Monday, October 15, 2007

சென்னையில் ராமர்பாலத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுப்பு

துறவிகள் பாத யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

நன்றி தினமலர்


கோயம்பேடு : ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் துறவிகள் நடத்த இருந்த பாத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாத யாத்திரை : சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் இருந்து பாத யாத்திரையாக துவங்கி பிராட்வே காளிகாம்பாள் கோவில் வரை செல்ல துறவிகள் திட்டமிட்டு இருந்தனர். பாத யாத்திரை மேற்கொள்ள வந்த பார்த்தசாரதி சுவாமிகள் மற்றும் யத்திஸ்வரி குமார பிரியம்பா தலைமையிலான துறவிகள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் பாத யாத்திரை செல்வதற்காக கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுடன் ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கத்தினரும் வந்தனர்.

போலீசார் அனுமதி மறுப்பு : ஆனால், பாத யாத்திரையை மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்தனர். மீறி பாத யாத்திரை சென்றால் அவர்களை கைது செய்ய ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலின் முன்பு அமர்ந்து துறவிகள் மற்றும் ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கத்தினர் ராம பஜனை பாடல்களை பாடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சாலையின் முடிவு வரை 200 மீட்டர் துõரத்திற்கு நடந்து சென்று பாத யாத்திரையை நிறைவு செய்து கலைந்து சென்றனர்.

ராமகோபாலன்: மத்திய சென்னை மாவட்டம் சார்பில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் தலைமையில் போரூர் ஆர்.வி.நகரில் இருந்து வடபழனி வரை பாத யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை முதல் போரூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மதியம் ராமகோபாலன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் பாத யாத்திரையாக செல்ல துவங்கினர். போரூர் ரவுண்டானாவுக்கு சற்று முன் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அந்த இடத்திலேயே ராமர் படத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து, பாத யாத்திரையை முடித்து கொண்டு ராமகோபாலன் காரில் புறப்பட்டார். பக்தர்களும் கலைந்து சென்றனர்.

No comments: