உண்ணாவிரதத்தை நிறுத்தினார் கருணாநிதி: சோனியா தலையீடு?-பஸ்கள் ஓட தொடங்கின
திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2007
சென்னை:
முதல்வர் கருணாநிதி இன்று திடீரென உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றார். அவருக்குப் பின்னால் டாக்டர் ராமதாஸும் கிளம்பிச் சென்றார். ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அங்கிருந்து நேராக தலைமை செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை துவங்கினார் கருணாநிதி.
உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இதில் தலையிட்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தமிழகத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்தகுள் நிறுத்தப்பட்டு பந்த் நடப்பது குறித்து இன்று அதிமுக தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
திமுக அரசை டிஸ்மிஸ் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அது அறிவுறுத்தியது. மேலும், கருணாநிதி மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் அழைத்து விசாரிக்க நேரிடும் எனவும் எச்சரித்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த முதல்வர் கருணாநிதி திடீரென அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதி கிளம்பிச் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பற்காக மத்திய அரசோ அல்லது சோனியா காந்தியோ தலையிட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கருணாநிதி, ராமதாஸ் சென்று விட்டாலும் கூட திமுக கூட்டணியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற தலைவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமைச் செயலகம் திரும்பினர்.
முன்னதாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டனர். அதற்குப் பதிலளிக்க மறுத்த கருணாநிதி, உச்சநீதிமன்றம், பந்த் நடத்த தடை விதித்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் பந்த் நடத்தவில்லை என்று பதிலளித்தார்.
தலைமைச் செயலாளர் பேட்டி:
அதே போல பஸ்கள் ஓடாததற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் பஸ்கைள உடனடியாக இயக்குமாறு தலைமை செயலாளர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடத் தொடங்கின. நிருபர்களிடம் திரிபாதி கூறுகையில்,
உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அவமதிக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் முழுமையாக கடைப்பிடிக்கிறோம்.
தமிழகத்தில் இன்று பேருந்துகள் ஓடத் தயாராகவே இருக்கின்றன. ஊழியர்கள் வராததால் பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் 51 பேருந்துகள் மட்டுமே ஓடியுள்ளன. நிலைமை இன்னும் சில மணி நேரங்களில் படிப்படியாக சீரடையும்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் 2 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. வன்முறை ஏதும் இல்லை.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்
கேள்வி: போக்குவரத்து ஊழியர்கள் ஏன் பணிக்கு வரவில்லை?
பதில்: ஏன் வரவில்லை என விசாாித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கே: தலைமை செயலகத்தில் ஊழியர்கள் பணிக்கு வந்தனரா?
ப: சில ஊழியர்கள் பணிக்கு வரவில்லையே தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வந்துள்ளனர். தலைமை செயலகம் வழக்கம் போல் செயல்படுகிறது என்றார்.
கே: பஸ்கள் ஓடாதது நீதிமன்ற அவமதிப்பாகாதா?
ப: பொது மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை. அப்படி இருக்கும்போது இது நீதிமன்ற அவமதிப்பாகாது என்றார்.
முன்னதாக, உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு அருகே இன்று காலை திறந்திருந்த ஒரு ஹோட்டல் மீது திடீரென சிலர் கல்வீச்சில் இறங்கினர். சரமாரியாக கற்களை வீசி அந்த ஹோட்டலை மூடுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து அந்த ஹோட்டல் மூடப்பட்டது.
No comments:
Post a Comment