பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் * சிவராஜ் பாட்டீல் அறிவிப்பு
புதுடில்லி : வழிபாட்டு இடங்கள், பொது மக்கள் கூடும் இடங்களை தேர்வு செய்து பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.
உளவு அமைப்பினரை முறையாக பயன்படுத்தி இவற்றை போலீஸ் துறை தடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
மாநில டி.ஜி.பிக்கள் மாநாடு : மாநில டி.ஜி.பி.,க்களின் மாநாடு டில்லியில் நேற்று நடந்தது.
இதை துவக்கி வைத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசியதாவது: பயங்கரவாத அமைப்புகளின் ரகசிய முகாம்கள் பெரிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. தேவைப்படும் போது விரைந்து செயல்படும் அளவுக்கு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். பயங்கரவாத செயல்களுக்கு அவர் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். நவீன தொழில்நுட்பங்கள், ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை சமாளிக்க போலீசாரும், புதிய திட்டங்கள், கருவிகள், தொழில்நுட்பம் அவற்றுக்கு தேவையான பயிற்சி ஆகியற்றை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சரியான, நம்பகதன்மைமிக்க உளவு தகவல்கள் கிடைக்கும் அளவுக்கு போலீஸ் துறையின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
மாநில உளவு துறைகள் வலிமையாக இல்லை. தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப அவை இல்லை. உளவு துறைகளை முறையாக நிர்வகித்து, நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை அளித்து உளவு துறைகளை மேம்படுத்த வேண்டும். கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். குற்றங்கள், வன்முறை செயல்கள், பயங்கரவாத செயல்களை தடுக்க உளவு தகவல்களை விட சிறந்த ஆயுதம் ஏதும் இல்லை. நக்சலைட்களின் பிரச்னையை சமாளிக்க சரியான நேரத்தில் தகவல்கள் கிடைக்க வேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சீரடைந்து வருகிறது. எல்லைப்பகுதிகளில் ஊடுருவலை தடுக்க உளவு அமைப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வர வேண்டும். அசாம் மற்றும் மணிப்பூரில் தொடரும் வன்முறைகள், நாகாலாந்தில் நடந்து வரும் மோதல் சம்பவங்கள் கவலை தருவதாக உள்ளன. அப்பகுதியில் இடம் பெற்றுள்ள மாநிலகளுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்.
புதிய சட்டம் : சோலி சொராப்ஜி கமிட்டி பரிந்துரைத்துள்ள மாதிரி போலீஸ் சட்டத்தை அடிப்படையாக கொண்டு, புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்க மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கை இல்லை. இதை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை நிரப்பியும், புதிய பணியிடங்களை உருவாக்கியும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். போலீஸ் துறையில் பெண்களின் பங்களிப்பு 2 சதவீதமாக உள்ளது. இது அதிகரிக்கப்பட வேணடும். போலீஸ் பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு சிவாராஜ் பாட்டீல் பேசினார்.
சிவராஜ் பாட்டீல் கருத்து: நிபுணர்கள் எதிர்ப்பு : டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாதுகாப்பு பணிகளுக்கு தனி நபர்கள் மற்றும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், உளவுப்பணியில் தனியார் துப்பறியும் நிறுவனங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இதற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,` தனி நபர்கள் மற்றும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு போதிய பயிற்சி அளிப்பது இல்லை. முறையான பயிற்சி இல்லாமலும், ஒரு மாத பயிற்சி மட்டும் அளித்தும் செக்யூரிட்டிகளை பாதுகாப்பு பணிகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபடுத்துகின்றன. இது ஆபத்தான செயல். உளவுப்பணியில் தனியார் துப்பறியும் நிறுவனங்களை ஈடுபடுத்துவதும் ஆபத்தான செயலே. இதனால் பிரச்னைகள் தான் ஏற்படும். தனியார் துப்பறியும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், யாருக்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவர்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை. தனி நபர் சுதந்திரத்தை மீறி, அவர்கள் புதிய பிரச்னைகளை ஏற்படுத்தி விடுவர்' என்று தெரிவித்தனர்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment