
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு
`அல்-உம்மா' பாஷா உள்பட 4 பேர் விடுதலை
3 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை, ஜுன்.22-
சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த அல்-உம்மா பாஷா விடுதலை செய்யப்பட்டார். மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு
சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்ட்டாங் சாலையில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்க அலுவலகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் காசிநாதன், தேசிகன், ராமகிருஷ்ணரெட்டி, சேஷாத்திரி, ராஜேந்திரன், பிரேம்குமார், ராமசுப்பிரமணியன், பாலன், ரவீந்திரன், லலிதா, மோகனா ஆகிய 2 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
ராஜா, கார்த்திகேயன், முனுசாமி, லட்சுமி நாராயணன், பூவலிங்கம், கோபி, சண்முகம் ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு ஆரம்பகட்டத்தில் சேத்துப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டது. வழக்கின் முக்கியத்துவம் கருதி அதை சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியது. சி.பி.ஐ. (சிறப்பு குற்றப்பிரிவு) போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர்.
18 பேர் மீது வழக்கு பதிவு
இந்த வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். ரபீக் அகமது, சகாபுதீன், முக்தார் அகமது, அப்துல்ரஹீம், அபுபக்கர் சித்திக், எஸ்.ஏ.பாஷா, அகமது ஞானியார், அமினுதீன்செரீப், பழனி பாபா என்கிற அகமது அலி, முகமது மூசா முகைதீன், சையது முகமது புகாரி, முகமது அலி, முகமது அப்துல் அஸ்லாம், ஹைதர் அலி, இமாம் அலி, முகமது சுபேர், காஜா நிஜாமுதீன், முஸ்தாக் அகமது ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் (இ.பி.கோ.), தடா சட்டம், வெடிமருந்து சட்டம் மற்றும் வெடிபொருட்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
முஸ்தாக் அகமது தலைமறைவானதை தொடர்ந்து அவருக்கு எதிராக வழக்கு பிரிக்கப்பட்டது. மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரபீக் அகமது, சகாபுதீன், முக்தார் அகமது, அபுபக்கர் சித்திக், அகமது ஞானியார், அமினுதீன் செரீப், முகமது அப்துல் அஸ்லாம் ஆகிய 7 பேருக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழனிபாபா கொலை செய்யப்பட்டார். இமாம் அலியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
13 ஆண்டுகள் நடந்த வழக்கு
சென்னையில் உள்ள தடா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. நீதிபதி டி.ராமசாமி விசாரித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 431 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 224 பேர் கோர்ட்டில் சாட்சி அளித்தனர். எதிர்தரப்பில் 5 பேர் சாட்சி அளித்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 8.6.1994 அன்று தாக்கல் செய்யப்பட்டது. 21.12.1994 அன்று முதல் குற்றப் பதிவு நடந்தது.
7.8.1995 அன்று சாட்சி விசாரணை தொடங்கி 4.8.2004 அன்று முடிந்தது. எதிர்தரப்பு சாட்சி விசாரணை 6.10.2004 அன்று தொடங்கி 14.11.2005 அன்று முடிந்தது. 21.11.2005 அன்று இந்த வழக்கின் வக்கீல் விவாதம் தொடங்கி 9.3.2007 அன்று முடிந்தது. மொத்தத்தில் இந்த வழக்கு விசாரணை 1994-ம் ஆண்டு தொடங்கி 2007-ம் ஆண்டு வரை நடந்துள்ளது.
2 முறை தள்ளி வைப்பு
இந்த வழக்கில் 9.5.2007 அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி டி.ராமசாமி அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக கடந்த 11-ந் தேதிக்கு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 11-ந் தேதியும் இந்த வழக்கில் தீர்ëப்பு வழங்க முடியாமல் போய்விட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை 21-ந் தேதிக்கு (நேற்று) நீதிபதி தள்ளி வைத்தார்.
நேற்று காலை தீர்ப்புக்காக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹைதர் அலியை தடா கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, மதுரை சிறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு இடைக்காலமாக திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தார். நேற்று காலை 8 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு, அவரை சென்னைக்கு போலீசார் கொண்டு வந்தனர்.
505 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு
மழை பெய்வதால் அவர் சென்னையை அடைய காலதாமதம் ஏற்படக்கூடும் என்றும் நீதிபதியிடம் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதி டி.ராமசாமி, `சில நடைமுறை சிக்கல்களால் இன்று (நேற்று) காலையில் வழக்கின் தீர்ப்பு கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து இன்று (நேற்று) காலை 8 மணிக்கு புறப்பட்டு ஹைதர் அலியை போலீசார் அழைத்து வருகின்றனர். அவரை தடா கோர்ட்டுக்கு கொண்டு வருவதற்கு காலதாமதம் ஆகும். எனவே, மாலை 3 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பேன்' என்று கூறினார்.
பின்னர் மாலை 2.55 மணிக்கு நீதிபதி ராமசாமி தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்கள் வருகையை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு வழங்கத் தொடங்கினார். தீர்ப்பின் நகல் 505 பக்கங்களைக் கொண்டது. முதலில் முக்தார் அகமது, அல்-உம்மா எஸ்.ஏ.பாஷா, அமினுதீன் ஷெரீப், முகமது அப்துல் அஸ்லாம் ஆகியோரை தனியாக அழைத்தார்.
பாஷா விடுதலை
பாஷா உட்பட இந்த 4 பேர் மீதும் கூறப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து பாஷா உள்ளிட்டவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. அருகில் நின்றவர்கள் அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ரபீக் அகமதுவுக்கு இ.பி.கோ. 153(ஏ)-ன் படி (மத அடிப்படையில் பகைமையை வளர்த்து, ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் குற்றம்) 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சகாபுதீனுக்கு இ.பி.கோ. 201-ம் பிரிவின் அடிப்படையில் (சாட்சியத்தை மறைத்து குற்றவாளியை காப்பாற்றுவதற்கு பொய்த் தகவல் கூறுதல்) 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் சிறை தண்டனை
அப்துல் ரகீம், அகமது ஞானியார், மூசா முகைதீன், சையது முகமது புகாரி, முகமது அலி, முகமது சுபேர் ஆகிய 6 பேருக்கும் தடா சட்டம் 3(4)-ன் படி (குற்றவாளிகள் என்று தெரிந்தும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது) 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
அபுபக்கர் சித்திக், ஹைதர் அலி, காஜா நிஜாமுதீன் ஆகியோருக்கு இ.பி.கோ 120(பி) (சதித் திட்டம் தீட்டுதல்), 153(ஏ) (மத அடிப்படையில் பகைமை கொண்டு ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தல்), 201 (சாட்சிகளை மறைத்து குற்றவாளியை காப்பாற்றுவது), 302 (கொலை செய்தல்), 326 (கொடுங் காயங்கள் விளைவித்தல்), 324 (சிறு காயங்கள் ஏற்படுத்துதல்), 419 (ஆள் மாறாட்டம்), 436 (ஒரு இடத்தை தீ மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்தி அழித்தல்) மற்றும் வெடி மருந்துச் சட்டம், வெடி பொருட்கள் தடுப்புச் சட்டம் மற்றும் தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆயுள் தண்டனை
அதன்படி இந்த 3 பேருக்கும், இ.பி.கோ. 302 உட்பட சில பிரிவுகளில் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், சில பிரிவுகளில் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. அனைத்து தண்டனையையும் அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
(மொத்தத்தில், இந்த வழக்கில் 4 பேருக்கு விடுதலையும், ஒருவருக்கு 3 ஆண்டுகள் ஜெயில், 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை, 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது).
ஜெயிலில் இருந்து வெளியே வரலாம்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அபுபக்கர், சித்திக், ஹைதர் அலி தவிர மற்றவர்கள் தங்கள் தண்டனைக் காலத்தை விட அதிக நாட்கள் ஜெயிலில் இருந்துள்ளனர். தண்டனை காலத்தை கழித்துவிட நீதிபதி உத்தரவிட்டார். எனவே, அவர்களின் தண்டனை காலம் கழிக்கப்பட்டு விட்டால், அனைவருமே சிறையில் இருந்து வெளியே வருவார்கள். இந்த வழக்கு தவிர வேறு வழக்கில் சிக்கி இருந்தால் ஜாமீனிலோ அல்லது சிறையிலோ தொடர்ந்து இருப்பார்கள்.
இந்த வழக்கில் பாஷா விடுதலை செய்யப்பட்டாலும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அவர் விசாரணையை சந்தித்து வருகிறார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து பாஷா ஜெயிலில் இருப்பார்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் கீதா ராமசேஷன் ஆஜரானார். எதிர்த்தரப்பில் வக்கீல் சேவியர் பெலிக்ஸ் உட்பட சிலர் ஆஜரானார்கள்.
No comments:
Post a Comment