Saturday, June 09, 2007

" இளைஞர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தற்காலிக திருமணத்தை ஆதரிக்க வேண்டும்' என்று ஈரான் உள்துறை அமைச்சர் முஸ்தபா பவுர் முகமதி

06. இளைஞர்களின் ஆசைதீர "தற்காலிக திருமணம்' ஈரான் அமைச்சர் பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு டெகரான் : " இளைஞர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தற்காலிக திருமணத்தை ஆதரிக்க வேண்டும்' என்று ஈரான் உள்துறை அமைச்சர் முஸ்தபா பவுர் முகமதி பேசியதற்கு அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உலகளவில் மிகவும் பழமை வாய்ந்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. இங்கு ஷியா பிரிவு முஸ்லிம்களே பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடி. இதில் பாதி பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதால் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு வீடு வாங்குவது, திருமணம் செய்வது, குடும்பத்தை பராமரிப்பது என்பது ஒரு கனவாகவே உள்ளது. ஈரானில் 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பிறகு விபசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சில ஆண்டுகளாக சட்ட விரோதமாக விபசார தொழில் நடக்க தொடங்கியுள்ளது."ஷியா' பிரிவு முஸ்லிம்கள் நடைமுறைபடி "தற்காலிக திருமணம்' என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இதன்படி ஒரு ஆணும், பெண்ணும் "ஷிகக்' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கணவன், மனைவியாக வாழலாம். இருவரும் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் அல்லது 24 மணி நேரத்துக்குள்ளாகவே அந்த உறவை துண்டித்து கொள்ளலாம். இதையே "தற்காலிக திருமணம்' என்று அழைக்கின்றனர். ஈரான் நாட்டில் "ஷியா' பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், "தற்காலிக திருமண' நடைமுறை அனுமதிக்கப்பட்டதல்ல .

ஈரானில் 1990ம் ஆண்டுகளில் அதிபராக இருந்த ரப்சஞ்சானி இந்த நடைமுறையை அனுமதிப்பது குறித்து பேசினார். ஆனால், மத ரீதியாக இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே உடனடியாக கைவிடப்பட்டது. ஈரானில் தற்போது உள்துறை அமைச்சராக இருப்பவர் முஸ்தபா பவுர்முகமதி. எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுபவர். கடந்த மாத இறுதியில் ஈரான் நாட்டு "டிவி'யில் ஆற்றிய உரை யில், " தற்காலிக திருமணம் என்பது கடவுளின் கட்டளை. அதை நாம் தீவிரமாக ஆதரிக்க வேண்டும். திருமணம் செய்ய முடியாத நமது இளைஞர்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு தீர்வை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டார்.மதவாத நாடான ஈரானில், உள்துறை அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. ஆதரவாக சிலரும், எதிர்ப்பாக சிலரும் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இதனால், விபசாரம் தான் பெருகும் என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து. திருமணமானவர்களும் இந்த நடைமுறையை பின்பற்றி ஏராளமான பெண்களுடன் உறவு வைத்து கொள்வர். பணக்காரர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக அமைந்து விடும். இதனால் "குடும்பம்' என்ற அடிப்படை தன்மையை சிதைந்து விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments: