Thursday, June 28, 2007

பெரியகுளத்தில் சிக்கிய 3 நக்சல்கள்:பெரும் சதி திட்டம் அம்பலம்

நன்றி தட்ஸ்டமில்.காம்
ஜூன் 27, 2007

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். நக்சலைட் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து அவர்கள் தமிழ்நாட்டில் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை கரட்டு என்ற இடத்தில் வனப் பகுதியில் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாரிடம் விறகு பொறுக்கச் சென்றவர்கள் தெரிவித்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் கூறினர்.

இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கி சகிதம் அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர். பொதுமக்களும் திரண்டு வந்தனர்.

போலீஸாரையும், பொதுமக்களையும் பார்த்த அந்த நபர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர். ஆனால் போலீஸாரும், பொதுமக்களும் சுற்றி வளைத்ததில் 3 இளைஞர்கள் சிக்கினர். 6 பேர் தப்பி விட்டனர்.

சிக்கியவர்கள் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தபோது அங்கு சமையல் பாத்திரங்கள், ஜமுக்காளம் போன்றவை இருந்தன. அவர்களிடம் ஏராளமான துப்பாக்கிகளும் இருந்தன. அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதவிர தரைக்குள் நூற்றுக்கணக்கான டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்களில் ஒருவர் பெயர் வேல்முருகன். இவர் இ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர், மதுரை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இன்னொருவர் பழனிவேல். இவர் சேலம் மாவட்டம் சின்னூரைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் முத்துச் செல்வம். இவர் மதுரை, சமயநல்லூரைச் சேர்ந்தவர்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது, தர்மபுரியில் செயல்படும் மக்கள் போர் படை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே கொடைக்கானல் பகுதியில் ஒரு மாதமாக ஆயத பயிற்சி எடுத்துள்ளனர். இதையடுத்து போலீஸ் படை அவருடன் கொடைக்கானல் விரைந்தது.

அங்கு பண்ணைக்காடு கஸ்தூரிபாய்புரத்தில் உள்ள துரைராஜ் என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்து வரும் சுரேஷ் மற்றும் சேகர் என்பவரைப் பிடிக்க போலீஸார் சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் சிக்கவில்லை.

அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டபோது, நக்சலைட் அமைப்பின் துண்டுப் பிரசுரங்களும், லெனின் குறித்த புத்தகமும் கிடைத்தன. இவர்கள் இருவரும்தான் நக்சலைட் அமைப்புக்கு ஆள் சேர்த்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மக்கள் விடுதலை இயக்கத்தில் ஏராளமான மாணவர்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை பகுதியில் இவர்கள் ரகசியமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இப்போது ஆயுத பயிற்சிக்காக பெரியகுளம் பகுதிக்கு வந்துள்ளனர். அதற்காக ஏராளமான வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் பதுக்கி வைத்துள்ளனர்.

நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிலர் பெரியகுளத்தில் பிடிபட்டிருப்பது மதுரை, திண்டுக்கல் சரக போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி சரக டிஐஜி நந்தகோபாலன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அதேபோல சென்னையிலிருந்து கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமாரும் பெரியகுளம் வந்துள்ளார்.

பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரிக்கு அருகில்தான் இந்த 3 பேரும் பிடிபட்ட வனப்பகுதி உள்ளது. நேற்று இலங்கை விவசாய அமைச்சர் பெர்னாண்டோ இந்தக் கல்லூரிக்கு வந்தார். எனவே இவர்கள் இலங்கை அமைச்சரைக் கொல்லும் திட்டத்துடன் அங்கு பதுங்கியிருந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர நக்சல்களுடன் தொடர்பு

பிடிபட்ட 3 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இவர்கள் நக்சலைட் கும்பலுடன் இணைந்து தமிழகத்தில் நாசவேலைகளை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்தது.

இந்தக் கும்பலுக்கும், ஆந்திர நக்சலைட்டுகளுக்கும் ரகசிய தொடர்பும் உள்ளது. அங்கிருந்து பணம் மற்றும் ஆயுதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதுதவிர வேறு சில தீவிரவாத அமைப்புடனும் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலுக்கு தலைவனாக சென்னையை சேர்ந்த ராஜா என்பவர் செயல்பட்டுள்ளார். போலீஸார் மலையை சுற்றி வளைத்தபோது இவர் தப்பி விட்டார்.

தப்பிச் சென்ற ராஜா உள்ளிட்ட 6 பேரும் அவர்கள் மதுரை அல்லது சின்னமனூரில் பதுங்கியிருக்க கூடும் என போலீஸார் கருதுகின்றனர். கியூ பிரிவு போலீஸார் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். உளவுத்துறை போலீஸாரும் கண்காணித்து வருகின்றனர்.

நக்சலைட் கும்பல், தமிழ்நாட்டில் பல்வேறு நாசவேலை செய்ய திட்டமிட்டிருப்பது தெரிய வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் பெரியகுளம் குற்றவியல் நீதிபதி சிங்கராஜ் வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 11ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments: