி' முறித்துக் கொண்டது.




பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், இந்தியா வந்த போது, இந்த அமைப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். டில்லியில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டமும் நடத்தினர். யாசர் அராபத்தை மேற்கத்திய நாட் டினரின் ஊது குழல் எனவும் வர்ணித்தனர். 1981ம் ஆண்டு முதல், இந்த அமைப்பு பயங்கரவாத பாதையை பின்பற்றும் ஒரு அமைப்பாகவே செயல்படத் துவங்கியது. உண்மையான முஜாகிதீன், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனே எனவும் கூறி வருகிறது.




கடந்த 1980ம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு மும்பையில் நடந்த வன்முறையின் போதும், அதன்பின் மாலேகானில் நடந்த வன்முறையின் போதும், "சிமி' அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தினர் மற்றும் போலீசாருடன் மோதினர். இந்து மக்களையும், ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்து அமைப்புகளையும், தங்களின் எதிரிகளாகக் கருதி, இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர், பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. நாடு முழுவதும் வன்முறைகள் நடப்பதற்கும் காரணமாக அமைந்தது.




அதன்பின், நாட்டில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணம் என, போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டினர். 2001ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டடங்கள் தகர்க்கப் பட்ட பின்னர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் "சிமி' அமைப்புக்கு இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டதால். அந்த ஆண்டு, இந்த அமைப் புக்கு தடை விதிக்கப்பட்டது. நகோரி என்பவரின் தலைமையில் தற்போது திரைமறைவில் இந்த இயக்கம் செயல்பட்டுவருகிறது. வகாபிகளுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உண்டு.




வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் தான் இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக செயல் படும் மற்ற பயங்கரவாத இயக்கங்களுடன் கை கோர்த்து செயல்படத் துவங்கியது. குறிப்பாக, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யின் தொடர்பும் அதற்கு ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் மும்பையில் புறநகர் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பின் போது, 300க்கும் மேற்பட்டவர்களை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களில் பலர் "சிமி' அமைப்பினர் என்பதும், அந்த அமைப்பினருக்கும் குண்டு வெடிப் புக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.




மேலும், 2003ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப் பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும், முலாயம் சிங், மாயாவதி போன்ற அரசியல்வாதிகள், ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு விஷயத்தில் கருணை காட் டினர். அதை, பயங்கரவாத அமைப்பு இல்லை என வர்ணித்தனர். இருந்தாலும், தடை செய்யப்பட்ட, "சிமி' அமைப்பினர், "இந்தியன் முஜாகிதீன்,' "டெக்பாஸ்-இ-பாஸ்சி' அல் லது "டெபி' என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.




மத்திய அரசு தடை விதித்தாலும், மாற்றுப் பெயரில் செயல்படும் இந்த அமைப்பினர், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினருடன் நெருங்கிய கூட்டு வைத்துள்ளனர். மேலும், தடைக்குப் பின், இந்த அமைப்பு சிறிதளவும் நசுங்கவில்லை. அதற்கு மாறாக பெருமளவு வளர்ந்து, பல கிளைகளைக் கொண்டுள்ளது. பெயர் தெரியாத பல சிறிய மத அமைப்புகளுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, தங்களின் சதி வேலைகளை அரங்கேற்றி வருகிறது. ஏதோ ஒரு வழியில் அவர்களால் புனிதப் போர் என அழைக்கப்படும், பயங்கரவாத செயல்களை நாட்டிற்கு எதிராக நடத்தி வருகின்றனர்.




இரண்டு ஆண்டுகளுக்கு முன், "சிமி' அமைப்பில் 600க்கும் மேற்பட்ட வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும். மேலும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த அமைப்புக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றனர். நிதி உதவி தருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வந்தாலும், எந்த பலனும் இல்லை. இந்த ஆண்டின் முற்பகுதியில் ஜெய்ப்பூரிலும், சமீபத்தில் ஆமதாபாத் மற்றும் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் "சிமி' அமைப்பே காரணம் என, போலீசாரும் உளவுத்துறையினரும் நம்புகின்றனர். "சிமி' அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், பெங்களூரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த அமைப்பின் செயல்பாடுகள் நாட்டின் பல நகரங்களுக்கு விரிவடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.




புதுப்பிக்க காரணம் யார்: பெங்களூரில் சமீபத்தில் கைதான முகமது சுபாஷ் குரேசியே, தடை செய்யப் பட்ட இந்த அமைப்பை புதுப்பிக்க காரணமாக இருந்துள்ளான். இவன், 2006-07ம் ஆண்டில், தங்கள் அமைப் புக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக, தென்மாநிலங்களில் 12க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம் களை நடத்தியுள்ளான். ஒரு கால கட்டத்தில் மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்த இவன், அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிப்பதில் கைதேர்ந்தவன். 2003ம் ஆண்டு, கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவனும் காரணம்.




அதேபோல், இந்த அமைப்பை புதுப்பிக்க காரணமாக இருந்த மற்றொருவன் கேம் பஷீர். போலி பாஸ் போர்ட்டில் சவுதி அரேபியா சென்று, தற்போது அங்கு தங்கியுள்ள அவன், அங்கிருந்து இந்த அமைப்பிற்கு நிதி உதவி அளிப்பதாகவும், புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏர்-இந்தியா நிறுவனத்தில், இன்ஜினியராக இருந்த இவன், "சிமி' அமைப்பில் முழு நேர ஊழியராக பணியாற்றுவதற்காக, அந்த வேலையை கைவிட் டான். 2003ம் ஆண்டில், மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவன் நிதி உதவி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்; 150க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




கடந்த மார்ச் மாதம், "சிமி' அமைப் பைச் சேர்ந்த 13 பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். அவர் களில் சப்தர் நகோரி, அவரின் சகோதரர் கமருதீன் நகோரி, அப்துல் பெடிக் கல் ஷிப்லி மற்றும் ஹபீஸ் அட்னன் உசேன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் உஜ்ஜயினியில் இவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளனர். அந்தக் கூட்டத்தில், முகமது சுபாஷ் குரேசியும் பங்கேற்றுள்ளான்.




அப்போது, தலிபான்களிடம் இருந்து தங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், பாகிஸ்தான் மற் றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் உதவிகளைப் பெறவும், குரேசியே மத்தியஸ்தராக, மீடியேட்டராக செயல்பட வேண்டும் என்றும் கேட் டுக் கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சப்தர் நகோரியை அனைவரும் முன்மாதிரியான நபர் எனவும் வர்ணித்துள்ளனர்.




இக்கூட்டத்தில், முடிவுகள் எடுத்தபடி, தலிபான்கள் மற்றும் பாக்., கில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவை அவர்கள் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், 2002ம் ஆண்டில், குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்குப் பின், அந்த மாநிலத்தின் மீது, "சிமி' மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கவனம் திரும்பியுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் குஜராத் போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் பலருக்கு பயிற்சியும் தரப்பட்டுள்ளது. இருந்தாலும், முதல்வர் மோடி மேற் கொண்ட உஷாரான நடவடிக்கை, பயங்கரவாதத்தை கையாள் வதில் காட்டும் கடுமை போன்றவற்றால், அங்கு பெரிய அளவில் இதுவரை சதித் திட்டத்தை அரங்கேற்ற முடியவில் லை. தற்போது அதைச் செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு பீதியை உண்டாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.




புதிய வடிவில் பழைய பயங்கரவாதம்! சமீபத்தில் இந்தியாவை உலுக்கி வரும் தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களின் விவரம்: இந்தியன் முஜாகிதீன்கள்: பயங்கரவாத இயக்கங்கள் தடைசெய்யப்படும் போதெல்லாம், அவை இன்னொரு பெயருடன் புதிய வடிவில் முளைப் பது வாடிக்கை. 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னரும், 2002 செப் டம்பரில் அக்ஷர்தாம் கோவில் தாக்குதலுக்குப் பின்னரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உத்தரவின் படி பயங்கரவாத இயக்கங்கள் பெரும்பாலானவை வேறு பெயர் களில் செயல்பட்டு வருகின்றன.




தடை செய்யப்பட்டுள்ள சிமி இயக் கத்தினரில் பெரும்பாலான இளைஞர்களைக் கொண்டு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. வங்கதேசத்தில் செயல்படும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான வங்கதேச ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹூஜி) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகளும் இந்திய முஜாகிதீன் அமைப்பு உருவாக உதவியிருக்கின்றன. இந்த அமைப்பு கடந்த ஆண்டு உ.பி.,யில் தனது முதல் தாக்குதலை நடத்தியது.




கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த வன்முறையை அடுத்து, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அமைதியை சீர்குலைப் பதே இந்த அமைப்பின் தற்போதைய முக்கிய நோக்கம். இந்த அமைப் புக்கு நிதி உதவி மற்றும் பயங்கரவாதிகளை சேர்க் கும் முயற்சியில் இஸ்லாமிய வகாபி அடிப்படைவாதியினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சவுதி அரேபியாவில் இருந்து இவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. தங்கள் வழிக்கு பிற இஸ் லாமியர்களை இழுக்கும் விதமாக, புனித வழிக்கு திரும்புங்கள் என்று பிரசாரம் செய்கின்றனர். இஸ்லாமியருக்கு எதிராக நடக்கும் வன்செயல்களுக்கு தண்டனை அளிக்கும் பொறுப்பு, தங்களுக்கு உள்ளதாகக் கூறிக்கொள்ளும் வகாபி அமைப்பினர், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இதனால், இந்தியன் முஜாகிதீன்களுக்கு எளிதாக உதவி வருகின்றனர்.




ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹூஜி): வங்கதேசத்தில் கிளையை துவக்கி செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தான் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி(ஹூஜி) அமைப்பு. இஸ்லாமியர்களின் பாதுகாப்புக்கான இரண்டாம் வழி என்று தங்களை கூறிக் கொள்ளும் ஹூஜி அமைப்பினர், ஐதராபாத்தில் கடந்த ஆண்டு குண்டு வெடிப்பை நடத்தினர். ராஜஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை வெளியேற்றும் திட்டத்தை எதிர்த்து ஜெய்ப்பூரில் குண்டுவைக்க இந்தியன் முஜாகிதீன்களுக்கு உதவினர்.




கர்நாடகா மற்றும் குஜராத்தில் பா.ஜ., ஆட்சி நடைபெறுவதால், அங்கு அமைதியை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியன் முஜாகிதீன்களுக்கு உதவியாக பெங்களூரு மற்றும் ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்புக்கு உதவி செய்தனர். இந்த அமைப்புக்கு பஷீர் அகமது மிர் என்பவர் கமாண்டர் இன் சீப் ஆக உள்ளார். இளைஞர்களின் மனதை மாற்றி பயங்கரவாதத்தை கற்றுக் கொடுப்பதை விட, குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது சுலபம் என்று கருதி, மேற்கு வங்கத்தில், வங்கதேச எல்லைப்பகுதியில் குழந்தைகளை பயங்கரவாதத்துக்காக இந்த அமைப்பு கடத்தி வருகிறது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு பணத்தாசை காட்டி இந்த முயற்சிக்கு மாற்றி வருகின்றனர்.




ரஷ்ய- ஆப்கானிஸ்தான் போரின் போது, இந்த அமைப்பு துவக்கப் பட்டது. 2001க்குப் பின் அமெரிக்கா, ஆப்கனில் தாக்குதல் நடத்திவருவதால் இந்த அமைப்பினர் தற்போது இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். இன்றும் ஒசாமா பின்லாடனின் அல்-குவைதா அமைப்புடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உண்டு.




"சிமி'யின் மறுவடிவமான இந்தியன் முஜாகிதீன்: ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு தானே முன்வந்து பொறுப்பேற்ற அமைப்பு இது. இந்த பயங்கரவாத அமைப்பு உள்நாட்டில் உருவானது என்று கூறப்பட்டாலும், அப்படிப்பட்ட ஒரு அமைப்பே இல்லை என, உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹூஜி, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இந்த மூன்று அமைப்புகளில் ஒன்றே, இந்தப் போலி பெயரில் செயல்படலாம். குறிப்பாக தடை செய்யப்பட்ட "சிமி' அமைப்பு இந்தப் பெயரில் செயல்படலாம் என, உளவு நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.




லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசியில், 2007 நவம்பர் 23ம் தேதி குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், இந்த அமைப்பின் பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. ஜெய்ப்பூரில் கடந்த மே மாதம் நடந்த குண்டு வெடிப்பிற்குப் பின், இரண்டு நாட்கள் கழித்து இதே அமைப்பின் பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அப்போது தான், இந்த அமைப்பின் பெயர் வெளியே தெரிந்தது.




ஐதராபாத் மெக்கா மசூதி, மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புகளுக்கு, "சிமி' அல்லது "ஹூஜி' அமைப்பு காரணமாக இருக்கலாம் என உளவுத் துறையினர் கூறுகின்றனர். ஆனாலும், இந்த குண்டு வெடிப்புகளில் சில, மசூதிகள் மீது நடத்தப்பட்டுள்ளதால், இந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என, வேறு சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழகத்தில் காலூன்ற அரங்கேற்றப்பட்ட சதி வழக்குகளுக்காக லட்சக்கணக்கில் நிதி உதவி:




லக்னோ: தடை செய்யப்பட்ட "சிமி' அமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, தங்கள் மாநிலத்தில் தீவிரமாக செயல்படவில்லை என, உத்தர பிரதேச மாநில போலீசார் சமீபத்தில் அறிவித்திருந்தனர். அது தற்போது பொய்யாகியுள்ளது. அந்த மாநிலத்தில் மட்டுமின்றி, வேறு பல மாநிலங்களிலும், "சிமி' அமைப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.




"சிமி' அமைப்பின் உ.பி., மாநில முன்னாள் தலைவர் ஹுமாயூன் அகமது சமீபத்தில் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு: ஹுஊமாயூன் அகமது, "சிமி' அமைப்பின் நிதியை நிர்வகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததோடு, அதன் சட்ட ஆலோசகராகவும் செயல் பட்டு வந்துள்ளார். தமிழகம், கேரளா, அசாமில் அமைப்பின் செயல்பாடுகள் விரிவடைய காரணமாக இருந் துள்ளார். அதற்கான நிதி உதவிகள் மற்றும் ஆட்களை சேர்ப்பது போன்ற பணிகளையும் செய்துள்ளார்.




தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட "சிமி' அமைப்பினர் தொடர்பான வழக்குகளை கையாளவும் லட்சக் கணக்கில் நிதி கொடுத்துள்ளார். மேலும், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மதரசாக்கள் மற்றும் சில முன்னணி மத அமைப்புகள் மூலம், "சிமி' வளர்ச்சி அடைய தேவையான உதவிகளை செய்ததோடு, பலரிடம் நிதியும் திரட்டியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.




இதுபற்றிய எந்த விவரங்களையும் உ.பி., மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், விசாரணை மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை மத்திய, மாநில அரசுகளுக்கும், புலனாய்வு நிறுவனங்களுக்கும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.




குண்டு வெடிப்புகளை தடுக்க செய்ய வேண்டியது என்ன?: நடப்பு 2008ம் ஆண்டில், மூன்று பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந் துள்ளன. கடந்த ஆண்டில் ஐந்து சம்பவங்கள் நடந்துள்ளன. இவைகள் மட்டுமின்றி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் அனைத் தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்துள்ளது. அனைத்து சம்பவங்களிலும் சைக்கிள்கள், டிபன் பாக்ஸ்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பயங்கர சதி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் எல்லாம், அம்மோனியம் நைட்ரேட், டைமர், ஆணிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.




மேலும், குண்டு வெடிப்புகள் எல் லாம் பொது இடங்களில் தான் நடத்தப் பட்டுள்ளன. மசூதிகள், கோர்ட்டுகள், மருத்துவமனைகள் கூட விட்டு வைக் கப்படவில்லை. இவையெல்லாம், போலீசார் தங்களின் விசாரணைக்கு பயன்படுத்துவதற்கு தேவையான நல்ல தகவல்கள் என்றாலும், உளவுத் துறையினர் முழு அளவில் பயன் படுத்திக் கொள்ளவில்லை. சதி வேலைக்கு காரணமான அமைப்பை கண்டறியவில்லை.




அத்துடன், குண்டு வெடிப்புக்கு சில நாட்களுக்கு முன்னரே, மொபைல் போன்களை பயன்படுத்துவதையும் பயங்கரவாதிகள் தவிர்த்து விடுகின்றனர். அப்பாவி சிலரின் இ-மெயில் முகவரிகளை பயன்படுத்தி, குண்டு வெடிப்பு தொடர்பான இ-மெயில் களை, பத்திரிகை நிறுவனங்களுக்கும், அரசுக்கும் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் தங்களுக்குள் இ-மெயில் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் லை. அப்படி பரிமாறிக் கொண்டால், அதை மற்றவர்கள் படித்துப் பார்க்கலாம் என நினைத்து தந்திரமாக செயல் படுகின்றனர். அத்துடன், குண்டு வெடிப்புகளை பயங்கரவாத அமைப் பின் உறுப்பினர்களே நடத்துவதில்லை. அவற்றை வெளிப்படையாக தெரியாத சில அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.




அதுமட்டுமின்றி, குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பதை போலீசார் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக, வேறு ஏதோ ஒரு அமைப்பின் பெயரில், குண்டு வெடிப் புக்கு பொறுப்பேற்று தகவல்கள் அனுப்புவதும் தொடர்கிறது. ஆமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புகள், நமது மாநிலங்களில் பெரும்பாலானவை, பயங்கரவாதத்தை சுயமாகக் கையாள திறமையற்றதாக உள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டன. மாநிலங்கள் மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், இதுபோன்ற குண்டு வெடிப்புகளை தடுக்க வேண்டும் என்ற அக்கறை அரசியல்வாதிகளிடம் இல்லாததாலும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நகரங்கள் எளிதில் இலக்காகி விடுகின்றன. எனவே, இந்தக் குறைபாடுகளை எல்லாம் சீர்படுத்தி, குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நிகழாமல் தடுக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும். உளவுத் துறையினரும் பொறுப்போடு, மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.

No comments: