Thursday, October 18, 2007

>"எங்களை படிக்க விடுங்கள்; பாழாக்காதீர்கள்!' : நக்சலுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போர்க்கொடி

"எங்களை படிக்க விடுங்கள்; பாழாக்காதீர்கள்!' : நக்சலுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போர்க்கொடி
நன்றி தினமலர்


பாட்னா : "எங்களை படிக்க விடுங்கள்; வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள்!' நக்சலைட்டுகளுக்கு எதிராக கிளம்பியுள்ள பள்ளி மாணவர்களின் ஆவேச கோஷம் இது!

பீகார் மாநிலத்தில், அவுரங்காபாத் உட்பட சில மாவட்டங்களில், நக்சலைட்டுகளின் அட்டகாசம் அதிகம்; பள்ளிகளை நடத்த விடாமல் மிரட்டி வருகின்றனர். அதிகாரிகள் வந்தால் பணம் பறிக்கின்றனர். பள்ளியை இடித்து தரை மட்டமாக்குகின்றனர். "நக்சல்கள் நல்லது தான் செய்கின்றனர். அரசுக்கு எதிராக அவர்களின் போராட்டத்துக்கு நாம் ஆதரவு தர வேண்டும். அப்போது தான் ரேஷன் பொருள் கிடைக்கும்; நாம் வாழ நக்சல்கள் பணம் கொடுப்பர்' என்றெல்லாம் தவறான கருத்தை கொண்டிருந்த கிராம மக்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வு வந்துள்ளது.

தங்கள் பிள்ளைகள் படிக்காததற்கு காரணம், கிராமத்தில் பள்ளி இல்லை என்பதை கிராமத்தினர் இப்போது உணரத் தொடங்கி விட்டனர். சமீபத்தில், நக்சலைட்டுகளுக்கு எதிராக, கிராம மக்கள் திரண்டு, சாலையில் மறியல் செய்தனர். "எங்கள் பிள்ளைகளை படிக்க விடுங்கள். அவர்கள் வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள்' என்று கோஷம் போட்டனர்.
மாணவர்கள் கூறுகையில், "நாங்கள் படிக்க பள்ளி இல்லை. அதை நக்சலைட்டுகள் அழித்துவிட்டனர். எங்களை படிக்க விடாமல் செய்வதற்காகவே இப்படி செய்துள்ளனர். இனியும் நாங்கள் மவுனம் காக்க முடியாது. அதனால், நக்சலைட்டுகளுக்கு எதிராக போராடத் துவங்கி விட்டோம்' என்று கூறினர். மாணவர்களின் போராட்டத்துக்கு பள்ளி ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். "பயங்கரவாத செயல்களால், தங்கள் படிப்பு கெடக்கூடாது என்று மாணவர்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். இது நல்ல அறிகுறி தான்' என்று, ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: