Monday, October 01, 2007

திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு முழு ஆதரவு- பாஜக அறிவிப்பு

திமுக அரசு, டி.ஆர்.பாலுவை டிஸ்மிஸ் செய்ய பாஜக கோரிக்கை
திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2007

டெல்லி:

தமிழகத்தில் அரசியல் சட்டம் முற்றிலும் சீர்குலைந்து போய் விட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சீரியஸாக எடுத்துக் கொண்டு, உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட திமுக அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். டி.ஆர்.பாலுவையும் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் பேசுகையில்,

உச்சநீதிமன்றம் கடுமையாக கருத்துக்களைத் தெரிவித்த பிறகும், ஆட்சியில் நீடிக்க திமுக அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. ஒரு நிமிடம் கூட அவர்கள் ஆட்சியில் இருக்கக் கூடாது. அதேபோல, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் டி.ஆர்.பாலு. எனவே அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

அவரை பிரதமர் மன்மோகன் சிங் நீக்காவிட்டால், நீதித்துறை மீதான அவமதிப்பு, திமுகவோடு நிற்காது, ஒட்டுமொத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் அந்த அவப் பெயர் வந்து சேரும். அதன் விளைவுகளை பிரதமர் சந்திக்க வேண்டியிருக்கும்.

ராமர் குறித்தும், அவரை வணங்குவோர் குறித்தும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியாவின் கலாச்சாரம் மீதான தாக்குதலாகும். அரசியல் சட்ட கட்டமைப்பின் மீதான தாக்குதலாகும்.

திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு முடிவு செய்தால் அதை பாஜக முழுமையாக ஆதரிக்கும் என்றார் ராஜ்நாத் சிங்.

No comments: